a K.Vojay Anandh review
- படத்தின் தலைப்பைக் கேட்டவுடன் இது குழந்தைகளுக்கான படம் போல என்று நினைத்து விட வேண்டாம். இந்த படம் முழுக்க முழுக்க விடலை பருவத்தினருக்கான படம். அதே நேரம் துளி கூட முகம் சுளிக்காத வண்ணம் வசனங்களும் காட்சிப்படுத்துதலும் மிகவும் எதார்த்தமாக இருக்கின்றன.
விடலை பருவங்களில் இருக்கும் பெண்கள் என்றாலே ஆளில்லாத திரையரங்கில் ஆண் நண்பருடன் சென்று உல்லாசம் அனுபவிப்பவர்கள் என்கிற மாயத்தோற்றத்துடன் இருக்கும் கதாநாயகன். தன்னை காதலித்து கரம் பிடிக்க காத்திருக்கும் காதலிதான் தன்னை நம்பி திரையரங்கிற்குள் தன்னுடன் தனியாக அமர சம்மதிக்கிறாள், அவளை தொட சம்மதிக்கிறாள் என்பது இறுதிக் காட்சியில் புரியும் போது தெளிவடைகிறான்.
நடுவே, மாயவரத்தில் இருந்து ஒரு பெண் அடுத்த நாள் அவனது பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதாக எண்ணிக் கொண்டு தனது நண்பனுடன் மாயவரம் பயணிக்கின்றாள் கதாநாயகன். மதுரை டு மாயவரம் மாயவரம் டு மதுரை இந்த பயணத்தில் நாயகனும் நண்பனும் பேசிக்கொள்ளும் உரையாடல்கள் மிகவும் எதார்த்தம். இயக்குனர் பிரசாத் ராமர் வசனம் என்று தனியாக எழுதினாரா என்று தெரியாத அளவிற்கு மதுரைக்கார நண்பர்கள் எப்படி ஒருவருக்கொருவர் எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காதவர்களாக எந்த சூழ்நிலைக்கு செய்பவர்களாக இருப்பார்கள் என்பதை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
பூம்புகாரை பற்றி தமிழ் ரசிகர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள் ஆனால் அந்த பூம்புகாரை நாயகியின் உதவியுடன் ரசிகர்களுக்கு விருந்தளித்து இருக்கிறார் இயக்குனர்.
ஒரு விடலைப் பருவத்து பழக்கவழக்கங்களை சொல்லும் படமாக இருந்தாலும் பூம்புகார் மதுரை கண்ணகி சிலப்பதிகாரம் என்று பேசப்பட்டிருக்கும் விதம் அருமை.
ஒரு பெண் ஆணுடன் தனியாக வந்தாலே அவளை தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கும் இன்றைய ஒரு சில விடலை பருவ ஆண்களுக்கு இந்த படம் சரியான சம்மட்டி அடி.
அதிலும் அந்த நாயகி ப்ரீத்தி கரன் பேசும் தீர்க்கமான வசனங்கள் ஆகட்டும் ரெண்டு வயது சின்னப் பையன் தானே நீ என்று சொல்லி நாயகனை வெறுப்பேத்தும் மற்றும் அவனது தவறை சுட்டிக்காட்டும் இடங்களாகட்டும் நன்றாக இருக்கின்றது.
நாயகனாக செந்தூர் பாண்டியன் மற்றும் அவரது நண்பர்களாக நடித்திருப்பவர்கள் அனைவரும் மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் நாயகியின் இஸ்லாமிய தோழிகளாக வரும் பூர்ணிமா ரவி உள்ளிட்டவர்களும் மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்: அவர்களது கண்ணியம் குறையாமல் அதே நேரம் அவர்களது விடலை பருவத்திற்கும் மரியாதை கொடுத்து காட்சி படுத்தி இருக்கும் விதத்தில் இயக்குனர் பிரசாத் ராமர் ஜொலிக்கிறார்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் பிரதீப் குமாரே இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். பல இடங்களில் வாசிக்கப்பட்டிருக்கும் பின்னணி தபேலா இசை, குறிப்பாக நாயகன் மூக்குடைபடும் தருணங்களில் வாசிக்கும் எளிமையான அந்தப் பின்னணி இசைக்கு கைதட்டல்கள் எழுவது ஆச்சரியம் அளிக்கின்றது.
இது போன்ற படங்களில் வழக்கமாக இறுதிக்காட்சியில் நான்கு பெரியவர்களோ அல்லது ஒரு ஆசிரியரோ வந்து அந்த இளைஞர்களுக்கு பாடம் நடத்துவார்கள். ஆனால் செந்தூர்பாண்டியன் மற்றும்பிரீத்தி கிரண் ஆகியோரின் அற்புதமான உரையாடல்கள் மற்றும் உணர்வுகள் மூலமே மிகவும் அருமையான செய்தியை சொன்ன விதத்தில் இயக்குனர் பிரசாத் ராமர், ரசிகர்களிடையே நிச்சயம் நல்ல பெயரை வாங்கி விட்டார் என்று சொல்ல வேண்டும்.
மகளிர் தினத்தன்று மகளிர்க்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளியாகி இருக்கும் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே படத்திற்கு ஆதரவு கொடுங்கள்.