a K.Vijay Anandh review
2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்து சிலுவையில் அறையப்பட்டதாக சொல்லப்படும் ஏசு, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டச்சொன்னதாக சொல்லுவார்கள். ஆனால், 2022 காலகட்ட ஜீன்ஸ் பேண்ட் – ஷூ அணிந்து கொண்டு நவீன ஏசு போல காட்சி தரும் பிரெடி என்கிற திரு நாமத்தை கொண்ட ஜித்தன் ரமேஷ், தனது பெற்றோர்களை கொன்றவர்களை 25 வருடங்களாக காத்திருந்து ஒவ்வொருவராக பழிவாங்குகிறார்.
பொறுப்பான நேர்மையான பொதுப்பணி துறை பொறியாளர் ஜான் ஆக வரும் ஜித்தன் ரமேஷாகட்டும் கிட்டத்தட்ட காட்டுவாசியை போல மிருகத்தனமாக வரும் பிரெடி ஜித்தன் ரமேஷ் ஆகட்டும் அந்த கதாபாத்திர வேற்றுமைக்குள் அழகாக பொருந்தி போகிறார். ஒப்பனை மற்றும் முகபாவனைகள், உடல்மொழிகளில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ரூட் நம்பர் 17 ஜித்தன் ரமேஷை இன்னும் அதிக தூரத்திற்கு கொண்டு சென்றிருக்கும்.
காட்டுக்குள் ஜித்தன் ரமேஷிடம் மாட்டிக்கொள்ளும் காதல் ஜோடி அஞ்சு தாண்டியா மற்றும் அகில் பிரபாகர் இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். இருந்தாலும் அஞ்சனாவாக வரும் அஞ்சு தாண்டியா, ஒரு படி மேலே சென்று கிடைக்கும் ஒவ்வொரு நொடியையும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் காட்சிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் சிறப்பாக நடித்திருக்கிறார்.
கேப்டன் விஜயகாந்திற்கு பிறகு காக்கிசட்டை கச்சிதமாக பொருந்தியிருக்கும் நடிகர் மதன் குமார் என்றால் மிகையல்ல, சாதாரணமான கான்ஸ்டபிளாக வந்து, தினமலர் செய்தி உதவியுடன் அட்டகாசமாக துப்புதுலக்கி, உண்மையை கண்டுபிடிக்க உதவுகிறார்.
தயாரிப்பாளர் டாக்டர் அமர் ராமச்சந்திரன் ஒரு சாயலுக்கு பஹத் பாசில் போல இருக்கிறார், தனக்கு கொடுக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தும் இருக்கிறார்.
ஒரு கொலை அல்லது ஒரு விபத்து அதை மட்டுமே வைத்து கொண்டு, அந்த புள்ளியில் இருந்து ஆரம்பித்து விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து ரசிகர்களை இரண்டு மணி நேரம் கட்டிப்போடும் வித்தையை மலையாள படைப்பாளிகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அது மிகையாகாது. பாதி மலையாளியாகிப்போன தமிழரான அபிலாஷ் ஜி தேவன், அதனை சிறப்பாக செய்திருக்கிறார்.
ரூட் நம்பர் 17 ல் குடும்பத்துடன் பயணிக்க தாராளமாக டிக்கெட் எடுக்கலாம், அட்வான்ஸ் புக்கிங்கும் செய்யலாம்.