a K.Vijay Anandh review
அட பத்து மாதம் சுமந்து நாம் பெற்ற குழந்தை நம்முடன் இருக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, அதற்காக ஆதரவற்ற குழந்தையாக காப்பகத்தில் வளரவேண்டுமா? தத்தெடுத்து வளர்த்தவர்களே வளர்த்துக் கொள்ளட்டும் என்கிற முடிவு எடுக்கின்றாளே, அவளே தாய்.
அதுமட்டுமல்லாமல் இயற்கையாக சுரக்கும் தாய்ப்பாலை பலவந்தமாக தடுத்து நிறுத்தும் பெற்ற தாய், குழந்தையை பிரசவிக்காத நிலையிலும் செயற்கையாக தாய்ப்பாலை சுரக்கச் செய்யும் வளர்ப்புத் தாய். தாய்ப்பால் கொடுப்பவர்கள் தானே தாயாக இருக்க முடியும்’
முல்லை யரசி|, இன்றைய நவநாகரிக லிவிங் டுகதர் கலாச்சாரத்தில் சிக்கிக்கொண்ட ஒரு சராசரி ஏழை பெண்ணாக அற்புதமாக நடித்திருக்கிறார். ஐந்து முறை அபார்ஷன் ஆனதும் தெரியவில்லை, பத்து மாதம் சுமந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்ததையும் உணர முடியவில்லை, அவ்வளவு வறுமை அவ்வளவு இயலாமை, காதலித்துக் கொண்டிருப்பவனோ தன்னை கடைசி வரை கண் கலங்காமல் பார்த்துக் கொள்வான் என்கிற நம்பிக்கை இல்லாமை ஒரு பக்கம் என்று வாழ்க்கையைப் பற்றிய ஒரு மிரட்சியுடனேயே வாழும் ஷோபாவாக பிரமிக்க வைத்திருக்கிறார். குழந்தையை பிரசிவித்த பிறகு பசி பசி என்று வினோதினி வைத்தியநாதன் இடம் சாப்பாடு வாங்கி அடுத்த முறை அதற்கு உத்தரவாதம் இல்லையோ என்கிற அளவிற்கு வாய்க்குள் திணித்து சாப்பிடும் பொழுது நமக்கே கண்கலங்கி விடுகிறது.
அசோக் குமார் பாலகிருஷ்ணன், தன் பெயரின் அர்த்தமே தெரியாதவராக அல்லது தெரிந்தோ தெரியாமலோ தான் பெற்ற குழந்தையையே பணத்திற்கு தியாகம் செய்பவராக, ஒரு மாதிரியான ஒரு சராசரி இளைஞனாக சிறப்பாக நடித்திருக்கிறார். சொல்லாததும் உண்மை நிகழ்ச்சியில், தான் சினிமாவுக்காக கற்றுக் கொண்ட நடன வித்தையை காட்டும் இடம் அட்டகாசம். கிளாசிக்கலில் ஆரம்பித்து வெஸ்டர்ன் குத்து கலந்த கலந்த இசையில் அவர் போடும் ஆட்டம் ரசிக்க முடிகிறது.
சமுத்திரக்கனி – அபிராமி, இனிமேல் குழந்தை பிறக்காது என்கிற நிலையில் எப்படியாவது தத்தெடுத்து விட வேண்டும் என்கிற முயற்சியில் மாட்டிக் கொண்டு தவிக்கும் தவிப்பு நிஜமாக இருக்கிறது. கருவுறாமலே தாய்ப்பால் சுரக்க அவர்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தை, தமிழ் சினிமாவிற்கு புதியது.
பாவல், சரண்யா, மிஷ்கின், நரேன், அனுபமா குமார், வினோதினி வைத்தியநாதன் என்று ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்கள்.
எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை வைத்து அதிகமாக கலாய்க்கப்பட்டிருக்கிறாரோ அதே நிகழ்ச்சியை மையமாக வைத்து ஒரு சிறப்பான படமாக ஆர் யூ ஓகே பேபி ஐ இயக்கி இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
நான்கு சுவருக்குள், நீதிமன்றத்தில் ஒரு பெண் மீது வைக்கப்படும் அவதூறை கண்டிக்கிறார் நீதிபதி, ஆனால் சமூகத்தில், பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் அதைவிட பன்மடங்கு பெரிய அவதூறுகள் பிரபலமானவர்கள் மீது வைக்கப்படுகின்றது. தண்டிக்க இறைவன் இருக்கிறான் என்று நம்புவது தான் உண்மையான பகுத்தறிவு. ஆனால், துரதிஷ்டவசமாக இறைவனை நம்புவதே பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்று ஆகிவிட்டது, இங்கு.
ஒரு எளிமையான அதே நேரம் உணர்வு மிக்க கதை களத்தை எடுத்துக் கொண்டு, அதனை சிறப்பாக கையாண்டு இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
mysixer rating 4/5
அது சரி பிறந்த குழந்தைகள் அல்லது எதையும் ஆராய்ந்து அறிய முடியாத வயதில் இருக்கக்கூடிய குழந்தைகளை இதுபோன்ற வழக்குகளில் அவர்களை காப்பகத்தில் அடைப்பது என்ன நியாயம்? அவர்களது பார்வையில் அல்லது அவர்களுக்காக யோசித்து சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டாமா? வழக்கு நீதிமன்றத்திற்கு வந்துவிட்ட நிலையில், அதுவரை அந்த குழந்தைகளை யார் பராமரித்து வந்தார்களோ அவர்களிடமே சட்டம் காவல் மருத்துவம் ஆகிய துறைகளின் கண்காணிப்பில் வழக்கு முடியும் வரை சம்பந்தப்பட்ட குழந்தைகள் இருக்கலாமே! அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் காப்பகம் என்றாலே ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்துடனே காட்சிப்படுத்தப்படுவது எதற்காக? 1947 இல் லண்டன் கிறிஸ்தவர்களை விரட்டி இந்தியா சுதந்திர நாடாக பிரகடனப் படுத்திக் கொண்ட பின்பும், சமூக சேவைகள் காப்பகங்கள் அவர்கள் விட்டுச் சென்ற வழியிலேயே தொடர வேண்டுமா என்ன? இந்த மண்ணில் சேவை மனப்பான்மை இல்லையா?