DeAr

mysixer rating 3.5/5

135

a K.Vijay Anandh review

அந்தப் படத்துல மணிகண்டன் குறட்டை விட்டார் இந்த படத்துல ஐஸ்வர்யா ராஜேஷ் குறட்டை விடுறாங்க அந்த மாதிரி சிம்பிளா யோசித்து விட்டு நகர்ந்துவிட முடியாது இந்த படத்தை பார்க்கும் பொழுது.

குறட்டையையும் தாண்டி,  தாம்பத்தியத்திற்குள் புகுந்து விட்டவர்களுக்கான பொறுப்புணர்வை – கணவன் மனைவி ஆகியோருக்கு இடையிலான விட்டுக் கொடுத்தலை – ஒருவர் உணர்வுக்கு இன்னொருவர் மரியாதை கொடுப்பதை – மிகவும் உணர்வுபூர்வமாக அலசி இருக்கிறார் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன்.

இதுவரை ஒரு சில அழுத்தமான கதாபாத்திரங்களில்  ஜிவி பிரகாஷ் குமார் நடித்திருந்தாலும், மிகவும் லைட்டான ஒரு கதாபாத்திரத்தை ஏற்றி நடித்திருக்கும்  இந்தப் படத்தில் தான் ஜிவி பிரகாஷ் குமார் ஒரு முழுமையான நடிகராக ஜொலிக்கிறார் என்றால் அது மிகையல்ல. குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அவருக்கு இடையிலான சம்பாஷனைகள் ஆகட்டும் அம்மா ரோகினியிடம் குமுறும் இடங்களாகட்டும் – குறிப்பாக  அப்பா இல்லாத நிலையில் தன்னை வளர்த்து ஆளாக்கிய அண்ணன் காளி வெங்கட்டுக்கு இறுதி காட்சி வரை அவர் கொடுத்துக் கொண்டிருக்கும் மரியாதையாகட்டும் – அவர் முன்னால் காட்டும் பவ்யமாகட்டும் – இறுதி காட்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் கண்ணீரும் கம்பலையுமாக உணர்ச்சிகளை கொட்டுவதாகட்டும் நடிகன் டா இன்று பெயர் எடுத்திருக்கிறார்.

மேலும், இதற்கு முன் ஜிவி பிரகாஷ் குமார் பல கதாநாயகிகளுடன் மிகவும் நெருக்கமாக நடித்திருக்கிறார் என்றாலும் இந்த படத்தில் இவருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் குமார் கெமிஸ்ட்ரி மிகவும் அற்புதமாக இருக்கிறது, சொல்லப்போனால் ஒரு முத்த காட்சி கூட இல்லை என்பது ஆச்சரியம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கென்று ஒரு தனி பாணியை தேர்ந்தெடுத்துக் கொண்டு சிறப்பாக நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக்கொள்கிறார். மக்கள் செல்வி என்று அழைக்க முழு தகுதியானவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காளி வெங்கட், தனக்கு காமெடி மட்டும் அல்ல சவாலான கதாபாத்திரங்களிலும் நடிக்க வரும் என்று ஏற்கனவே பல படங்களில் நிரூபித்து இருந்தாலும் இந்த படத்திலும் ஒரு பொறுப்பான டிப் டாப் அண்ணனாக வந்து அசத்தி இருக்கிறார். மாமியார் கணவன் மகன் கொழுந்தனார் என்று அத்தனை பேருக்கும் ஆக்கி போடும் அன்பான அதைவிட அதிகமான அமைதியான இல்லத்தரசியாக பெரும்பாலான காட்சிகளில் மவுனமாகவே வந்தாலும் கல்பனா கதாபாத்திரத்தில் சிறப்பாக தனது முத்திரையை பதித்திருக்கிறார் நந்தினி.

நீ மட்டும் என்னடா யோக்கியம் உன் அப்பா நீயும் உன் அண்ணனும் குழந்தைகளாக இருக்கும் பொழுது என்னை விட்டு சென்று விட்டார், ஆனால் நீ,  உன் குழந்தையை உன் மனைவி வயிற்றில் சுமப்பது தெரிந்தும் அவளை விட்டு செல்வதற்கு ஒற்றைக்காலில் நிற்கிறாயே என்று ஒரு கேள்வி கேட்பார் ரோகினி என்று எதிர்பார்த்த நிலையில் அப்படி ஒரு கேள்வி கேட்காமலேயே மகனை திருத்த முயல்கிறார், திரும்பவும் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து வாழ முயற்சிகள் எடுக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு ரோகினியை தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் பார்த்து மகிழலாம்.  தலைவாசல் விஜய், இன்னொரு பக்கம் இளவரசு என்று மூத்த நடிகர்கள் அத்தனை பேரும் சிறப்பாக தங்களது கதாபாத்திரங்களை ஏற்று இருக்கிறார்கள்.

அப்பாவிற்கு குடிப்பழக்கம் இருக்கிறது அம்மாவிற்கு தெரியாமல் நானும் அவருடன் சேர்ந்து கட்டிங் போடுவேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் சொல்வதை தவிர்த்து இருக்கலாம். போதை தான் விடியல் என்று, இன்றைய தமிழகம் தவறான திசையில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற வசனங்களை வைத்து படங்கள் எடுப்பது மது கலாசாரத்தை ஊக்குவிப்பது போல அமைந்திருப்பது துரதிஷ்டவசமானது.

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவும், ஜிவி பிரகாஷ் குமாரின் பாடல்கள் மற்றும் பின்னணிக்கான இசையும் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரனுக்கு இந்த படத்தை மிகச் சிறந்த படைப்பாக மாற்றுவதற்கு பக்க பலமாக அமைந்திருக்கின்றன.

அப்புறம், நமது படைப்பாளிகள் எந்த மொழியை சேர்ந்த படைப்பாளிகளுக்கும் சளைக்காதவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.  தொழில்நுட்பங்களாகட்டும்,  கதை சொல்லும் விதங்களாகட்டும், படமாக்கும் வித்தை ஆகட்டும் கேப்டன் விஜயகாந்த் போல அடித்து நொறுக்குகிறார்கள் என்று பெருமைப்படும் அதே வேளையில் போராளித்தனம் என்று வந்துவிட்டால் ஸ்ட்ரைட்டாக மத்திய அரசை ( மட்டும் ) கேள்வி கேட்கும் இடங்களில் விருச்சிக காந்த் ஆகிவிடுகிறார்கள் அல்லது ஆக்கப்பட்டு விடுகிறார்கள். உள்ளூர் நிதி அமைச்சரிடம் அந்த முப்பதாயிரம் கோடி என்னாச்சு சார் ? அந்த பசங்க ஆட்டைய போட்டது நெசந்தானா ? என்று கேள்வி கேட்பதாக கனவு கூட காணத் தயங்குகிறார்கள்.

மற்றபடி முதலிலேயே குறிப்பிட்டது போல குறட்டை சத்தம் முதல் பாதியோடு ஓய்ந்து விடுகிறது.  இரண்டாவது பாதியில் முழுக்க முழுக்க  தலைவாசல் விஜய் – ரோகினி, காளி வெங்கட் – நந்தினி மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய தம்பதியினர்களுக்கிடையிலான உணர்வு போராட்டமாக ஆகி நிறைய சிந்திக்க வைக்கிறது இந்த டியர், DeAr..

இளம் ஜோடிகள் மட்டுமல்ல மூத்த தம்பதிகளும் பார்த்து மகிழலாம் !