மதிமாறன்

mysixer rating 3.5/5

235

a K.Vijay Anandh review

பெண்களை கற்பழித்து, கற்பழித்த தடயங்கள் தெரியாமலிருக்கு பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றி கொடூரமாக கொல்லும் சைக்கோ கொலையாளியின் கதாபாத்திர பெயர் ஹனுமன். இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் மற்றும் தயாரிப்பாளர்கள் ஜி எஸ் பிரதர்ஸுக்கு கடுமையான கண்டனங்கள். நீங்கள் தெரியாமல் தான் இப்படி பெயர் வைத்தீர்களா..? அல்லது திட்டமிட்டு அப்பெயரை இழிவு படுத்தும் நோக்கத்துடன் வைத்தீர்களா..?

மற்றபடி, உடற்குறைபாடு ஒரு குறையே அல்ல, அறிவு வளர்ச்சி தான் முக்கியம் என்கிற ஒரு வரிக்கதையை விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து படமாக்கிய விதத்திற்கு மதிமாறன் குழுவினருக்கு பாராட்டுகள்.

மதிமாறனாக, வெங்கட் செங்குட்டுவன், அயலானுக்கு உடல் கொடுத்தவர் அவரது அசல் தோற்றத்துடன் நடித்து அயலானுக்கு முன்னால் வெளிவந்திருக்கும் படம் மதிமாறன். தனது இரட்டையான இவானாவை தேடி சென்னைக்கு வரும் வெங்கட் செங்குட்டுவன், தனது சிறுவயது கனவான தபால் காரர் வேலை கிடைத்த நிலையிலும், ஒரு தொடர் கொலை வழக்கில் தானாக முன்வந்து தனது காவல்துறை காதலி  ஆராத்யாவை துணைக்கு வைத்து கொண்டு பல சிரமங்களுக்கிடையில் உண்மையை கண்டு பிடிக்கிறார். அவரது சகோதரியாக வரும் இவானா, காதலியாக வரும் ஆராத்யா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வெங்கட் செங்குட்டுவன் தமிழ் சினிமா, இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருவார்.

முக்கிய கொலையாளியை கண்டறிந்து, அவர் கரனெட் கம்பியை கடித்து தானே தற்கொலை கொண்ட நிலையில், அதற்கு முன் கொடுக்கும் இன்னொருத்தனும் இருக்கான் என்கிற தகவலுடன் படத்தை முடித்து அடுத்த பாகத்திற்கு சென்றிருக்கலாம், அதை விடுத்து அவரது சகோதரியின் கணவனே அந்த கொலைகாரன் என்று காட்டி அவரையும் முடித்து வைத்திருப்பது வழக்கமான ஒரு கிளைமாக்ஸ் காட்சியாக அமைந்துவிட்டது.

எம் எஸ் பாஸ்கரை பற்றி சிறப்பாக குறிப்பிடவேண்டும், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி சிறப்பாக நடித்து விடுகிறார். அவர் இருந்தாலே ஒரு  நீண்ட வசனக்காட்சியுடன் படத்தின் மிகவும் நீளமான காட்சியொன்றை காட்சிப்படுத்திவிடலாம். மகள் ஓடிப்போன நிலையில், கண்ணில் நீர் மல்க அவர் பேசும் அந்த காட்சி அற்புதம்.

வெங்கட் செங்குட்டுவன்  மற்றும் இவானாவின் சிறு வயது இரட்டையர்களாக நிஜமான அக்கா தம்பிகளான சிவராம் மற்றும் நீலாம்பரி அட்டகாசமாக பொருந்திபோயிருக்கிறார்கள்.  சிறிது நேரமே வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

அறிவுதான் அழகு, அறிவுதான் வளர்ச்சி, அறிவு தான் பலம் என்கிற கருத்தை விதைத்த விதத்தில் மதிமாறன் படம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று,  முதல்பாராவில் குறிப்பிட்ட விஷயத்தை நீக்கிப்பார்த்தால்.