ரணம்

mysixer rating 3.5/5

272

a K.Vijay Anandh review

திரைப்படத்துறையில் உதவி இயக்குனராக இருந்து கதைகள் எழுதி இயக்குனராக ஆக வேண்டியவர் ஒரு படப்பிடிப்பில் உடன் பணியாற்றிய உதவி இயக்குனரை காதலித்து கரம் பிடிக்கிறார். அந்த வாழ்க்கை நீடிக்காத நிலையில் வாழ்க்கையை வெறுத்து குடிக்கு அடிமையானாலும் படைப்பாற்றல் எனும் மூலிகை வைத்து காவல் நிலையங்களுக்கு க்ரைம் ஸ்டோரி எழுதி கொடுப்பது சிதிலமடைந்த உடல்களின் உண்மையான தோற்றத்தை வரைந்து கொடுப்பது போன்ற பணிகளை செய்து கொண்டிருக்கிறார் வைபவ். நிறைய காதல் படங்களுக்கு படப்பிடிப்புகள் நடக்கும் ஆனால் படப்பிடிப்புகளின் நடுவே நடக்கும் இந்த காதல் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும். அப்படி வைபவின் காதல் சிறிது நேரமே வந்தாலும் சுவராசியத்தை கொடுக்கிறது.

இதற்கு நடுவே அடுத்தடுத்து காணாமல் போகும் பிணங்கள் காவல் துறைக்கு பெரிய தலைவலியாக மாற தான்யா ஹோப்பின் அதிரடி துப்பு துலக்குதல்களுக்கு பக்கபலமாக நின்று உண்மையை கண்டுபிடிக்கிறார் வைபவ்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் சொன்னது போல பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படமாக ரணம் வெளியாகியிருக்கிறது. என்னதான் வைபவ் கதாநாயகன் என்றாலும், காவல்துறை அதிகாரியாக தன்யா ஹோப், நினைத்துக் கூட பார்க்க முடியாத சவாலான ஒரு கதாபாத்திரத்தில் நந்திதா மற்றும் படம் முழுவதும் முக்கிய கதாபாத்திரங்களில் பெண்கள் நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள்  என்பதை பார்க்கும் பொழுது நிஜமாகவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் படத்தில் வழக்கத்திற்கு மாறான வைபவ் ரசிகர்களுக்கு நிச்சயம் புது விருந்து படைத்திருக்கிறார். நந்திதா கதாபாத்திரமே இந்த திரைக்கதையின் மையப்புள்ளி. அவர் நல்லவரா கெட்டவரா அல்லது கெட்டவர்களை வேட்டையாடும் நல்லவரா என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். தன்யா ஹோப், பத்மன் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

தலைப்பு ரணம் ஆக இருந்தாலும், கொடூர புத்தி கொண்டவர்களால் அப்பாவிகளின் வாழ்க்கை எவ்வளவு ரணப்படுகிறது, அட அவர்களின் பிணங்கள் கூட அந்த கொடூர புத்தி கொண்டவர்களால் எவ்வளவு ரணமாகிறது என்பதனை மிகவும் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஷெரிஃப் .

தொழில்நுட்ப ரீதியாக ஆரல் குரோலி யின் இசை,  பாலாஜி கே ராஜாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு வந்து சேர்த்து இருக்கின்றன.

ரணம், நிச்சயமாக ஒரு வித்தியாசமான கதைக்களம்.