Parking

mysixer rating 4.5/5

218

a K.Vijay Anandh review

ராம்குமார் பாலகிருஷ்ணன், 30 வயதிற்குள்ளாக இருக்கும் இந்த இளம் இயக்குனருக்குள் இப்படி ஒரு முதிர்ந்த கதை கரு எப்படி உதிர்த்தது என்பது வியப்புதான். நாம் ஒவ்வொருவரும் குறிப்பாக நகர் புறங்களில் வசிக்கும் ஒவ்வொருவரும் அனுதினமும் அனுபவிக்கும் ஒரு பிரச்சனை தான், பார்க்கிங். அதனையே  மையக்கருவாக வைத்து, ரசிகர்களை ஆடாமல் அசையாமல் இரண்டு அரை மணி நேரத்திற்கு பார்க்கிங் செய்ய வைத்து விடுகிறார்.

ஹரிஷ் கல்யாண் – இந்துஜா இளம் தம்பதியர் , எம் எஸ் பாஸ்கர், ரமா ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன் ஒரு அழகான குடும்பம் இந்த இரண்டு குடும்பம், இவர்கள் குடியிருக்கும் இரண்டு வீடுகள், ஒரே ஒரு கார் பார்க்கிங், இரண்டு கார்கள், முன்னதாக ஒரு ஸ்ப்ளெண்டர்,  இவ்வளவுதான் முக்கிய கதாபாத்திரங்கள், இவர்களை வைத்து விறுவிறுப்பான இரண்டு மணி நேர சினிமாவை கொடுத்திருக்கிறார், ராம்குமார் பாலகிருஷ்ணன்.

ஹரிஷ் கல்யாண், இன்றைய தமிழ் சினிமாவில் அதிகம் விரும்பப்படும் இளம் நாயகன். அழகும் திறமையும் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பது அரிது. இரண்டையும் பலமுறை மெய்ப்பித்திருக்கிறார் ஹரிஷ் கல்யாண், இந்தப் படத்தில், ஒரு சராசரி சிந்தனை கொண்ட பக்கத்து வீட்டுக்காரராக, கோபமும் எரிச்சலும் கொண்ட ஒரு சராசரி குடும்பஸ்தனாக வாழ்ந்து காட்டுகிறார். கர்ப்பிணி மனைவி மீது காட்டும் கரிசனமும் உண்மை, சமரசம் இல்லாமல் பெருங்கோபத்துடன் எம்எஸ் பாஸ்கர் மீது காட்டும் பாய்ச்சலும் உண்மை.

எம் எஸ் பாஸ்கர், மாஸ் ஹீரோக்கள் நிறைந்த திரையில் ஒரு குணசித்திர வடிவமாக தனக்கென ஒரு தனி பாணி அமைப்பது சவாலான விஷயம். இந்த சவாலில் பல தடவைகளாக பல படங்களில் ஜெயித்திருக்கிறார் எம் எஸ் பாஸ்கர்,  இந்தப் படத்திலும், பார்க்கிங் பறிபோகுதே என்கிற எதார்த்தமான ஒரு கோபத்தில் அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் வில்லங்கமாக வளர்ந்து கொண்டே போகிறது, விஸ்வரூபம் எடுக்கும் அந்த வில்லங்கங்கள் எங்கே எப்படி முற்றுப்பெறுகிறது என்பது விறுவிறுப்பான திகில் படத்திற்கே உரிய ஒரு அனுபவம்.

தமிழ் சினிமாவில் இரண்டு நாயகர்கள் முட்டிக் கொள்வது என்பது அக்னி நட்சத்திரத்தில் பார்த்தது. கிட்டத்தட்ட அதைவிட சிறந்த ஒரு அனுபவமாக ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்எஸ் பாஸ்கர் முட்டிக்கொள்வது அமைந்திருக்கிறது. ஆம் இதிலும் இருவரும் நாயகர்களே.

ஹரிஷ் கல்யாணின் கர்ப்பிணி மனைவியாக வரும் இந்துஜா, சிக்கனமான அரசு ஊழியரின் மனைவி மகளாக வரும் ராமராஜந்திரா மற்றும் பிரார்த்தனா ஆகியோர் தங்கள் பங்கினை சிறப்பாக வழங்கி இருக்கிறார்கள்.

வீட்டிற்கு வெளியே வரும் கதாபாத்திரங்களில் எல் ஐ சி ஏஜென்ட் ஆக வரும் சுரேஷ், அந்த அயன் கடைக்காரர் உட்பட பலரும் சிறப்பாக தங்கள் பங்கினை வழங்கி இருக்கிறார்கள்.

சாம் சி எஸ் , விஷ்ணு எடவன் ஆகியோரது கதையோடு பயணப்படும் பாடல்கள் சாம் சிஎஸ்ஸின் இசையில் நன்றாக இருக்கின்றன.

மிகவும் குறைந்த கதை தளங்கள், ஆனால் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற சலிப்பு தட்டாத வகையில் வித்தியாசமான காட்சி கோணங்கள், ஒளிப்பதிவாளர் ஜிஜூ சன்னிக்கு பாராட்டுக்கள்.

நமது கோபங்களையும் எரிச்சல்களையும் காட்டுமிடம் அல்ல  பக்கத்து வீடு, மாறாக விட்டுக் கொடுத்தல், அனுசரித்தல் ஆகியவற்றை கொடுக்கும் இடமே பக்கத்து வீடு என்று கலாச்சாரம் மாறிவிட்டால் எல்லாம் சுகமே, சுபமே!