வெப்பம் குளிர் மழை

mysixer rating 5/5

364

a KVijay Anandh review

திரைப்படத்துறையை பொறுத்தவரை பொதுவாக பாரதிராஜா மற்றும் பாலசந்தர் இயக்கத்தில் அறிமுகமாவது என்பது நடிகர்களுக்கு பெரிய பாக்கியமாக கருதப்பட்டது. இன்று வரை எத்தனையோ இயக்குனர்கள் வந்தாலும் அந்த இருவரின் மோதிரக்கையால் குட்டுப்படவில்லையே என்று பல நடிகர்களும் ஆதங்கப்படுவது உண்டு.

ஆனால்,

இந்தப் படத்தில் ஒரு பாரதிராஜாவையே அறிமுகப்படுத்தி இருக்கிறார் தயாரிப்பாளரும் இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பவருமான திரவ். அந்த அளவிற்கு மண் சார்ந்த ஒரு கிராமத்து ரொமான்டிக் படமாக வெப்பம் குளிர் மழையை இயக்கி இருக்கிறார் பாஸ்கல் வேதமுத்து. இன்னும் சொல்லப்போனால் பாரதிராஜாவே யோசிக்காத விஷயமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார்.

திரவ், பெத்தபெருமாள் எனும் கதாபாத்திரத்தில் நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு, தான் உண்டு பசுக்களுக்கு சினை ஊசி போடும் தன் வேலை உண்டு என்று பொறுப்பான கிராமத்து இளைஞனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் கதாநாயகனாக நடித்திருப்பதுடன், எடிட்டிங் மற்றும் சவுண்ட் டிசைனில் தனது பங்களிப்பை வழங்கிய விதமும் போற்றத்தக்கது.

இவருக்கு இணையாக இவருக்கு பாண்டியாக வாக்கப்பட்டு வரும் பானு, மிக மிக இயல்பாக நடித்திருக்கிறார். தமிழ் ரசிகர்கள் என்றுமே நிறங்களை வைத்து நடிகர்களை எடை போடுவது இல்லை. சில்க் ஸ்மிதா முதல் ரஜினிகாந்த் வரை அதற்கு மிகப்பெரிய உதாரணம். அந்த வரிசையில். பானுவும் நிச்சயம் இடம் பிடிப்பார். துறுதுறு என்று நடிப்பது, வாய் நிறைய சிரிப்பது, கண்களில் கோபத்தை கொப்பளிப்பது என்று எல்லோருக்கும் பிடித்து போகிறார்.

திரவ் மற்றும் பானுவிற்கு இடையிலான கிராமத்து ரொமான்ஸ் கமல்ஹாசன் படங்களை விஞ்சும் ரகம். துளி கூட ஆபாசம்  இல்லாததும் முகம் சுளிக்காமல் பார்த்து ரசிக்கலாம் என்பதும் கூடுதல் சிறப்பு.

திரவ் உடன் போட்டி போடும் சக கிராமத்து இளைஞனாக தேவ் ஹபிபுல்லா சிறப்பான தேர்வு, இருவருக்கும் இடையில் நடக்கும் வார்த்தை போர்கள், சிலம்பு சண்டை என்று நாம் அந்த கிராமத்திற்கு சென்றிருப்பது போன்ற உணர்வு. அவர்  உட்பட  அம்மாவாக நடித்திருக்கும் ரமா, அக்காவாக நடித்திருப்பவர், மச்சானாக வருபவர் இரண்டு கால்களையும் வளைத்து விரித்துக் கொண்டு கோலுடன் நடக்கும் எம் எஸ் பாஸ்கர் வரை அத்தனை பேரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பானுவின் தாயார் இறந்த வீட்டில் நடக்கும் சடங்குகள் நகர்ப்புற திரை ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான விருந்து என்று சொன்னால் மிகை ஆகாது.என்னதான் நகர்ப்புறங்களில் தொழில் ரீதியாக செட்டில் ஆகி கார் பங்களா என்று வாழ்ந்தாலும், செத்தால் சொந்த கிராமத்தில் தான் டா சாகணும் என்கிற கருத்தை விதைத்திருக்கின்றது.

படம் உயிரினங்களின் கருத்தரித்தல் சம்பந்தப்பட்ட விஷயத்தை மைய கருத்தாக கொண்டிருப்பதால் படம் முழுவதும் அது சம்பந்தமாகவே வசனங்களையும் காட்சிகளையும் வைத்து விளையாடி இருக்கிறார் இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து. படம் ஆரம்பிக்கும் பொழுது முனங்கும் பசுவின் சத்தத்தை கேட்டு, நுழைக்கணுமாக்கும் என்று ஆரம்பித்து, தூக்குப்படிக்கல், முதல்முயற்சியிலேயே குழந்தையை பெற்றுக் கொடுக்க இயலாத நாயகனுக்கு பெத்தபெருமாள் என்று  பெயரிட்டிருப்பதாகட்டும், திருமணம் முடிந்து வந்த நிலையில் பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கும் பானு Born என்கிற வார்த்தைக்கு அர்த்தம் சொல்வதாகட்டும் – எதிர் வீட்டு இளைஞன் தேவ் ஹபிபுல்லாவை வைத்து நாயகனிடமிருந்து முதல் மரியாதையை பறிக்க முயலும் இடங்களில் வாரிசு இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதாகட்டும், திரவ் இன் அத்தாட்சியாக வரும் தஸ்மிகா – பாண்டிக்கு ஒரு கட்டில் டெக்னிக் சொல்லிக் கொடுப்பதாகட்டும் – அதை நீ தான் சொல்லி கொடுத்தீங்களா அத்தாச்சி… நல்லா இருந்துச்சு என்று சைகையால் விரசம் இல்லாமல் பெற்ற பெருமாள் சொல்லி செல்வதாகட்டும் –  இப்படி காட்சிக்கு காட்சி பிறப்பு சம்பந்தமான விஷயங்களையே வசனங்களாகவும் காட்சிகளாகவும் வைத்திருந்த விதம் ரசிக்க முடிகிறது. இறுதி காட்சியில் கூட அந்த விதைநெல் ஒழுகும் காட்சி, மழையில் கிணறு நிறையும் காட்சி என்று காட்சிக்கு காட்சி சிறப்பாக செதுக்கியிருக்கிறார்.

இயக்குனர் காட்சிக்கு காட்சி அப்படி சிறப்பாக எழுதி இருக்கிறார் என்றால் அதனை பிரேமுக்கு பிரேமாக சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரித்வி ராஜேந்திரன். சாதாரணமான ஒரு கிராமத்து படம் என்று இல்லாமல் ஒவ்வொரு காட்சியையும் ஒளிப்பதிவு செய்த விதத்தில் நிறைய மெனக்கெடல்களை உணர முடிகிறது.

சங்கர் ரங்கராஜனின் இசையில் வரும் பாடல்களும் அருமை பின்னணியில் செய்யும் அருமை சில காட்சிகளை அப்படியே இசையே இல்லாமல் விட்டு விடுவதில் அவர் காட்டும் பொறுமையும் அருமை.

எல்லா உயிரினங்களுக்கும் புணர்ச்சி பொதுவானது மேலும் அது அவற்றின் அடிப்படை உரிமை என்கிற கருத்தை, இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து,  மனிதர்களை வைத்து சொல்லி இருக்கிறாரோ என்று என்ன தோன்றுகிறது.

நாய்கள் புணர்வதை பார்த்தால், கல்லெறிகிறார்கள், சாலை ஓரங்களில் மாடுகள் புணர்வதை பார்த்தால் ஏதோ அருவருப்பான விஷயம் என்று அடித்து விரட்டுகிறார்கள், இவ்வளவு ஏன் இரண்டு தனி மனிதர்கள் ஆண் பெண்ணாக விருப்பப்பட்டு புணர்வதைக் கூட ரகசிய கேமராக்களில் படம் பிடித்து வியாபாரம் ஆக்குகிறார்கள். மனிதன் எவ்வளவு கொடூரமானவன் ஆகிவிட்டான் 7 அட கணவனும் மனைவியும் புணர்வதற்கு கூட பல நேரங்களில் தடையாக இருக்கிறார்கள்.

இதில் மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே புணர்கின்றனவா ? மனிதனும் அது போலவே இருக்க வேண்டுமா ? என்கிற கேள்வியும்  எழாமல் இல்லை.

சரி மற்ற உயிரினங்களும் மனிதனும் எந்தவிதமான தங்குதடையின்றி விருப்பப்படும் நேரங்களில் புணர்ந்து கொண்டு இருக்கும் பொழுது, பசுக்களின் அது இயற்கையாக காளையோடு சேர்ந்து செய்யும் புணர்ச்சிகளுக்கு அறிவியல் மருத்துவ வளர்ச்சி என்கிற பெயரில் செயற்கை கருத்தரித்தல்களை ஊக்குவித்து பசுக்களின் காளைகளின் இயற்கையான உணர்ச்சிகளுக்கு தடை போட்டு விட்டோமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

அந்த பாவம் தானோ என்னவோ இன்று மனிதர்களுக்கும் வீதிக்கு வீதி செயற்கை கருத்தரித்தல் மையங்கள் பெருகி விட்டன.

இயற்கை உரம் தவிர்த்து இரசாயன உரம் தெளித்து விளைவிக்கப்படும் தானியங்களில் எப்படி சத்து இருக்கப் போகிறது குறிப்பாக உயிர்சத்து இருக்கப் போகிறது என்று போகிற போக்கில் எம் எஸ் பாஸ்கரை வைத்து ஒரு கருத்தை தெளித்து இருக்கிறார்கள்.

ஐவிஎஃப் எனப்படும் செயற்கை கருத்தரித்தல் விந்து கொடையாளர் என்பதை ஒரு கிளை கதையாக வைத்திருந்தாலும், மைய கருத்து என்பது ஆத்மார்த்தமாக முழு மகிழ்ச்சியுடன் உயிரினங்கள் – மனிதன் உட்பட – புணர்ச்சியில் ஈடுபடும் பொழுது வாரிசுகள் உருவாகும் என்பதாக மையக்கதையை சொல்லி இருக்கிறார், பாஸ்கல் வேதமுத்து.

பருவத்தே பயிர் செய், புணர்ச்சிக்கு மரியாதை அதுவே வெப்பம் குளிர் மழை.

வெப்பம் குளிர் மழையை தவற விடாதீர்கள் தமிழ் சினிமா ரசிகர்களே !

பிகு: கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு விமர்சனங்கள் எழுதியிருந்தாலும் ஒரு தொழில் முறை விமர்சகனாக நான் எழுதியிருக்கும் இந்த விமர்சனத்தை விட 100 ரூபாய் டிக்கெட் எடுத்து திரையரங்கில் பார்த்து ரசிக்கும் ரசிகனின் பார்வை இன்னும் விசாலமானது அவனது புரிதல் இதைவிட ஆழமானது என்று நம்புபவன் நான். அவர்களுக்கு இந்த படம் நிச்சயம் மிகவும் பிடிக்கும்.