வித்தைக்காரன்

mysixer rating 3/5

58

a K.Vijay Anandh review

சதீஷ், இவர் ஒரு நகர்ப்புற நகைச்சுவை நடிகனாக அறிமுகமாகி அசுர வேகத்தில் நாயகனாக நடிக்க ஆரம்பித்து இதோ மிக குறுகிய காலத்தில் இரட்டை வேடம் ஏற்று நடித்து வெளிவந்திருக்கும் படம் வித்தைக்காரன். நிஜமாகவே இவர் மிகவும் அதிர்ஷ்டக்காரன் என்றே சொல்ல வேண்டும், தயாரிப்பாளர்கள் காற்று உள்ள பொழுதே சதீஷை வைத்து படங்கள் எடுத்து கல்லா கட்டினால் அவர்களும் வித்தைக்காரர்களே.

அதிரடியான வெற்றி அப்பாவியான சக்தி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களிலும் சதீஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். பழிவாங்கும் கதை தான், சிறுவயதில் தந்தையை கொன்றவர்களை தனது புத்திசாதுரியத்தினால், 20 வருடங்கள் காத்திருந்து கச்சிதமாக பழி வாங்குகிறார் சதீஷ்.

அவருக்கு ஒரு அறிமுக பாடல், ஆட வருகிறது நன்றாக ஆடியும் விடுகிறார். சண்டைக் காட்சிகள் வேண்டாம் என்று தவிர்த்து விட்டாரோ என்னவோ. மதுசூதனன், ஆனந்த் ராஜ் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகிய மூன்று வில்லன்களையும் தனது புத்தி கூர்மையால் ஒரே இடத்தில் வரவழைத்து அரசிடம் ஒப்படைத்து விடுகிறார். உயிருக்கு உயிராக காதலித்தவர்களையே பிரேக்கப் என்று வந்துவிட்டால் பழிவாங்க துடிக்கும் இந்த காலகட்டத்தில்,  ஒருதலையாக காதலித்தவருக்கு அவர் இன்னொருத்தனை கரம் பிடித்த நிலையிலும் கை கொடுக்கத் துடிக்கிறார் சதீஷ், இயக்குனர் வெங்கி சிந்தனையில் உதித்திருக்கும் இந்த காட்சி அமைப்பு மிகவும் வசீகரிக்கத்தக்க ஒன்று, அது சதீஷ் க்கு கச்சிதமாக பொருந்தியும் இருக்கிறது.

மூன்று வில்லன்களில். மதுசூதனன் கொஞ்சம் சீரியஸாக வந்து பயமுறுத்த முயன்றாலும் கூடவே இருந்து சாம்ஸ் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனந்தராஜ் வழக்கம் போல காட்சிக்கு காட்சி காமெடியில் கலக்கி இருக்கிறார். சுப்ரமணியம் சிவா ஒரு சீரியஸ் காமெடி வில்லத்தனத்திற்கு முயன்று பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார்.

இரண்டு நாயகிகளுக்கும் கொஞ்ச நேரமே வாய்ப்பு என்றாலும் கச்சிதமாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்க்கும் பொழுது மேஜிக் செய்பவன் வித்தைக்காரன் அல்ல இக்கட்டான சூழ்நிலைகளில் தனது வாழ்க்கையை ஜெயிக்க நல்ல நண்பர்களை வைத்திருப்பவனே வித்தைக்காரன் என்றும் எடுத்துக் கொள்ள முடிகிறது.

படத்திலும் வெளியிலும் சதீஷ்க்கு அப்படி நல்ல நண்பர்களாக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அமைந்திருப்பதில் அவரும் வித்தைக்காரனே!

இரண்டாவது பாதியில் நன்றாகவே சிரிக்க வைத்திருக்கிறார்கள் முதல் பாதியில் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டிருந்தால் வித்தைக்காரன் மிகப்பெரிய வெற்றிக்கு சொந்தக்காரன் ஆகியிருக்க முடியும்!