ரெபெல்

mysixer rating 3.5

124

a K.Vijay Anandh review

1947 ஆகஸ்ட் 14 வரை இந்துக்களாக இஸ்லாமியர்களாக இணைந்து பிரிட்டிஷ் ஐ எதிர்த்து போராடியவர்கள் அன்றைய நள்ளிரவுக்கு பின் ஆகஸ்ட் 15 முதல் இரண்டு நாடுகளாக அடித்துக் கொள்ள ஆரம்பித்தது மிகப்பெரிய துரதிஷ்டம் என்றால், சுதந்திர இந்தியாவில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது எல்லைப்புறங்களில் வசித்துக் கொண்டிருந்த – இந்தியர்களாகவே இருந்த –  மொழி சிறுபான்மையினர் துயரங்களை அனுபவித்தனர் என்பது மிகப்பெரிய கொடுமை.

அப்படி ஒரு துயரத்தை குறிப்பாக கல்லூரியில் தங்களுக்கான உரிமையை நிலைநாட்ட போராடும் குன்னூர் தேயிலைத் தோட்ட தமிழை தாய் மொழியாக கொண்ட மாணவர்களின் கதை தான் ரெபல்.

1980 களில் இப்படியெல்லாம் சம்பவங்கள் நடைபெற்றதா என்று யோசிக்கும் பொழுது அவற்றை காட்சிகளாக பார்க்கும் பொழுது ஒரு இந்தியனாக நாம் அடையும் மன வேதனைக்கு எல்லையே இருக்க முடியாது.

இந்தியாவிலேயே மொழி அடிப்படையில் மிகவும் தீவிரமாக இணைந்து செயல்படுவது குறிப்பாக தென்னக மாநிலங்களாக கர்நாடகா மற்றும் கேரளா தான் என்றால் மிகை ஆகாது. அவர்களது உரிமைக்காக அங்கு இருக்கும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று எல்லோரும் இணைந்து மற்றவர்களை எதிர்க்க துணிந்து விடுவார்கள் அந்த அரசியலை நேர்த்தியாக மிகவும் நேர்மையாக அதே சமயம் அசாத்திய துணிச்சலுடன் படம் பிடித்து இருக்கிறார் இயக்குனர் RS நிகேஷ்.

எண்ணிக்கையில் மிகவும் குறைவாக உள்ள தமிழ் மாணவர்கள் பெரும்பான்மையாக உள்ள கேரள மாணவர்களை அவர்களின் அறை கதவுகளை பூட்டிவிட்டு ஒவ்வொரு அறையாக உடைத்து நையை புடைக்கும் காட்சிகள் வித்தியாசமான ஆக்சன் விருந்து. அத்தோடு படத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் மாணவர் தேர்தல் காட்சிகள் நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும் காட்சிகள் என்றால் மிகை ஆகாது .

பாரதியாக நடித்த ஆண்டனி , செல்வராஜாக  நடித்திருக்கும்  ஆதித்யா பாஸ்கர் மற்றும் தமிழ் மாணவியாக வருபவர்கள் என்று அனைவருமே அன்றைய காலகட்டத்தை மிகவும் நேர்த்தியாக நினைவுபடுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக ஜீவி பிரகாஷ் குமார் , புரட்சிகர தமிழ் மாணவர்களை வழி நடத்துபவராக சிறப்பாக நடித்து  இருக்கிறார்.  கேரள மாணவியாக வரும் மமிதா பைஜூவை காதலிக்க ஆரம்பித்தாலும் அரசியல் என்று வரும்பொழுது தமிழ் மாணவர்களுக்காக அவரை தியாகம் செய்யும் இடமும் அருமை.

கே எஸ் கியூ மற்றும் எஸ் எஃப் ஒய் இயக்க மாணவர்களாக வரும் ஒவ்வொருவரும் தமிழ் மாணவர்கள் மீதான வன்மத்தை கக்கிய விதங்களில் வில்லத்தனத்தை சிறப்பாக வெளிக்காட்டி இருக்கிறார்கள்.

தமிழராக அங்கே பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும் கருணாசும் நல்ல தேர்வு.

குன்னூர் தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் ஜிவி பிரகாஷின் அப்பாவாக வரும் சுப்பிரமணிய சிவா உட்பட அனைவரும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழும் நமது சுதந்திர இந்தியாவில் ஒரு பக்கம் அறிவியல் தொழில்நுட்ப  மற்றும் கட்டமைப்பு வசதிகள் சர்வதேச அளவில் போட்டி போடும் அளவிற்கு வளர்ந்து கொண்டு இருந்தாலும், மொழி இன மத ரீதியாக இன்னமும் ஆங்காங்கே விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று மனித ஆற்றல் வீணாகி கொண்டு தான் இருக்கின்றது,  இரண்டு பக்கமும்.

இதற்கு அரசியல்வாதிகள் மட்டும் அல்ல ஒவ்வொரு இந்திய குடிமகனும் பொறுப்பு என்கிற அளவில், குறைந்தபட்சம் தேசமே பிரதானம் என்கிற சிந்தனையோடு அவன் நமது சக குடிமகன் என்கிற உணர்வும் கலந்து விட்டால் எல்லாம் சுபமே!  தேவைப்பட்டால் மாநில எல்லைகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுத்தான் செய்கிறது, குறிப்பாக நதிகளின் நீரை பங்கிடும் விஷயங்கள் மற்றும் எல்லை புற மொழி சிறுபான்மையினர் நலன் இரண்டையும் யோசிக்கும் பொழுது.

இன்றைய தமிழகத்தின் நிலையை இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால் தெலுங்கு, மலையாளம், உருது , ஹிந்தி  உள்ளிட்ட ஏனைய மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் மத்தியில் தமிழர்கள் மொழி சிறுபான்மையினர்களாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது திட்டமிட்டு ஆக்கப்பட்டிருக்கிறார்களோ  என்கிற அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது, ரெபெல் . அந்த வகையில் தேர்தல் பின்னணியில் உருவான ரெபெல் நிச்சயம் இந்த தேர்தல் காலகட்டத்தில் ஒரு எச்சரிக்கை மணி தான், தமிழர்களுக்கு என்றால் அது மிகையல்ல.

ரெபெல் அந்த நற்சிந்தனையை விதைத்திருக்கிறது.