a K.Vijay Anandh review
ஊர் திருவிழாவில் பரம்பரை பொக்கிஷமான கிரீடத்தை தூக்கி காட்டும் அரசு குலத்து பெண்ணை தூக்கிச் செல்லும் துரையாக யோகி பாபு நடித்திருக்கிறார்.
அரச வம்சத்தில் மூத்த மகனான மாரிமுத்து மகள் இனியாவை திருவிழாவிற்கு சினிமா படம் ஓட்ட வந்த யோகி பாபு காதலிப்பதும், அதற்கு மேலும் தாங்க முடியாது என்கிற நிலையில் அன்று இரவே யோகி பாபுவுடன் இனியா ஓட்டம் எடுப்பதும் படத்தின் விறுவிறு ஆரம்பம்.
கிட்டத்தட்ட இடைவேளை வரை, முற்றிலும் வேறு வேறு களங்களில் கதை நகருகிறது.திருடுவதில் மாஸ்டர் மொட்டை ராஜேந்திரன், அவரிடம் திருட்டு கற்றுக் கொள்ள சேரும் மகேஷ் மற்றும் பால சரவணன் ஏற்கனவே அங்கே பாடம் படித்துக் கொண்டிருக்கும் சென்ராயன் – இந்த மூவரும் இணைந்து ஒரு கிராமத்திற்கு கிரீடத்தை திருடுவதற்கு பயணப்படுகிறார்கள்.
பயங்கர முயற்சி செய்து திருடும் கிரீடம் தரையில் விழுந்து நொறுங்க, காரண காரியங்கள் பிளாஷ்பேக் காட்சிகளாக விரிய ஆரம்பிப்பது சுவராஸ்யம்.
மிகவும் ஆழமான அந்த கிணறு, அது ஒரு தானியக்கிடங்கு, அதற்குள் நுழைவதற்கு ஊர் எல்லையில் வீற்றிருக்கும் கருப்பசாமி கோயில் வழியாக சுரங்கப்பாதை என்று அழகான ஒரு காட்சியை விவரித்து இருக்கிறார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத்.
நம்ம ஊரில் குல தெய்வங்கள் கருப்பசாமி கோயில்கள் பாழடைந்த கோயில் மண்டபங்கள் இதுபோன்று பாழடைந்த கிணறுகள் என்று ஏராளம் இருக்கின்றனவே! இந்த படம் பார்த்த பிறகு அவற்றையெல்லாம் முறையாக ஆராய்ச்சி செய்வதற்கு மனம் விரும்பலாம்.
நம்பிக்கைகள் ஒன்றாக இருக்கும் பொழுது நாம் எல்லோரும் ஒன்றுதானே என்பதாக படத்தை முடிக்கும் விதம் அருமை.
தூக்குதுரை, தூக்கம் வராமல் பார்த்து ரசிக்க வைக்கும் துரை.