800

இவரை ஏன் இந்திய வம்சாவளி என்று சொல்ல மாட்டேங்கிறோம் !

237

a K.Vijay Anandh review

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை, இந்திய வம்சாவளி என்கிறோம். அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிசை இந்திய வம்சாவளி என்கிறோம். இதோ எதிர்காலத்தில் அமெரிக்க அதிபராக வரும் வாய்ப்புள்ள விவேக் ராமசாமியை இந்திய வம்சாவழி என்கிறோம். ஆனாலும் அவர்களை போன்றே இரண்டு தலைமுறைக்கு முன்னால் இலங்கைக்குச் சென்ற இந்த தமிழனை மட்டும் ஏன் இதுவரை இந்திய வம்சாவளி என்று சொல்வதில்லை?

முருக பக்தையான வடிவுக்கரசியை அப்பத்தா அப்பத்தா என்று கூறும் அழகே அழகு, மலையக தமிழனாக இருந்து பிஸ்கட் ஃபேக்டரி நடத்தும் வேலராமூர்த்தியை அப்பா என்று அழைக்கும் விதம் அழகு. அட முத்தையா முரளிதரன் இந்திய வம்சாவளிதானுங்க.

அவர் 800 விக்கெட்டுகளை எடுத்து உலக சாதனை படைத்தது தான் இந்த உலகிற்கு தெரிகிறது. ஆனால் ஒரு போர் சூழலில் வளர்ந்து கிரிக்கெட் ஆர்வத்தால் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து பின் பௌலராக பள்ளிகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட்டில் ஜொலித்து அர்ஜுன ரணதுங்காவின் கண்ணில் பட்டு இலங்கை அணியில் இடம் பிடித்த ஒரே தமிழன் என்கிற பெருமையுடன் லண்டனுக்கு பயணித்தாலும், பந்து போடுவதற்கு அணியில் இடம் பிடித்தால் தானே முடியும்! பங்கு வீச, முதல் விக்கெட் எடுக்க முத்தையா முரளிதரன் படம் கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

அவரது முதல் சுற்று பயணம் கையில் வந்து கிடைக்காத பயணமாக மாறி அவரை ரணப்படுத்தி விடுகிறது. இலங்கை அணி டெஸ்ட் அந்தஸ்திற்கு தகுதி பெற்ற முதல் போட்டியில் முத்தையா முரளிதரனுக்கு வாய்ப்பு கிடைத்ததும் ஒரு சிறப்பான தருணம்.

அதன் பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு அணியில் தேர்வாகாமல் மீண்டும் இடம் பிடித்து மிக வேகமாக 500 விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். 500 விக்கெட்டை வீழ்த்திய பிறகு ஆஸ்திரேலியா அவர் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுகிறது. நிபுணர்களின் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட முத்தையா முரளிதரன் தனது பந்துவீச்சை மட்டுமல்ல தன்னைவிட அதிக கோணத்தை எடுத்துக் கொள்ளும் பந்துவீச்சாளர்களையும் காப்பாற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் புதிய சட்டத்தையே எழுதி  நடைமுறைப்படுத்துவதற்கு காரணமாகிறார்.

ஒரு போர்ச்சூழலில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பு கிடைத்த அந்த சில நொடிகளில் மிகவும் தைரியமாக போரை கைவிட்டு அமைதியான முறையில் தீர்வு காண முன் வரலாமே என்று கேட்டுக்கொள்ளும் முத்தையா முரளிதரன் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். முதலில் அடிப்பவனை நிறுத்தச் சொல்லுங்கள் என்று பிரபாகரன் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்றாலும், ஒரு விடை கிடைக்காமல் நடந்த 30 ஆண்டு கால யுத்தத்தில் இறந்த பல லட்சம் தமிழர்களையும் சில ஆயிரம் சிங்களவர்களையும் நினைத்துப் பார்க்கும் பொழுது முத்தையா முரளிதரனின் அந்த முன்னெடுப்பு சரியென்றே தோன்றியது.

இன்னும் 25 டெஸ்ட் மேட்ச்களில் விளையாடியிருந்தால் 1000 என்கிற யாராலும் தொட முடியாத இலக்கை அசால்டாக தொட்டிருப்பார் முத்தையா முரளிதரன். இளைஞர்களுக்கு இடம் கொடுக்கும் விதமாக சட்டென , மூன்று டெஸ்ட் மேட்ச் கொண்ட அந்தத் தொடரின் முதல் மேட்ச்சிலேயே ஓய்வு பெறுவது நெகிழ்ச்சியாக அமைந்திருந்தது.

மூத்த பத்திரிகை ஆசிரியராக நாசர் மற்றும் இளையவரான ஹரி கிருஷ்ணன் ஆகியோருக்கு இடையிலான உரையாடலாக முத்தையா முரளிதரன் வாழ்க்கையை விவரித்து இருக்கும் விதம் அருமை.

மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

சிங்களவர்கள் தமிழர்களை அடிக்க வரும் பொழுது தமிழனான அருள்தாஸ் நான் முஸ்லிம் என்று தப்பித்துக் கொள்வது கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.

இயக்குநர் MS ஸ்ரீபதி, இந்த படத்தை மிகவும் நேர்த்தியாகவும் உண்மையாகவும் இயக்கியிருக்கிறார்,  அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மொத்தத்தில் மிகச்சிறந்த ஒரு இந்திய வம்சாவழியை அல்லது மிகச் சிறந்த ஒரு இலங்கை நாட்டவரை அல்லது மிகச்சிறந்த ஒரு சாதனைத் தமிழனை …. இப்படி எல்லாம் அடையாளப்படுத்துவதை முத்தையா முரளிதரன் விரும்பவில்லை என்பதுதான் உண்மை. அப்படியானால் அவர் யார்? அவர் யார் என்று அவரே சொல்கிறார், கிரிக்கெட்டர்.

அருமை அதுதான் உண்மை அவர் ஒரு கிரிக்கெட்டர், சர்வதேச அளவில் எல்லைகள் கடந்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த கிரிக்கெட்டர்.

அந்த கிரிக்கெட்டரை கொண்டாடுவோம், குழந்தைகளுடன் சென்று 800 படத்தை பாருங்கள்.

mysixer rating 5/5