a K.Vijay Anandh review
வேண்டா வெறுப்பா குழந்தை பெற்றுக் கொண்டு அதற்கு காண்டாமிருகம் என்று பெயர் வைத்த கதையாக என்கிற சொல்லாடல் நம்மிடையே உண்டு. அதைப்போல அடித்து பிடித்து காதலித்து கல்யாணம் செய்து கொள்வதை விட கண்ணியமாக பிரிந்து விடுவதே மேல் அதுவே காதல் தாண்டி அவர்கள் வாழ்க்கையில் ஜெயிப்பதற்கான கனவுகளை எட்டிப் பிடிக்க ஒரே வழி என்று ஒரு அழகான வேதத்தை கொடுத்து இருக்கிறார் இந்த வியாஸ்.
இந்த வேதத்தின் மூலம் இன்னொரு சொல்லாடலும் வழக்கத்திற்கு வரலாம். வேண்டா வெறுப்பாக காண்டாமிருகத்துடன் குடித்தனம் நடத்துவதற்கு பதில் எஞ்சி இருக்கும் கொஞ்ச நாட்களாவது நிம்மதியாக கழிந்து விடட்டும் என்று ரிட்டயர்டு ஆகும் வயதிலும் சட்டப்படி விவாகரத்துக்கு விண்ணப்பிப்பது ஆகட்டும், எளிய மனிதர்களின் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை சூழல்களை மிகவும் எதார்த்தமாக உண்மையாக அலசி இருக்கிறது இந்த லவ்வர்.
மணிகண்டன் ஏற்கனவே தமிழ் துறையில் கிடைத்த விட்ட ஒரு முத்து. சில கதாபாத்திரங்களில் இவரை தவிர வேறு யாரையும் ரசிகர்களாலேயே பொருத்திப் பார்க்க இயலாத போது கதை எழுதும் கதாசிரியர்களால் அல்லது இயக்குனர்களால் எப்படி ரிஸ்க் எடுத்துவிட முடியும் ? இந்த கதைக்கு இவர் தான் என்று கதை எழுதும் பொழுதே முடிவு செய்து ஐந்து வருடம் காத்திருந்து அவரை வைத்தே லவ்வர் படத்தை எடுத்திருப்பது சரியான பலனையே கொடுத்திருக்கிறது. மணிகண்டன் , தனக்கு முந்தைய எந்த நடிகர்களின் சாயலும் இல்லாமல் அவருக்கென்று ஒரு தனி அடையாளத்துடன் ஒவ்வொரு படத்திலும் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். டென்ஷனான தருணங்களில் அவர் சட்டென்று சிகரெட்டை பற்ற வைத்துக் கொள்ளும் மேனரிசம் அவரது ரசிகர்களிடையே அல்லது படம் பார்க்கும் பொதுவான ரசிகர்களிடையே தொற்றிக் கொள்ளும் அபாயமும் இருக்கிறது. அந்த அளவிற்கு கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் அந்த மேனரிசம் ஒரு மேஜிக் போல மணிகண்டன் உடன் தொடர்ந்து வருகிறது. அதனைக் குறைத்துக் கொண்டு டென்ஷன் தருணங்களில் காட்டுவதற்கு மாற்று வழிகளை மாற்று நடிப்புகளை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டால் அதிக ஆண்டுகள் வெற்றிகரமான நடிகராக வலம் வர முடியும்.
ஸ்ரீ கௌரி பிரியா, தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ள இன்னொரு முத்து எனலாம். காதலனால் காட்சிக்கு காட்சி அவருக்கு கண்ணீர் தான் எனும் நிலையை காட்சிப்படுத்திய விதத்தில் அந்த சோகத்திற்குள் ரசிகர்களையும் சேர்த்துக் கொள்கிறார். காதல் சறுக்கினாலும், தனக்குப் பிடித்தமான தண்ணீர் சறுக்கலில் வெற்றி பெற்று விடுகிறார்.
பொதுவாக காதலர்களுக்கு இடையே, புரிதலில் தவறுகள் ஏற்படும் போது இடையில் புகுந்து சிந்து பாடும் நண்பனாக தான் இன்னொரு அழகான கதாபாத்திரத்தை வடிவமைத்து இருப்பார்கள். ஆனால் மதன் கதாபாத்திரத்தில் வரும் கண்ணா ரவி, கண்ணியத்தின் உச்சமாக படம் முழுவதும் வந்து சிறப்பான ஒரு அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.
அவர்களுடன் வரும் மற்ற நவநாகரீக நண்பர்களும், சுய ஒழுக்கம் தவறி விடாது அவரவர் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிப்பது, இன்றைய தலைமுறைக்கு ஒரு பாடமாகவும் அமைந்திருக்கிறது.
அதே நேரம், எதார்த்தமாக நடக்கும் சம்பவங்களை தான் படம் ஆக்கி இருக்கிறார் என்றாலும், நண்பர்களுடன் சேர்ந்து தனிமையாக இருக்கும் தருணங்களில் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி சிந்தையை செயலிழக்கச் செய்யும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை தவிர்ப்பது நலம் என்பதை காட்சிகள் வாயிலாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மணிகண்டனின் அப்பாவாக வரும் சரவணன் அம்மாவாக வருபவர் சிறப்பான தேர்வு, சிறப்பாக நடித்தும் இருக்கிறார்கள். மணிகண்டனின் சித்தியை கடைசிவரை காட்சிப்படுத்தாதது ஒரு புத்திசாலித்தனமான அணுகுமுறை.
தொழில்நுட்ப ரீதியாக ஷான் ரேல்டனின் இசையும் , ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகவும் பலமாக அமைந்திருக்கின்றது.
இந்தத் திரைப்படம் விவாதத்திற்கு உட்பட்ட திரைப்படமாக இன்றைய இளைஞர்கள் குறிப்பாக டீன் ஏஜ் தொடும் நமது சிறார்களுக்கு அமைந்திருப்பது உண்மையில் வரவேற்கத்தக்கது. தேவையே இல்லாமல் இன்னொருவரின் தேவையே இல்லாத எமோஷன்களை தாங்கிக் கொள்வதற்கு நாம் இடிதாங்கி அல்ல. ஒவ்வொருவருக்கும் நிம்மதியாக சந்தோஷமாக சுதந்திரமாக வாழ்வதற்கு தான் இந்த பிறவி என்பதை உணர்ந்து கொண்டால், நமது பயணத்தில் இருக்கும் தடை கற்களை தானாக கடந்து சென்றுவிடலாம்.
இயக்குனர் பிரபு ராம் வியாஸ், நம்பிக்கை தரும் இயக்குனராக ரசிகர்களிடம் மட்டுமல்ல தயாரிப்பாளர்களிடமும் பெயர் வாங்கி இருக்கிறார்.