a K.Vijay Anandh review
சூப்பர் ஸ்டாருக்கு வழக்கமான பாணியில் பட்டையை கிளப்பும் ஒரு அறிமுக பாடல் மற்றும் கூடுதலாக இன்னும் இரண்டு காட்சிகள் வைத்திருந்தால் போதும் இந்த படம் பாட்ஷா 2 ஆகியிருக்கும். அந்த அளவிற்கு சிறப்பு தோற்றத்தில் குறைவாகவே வந்தாலும் படத்தில் இவர்தான் நிறை எனும் அளவிற்கு காந்தமாக கவர்ந்திழுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
நமது இதிகாச ஸ்ரீராமனை போல ஒரு சொல் – சொன்னால் சொன்னது தான், ஒரு இல் – இஸ்லாமியராக இருந்தாலும் ஒரே தாரம் தான், ஒரு வில் – இவருக்கும் ஒரே will தான் – தனது மகனை எப்படியாவது தேசத்திற்கு கிரிக்கெட் விளையாட வைத்து விட வேண்டும் என்கிற ஒரே ஒரு will தான் – என்று வாழ்ந்து கொண்டிருக்கும் மொய்தீன் அலி பாத்திரத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
பேட்டுடன் புகைப்படத்தில் இருக்கும் தனது மகனுக்கு நிஜமாக பந்துகளை வீசுவது ஆகட்டும், தனது மகன் ரஞ்சி டிராபிக்கு தேர்வாகி இருக்கிறான் என்பது அறிந்து குழந்தையாக குதூகலிக்கும் இடம் ஆகட்டும், தனது மகனை விட அதிகமாக கண்ட கனவு நொறுங்கிப் போகும் இடத்தில் சுக்கு நூறாக தானும் நொறுங்கி போவதாகட்டும் இப்படி காட்சிக்கு காட்சி மனிதர் வசீகரித்திருக்கிறார்.
இந்திய தேசப்பற்றுள்ள பெரும்பாலான இந்திய இஸ்லாமியர்களை பெருமைப்படுத்தியிருக்கிறார் , இந்த மொய்தின் அலி.
மதம், கிரிக்கெட், அரசியல் இன்று மூன்று புள்ளிகளில் லால் சலாம் என்கிற கோலத்தை அழகாக போட்டிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். திரைக்கதை அமைக்கும் பொழுது மதம் என்பதை சைலன்ட் மோடில் போட்டுவிட்டு, அரசியல் மற்றும் வியாபார சண்டை என்பதற்கு கொஞ்சம் வீரியம் கொடுத்து நிஜமாகவே சர்ச்சைக்கு உள்ளாகி இருக்க கூடும் என்கிற இந்த படத்தை சமரசத்திற்கு காரணமான படமாக மாற்றி இருக்கும் விதத்தில் அவரை பாராட்டலாம்.
1992 இல் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு லால் சலாம் படம் கதையாக விரிந்தாலும், அந்த சம்பவத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டு விட்ட 2024 இல் வெளியாகி இருப்பது ஒரு எதிர்பாராத நிகழ்வு.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி நிறைய எழுதி ஆகிவிட்டது அப்படியானால் மற்ற நடிகர்கள் ?
உண்மையில் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களான விஷ்ணு விஷால், விக்ராந்த், விவேக பிரசன்னா அனுபவ நடிகர்கள் செந்தில், தம்பி ராமையா என்று அனைத்து நடிகர்களுக்கும் அவரவர்கள் திறமையினை முழுமையாக வெளிப்படுத்தும் அளவிற்கு காட்சிகள் அமைத்து படத்தினை இயக்கி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
வீட்டுக்குள்ளும் சேர்த்துக் கொள்ளப்படாமல் ஊருக்குள்ளும் சேர்த்துக் கொள்ளப்படாமல் தவிக்கும் விஷ்ணு விஷால் தடைகளை தகர்த்து ஊரையும் வீட்டையும் ஒருசேர பெருமைப்படுத்தும் விதத்தில் ஒரு கனமான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தனக்கு அப்பாவாக நடிப்பவர் அகில உலகம் போற்றும் சூப்பர் ஸ்டாராக இருந்து விட்டுப் போகட்டும் சம்சுதீன் கதாபாத்திரத்திற்கு நான் நியாயம் கற்பிக்காமல் விடப்போவதில்லை என்பதாக வரிந்து கட்டிக் கொண்டு நடித்திருக்கிறார் விக்ராந்த்.
செந்தில் ஊர் மக்கள் கொண்டாடும் கோயில் குருக்களாக மட்டுமல்ல ஊருக்காக சாமியிடம் வேண்டிக் கொள்ளும் குருக்களாக வந்து ரசிகர்கள் மனதில் குடி புகுந்து விடுகிறார். பெற்ற மகனையும் பேரக்குழந்தைகளையும் கொஞ்சம் மகிழ கிடைக்கும், அந்த இரண்டு நாட்களுக்காக வருடம் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ்பவர், இனி அந்த மகிழ்ச்சி கிடைக்காது என்கிற நிலையில் கண்மூடிக் கொள்ளும் காட்சி கலங்க வைத்திருக்கிறது.
தம்பி ராமையா , ஊர் தலைவராக தன் பங்கிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார். பொதுநலம் பெரிதென்று தன் சொந்த மகனையே தள்ளி வைக்கும் காட்சிகளில் இருந்து ஒவ்வொரு காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
விவேக் பிரசன்னா தனது மாமா நந்தகோபாலுடன் சேர்ந்து சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக சதி செய்யும் காட்சிகள் இன்றைய தமிழக அரசியல்வாதிகளின் கோர முகத்தை கண் முன் கொண்டு வந்திருக்கின்றன.
விஷ்ணு விஷாலின் அம்மாவாக வரும் ஜீவிதா, விக்ராந்தின் அம்மாவாக வரும் நிரோஷா, விஷ்ணு விஷாலின் ஜோடியாக வரும் அனந்திகா ஆகியோரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
நிஜமான கிரிக்கெட் கோச் ஆகவே வந்திருக்கும் கபில்தேவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படம் லைவாக நகர்வது போன்ற பிரமையை ஏற்படுத்தி இருக்கின்றன.
விளையாடி ஜெயித்து சம்பாதித்து கிராமத்துக் கோயிலுக்கு தேர் செய்வது என்பது ஒரு அழகான கற்பனை, காட்சி அமைப்பு.
அந்த கிராமத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பிரச்சனை வரும் பொழுது விஷ்ணு விஷால் உள்ளிட்ட இளைஞர்களுக்கு ஆதரவாக இருக்கும் கதாபாத்திரத்தை மைக்கேல் என்கிற கிறிஸ்தவ கதாபாத்திரமாக வடிவமைத்து மும்மத நல்லிணக்கத்திற்கு விதை தூவ முயற்சித்திருக்கிறார்கள்.
இந்துவாகப் பிறந்தாலும் அரசியல் பிழைப்பதற்காக, சிறுபான்மை காவலன் வேடம் பூண்டு அவர்களுக்கும் விசுவாசம் இல்லாமல் தான் சார்ந்த இந்து மதத்திற்கும் விசுவாசம் இல்லாமல் சந்தர்ப்பவாத அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர்களின் பிரதிநிதியாக விவேக் பிரசன்னாவை காட்சிப்படுத்திய விதத்திலும், ஹிந்துக்களின் சடங்குகள் சம்பிரதாயங்கள் தங்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று ஆட்சேபனை தெரிவிக்கும் மற்றும் இங்கிருந்து போனா உங்களை எல்லாம் கொன்னு போட்டுட்டு தாண்டா போவோம் என்று தங்களது மிருகத்தனத்தை வெளிப்படுத்தும் ஒரு சில இஸ்லாமியர்களையும் அடையாளப்படுத்திய விதத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் துணிச்சல் பாராட்டுக்குரியது. பாயும்புலிக்குப் பிறந்தது பாயும் புலி தானே, ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தால் என்ன!!!
ஏ ஆர் ரகுமானின் இசையில் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்திருக்கின்றன.
30 வருடங்களுக்கு முன் நடந்த கதையாக கிரிக்கெட் விளையாட்டும் களத்தில் ஏற்படும் மோதல் மத மோதலாக வெடித்து அந்த மக்களின் அமைதி குலைந்து பின்பு சுபமாக முடிவது போல இந்த படம் அமைந்திருந்தாலும், சமகாலத்தில் சமூக வலைத்தள களத்தில் நடந்து கொண்டிருக்கும் பதிவு மற்றும் அதற்கான கருத்து பரிமாற்ற மோதலினால் இன்றளவும் மதரீதியாக மக்கள் பிளவு பட்டு கொண்டிருப்பதையும், சில தீய சக்திகள் தங்களது சுய ஆதாயங்களுக்காக மக்களை தொடர்ந்து பிளவு படுத்தி வைத்திருக்கும் காட்சிகளை ஒப்புமைப்படுத்தி அதிலிருந்து காணாமல் போய்க்கொண்டிருக்கும் நல்லிணக்கங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற எச்சரிக்கை மணியாக லால் சலாம் வெளியாகி இருப்பதாகவே பார்க்க முடிகிறது.
லால் சலாமிற்கு, ஒரு ராயல் சல்யூட்.