Romeo

mysixer rating 3.5

118

a K Vijay Anandh review

கார்த்திகை விரதம் மற்றும் ரம்ஜான் இரண்டு பண்டிகைகளும்  ஒருங்கே வந்த ஏப்ரல் பதினொன்றில் வெளியாகி, குறுக்குத்துறை முருகன் ஆலயத்தை திரையில் காண்பித்தமைக்கு முதலில் படக்குழுவினருக்கு ஆத்மார்த்தமான நன்றிகள்.

இளமையில் காதலை தொலைத்த அறிவழகன் –  விஜய் ஆண்டனி, திருமணம் செய்தால் அதை காதலித்து தான் திருமணம் செய்வேன் என்பதில் உறுதியாக  இருக்கிறார்.

திரைப்படத்துறையில் கதாநாயகியாக ஜெயிப்பது தான் இப்போதைக்கு என்னுடைய முதல் விருப்பம் என்று பிடிவாதமாக இருக்கிறார் நாயகி லீலா – மிருணாளினி ரவி.

இவரது கனவுகள் தெரியாமல் விஜய் ஆண்டனி இவர் மீது காதலில் விழ அது கல்யாணத்திலும் முடிய அடுத்து நடப்பது தான் சுவராசியமான திரைக்கதை.

உண்மையில் இந்த படத்திற்கு விமர்சனம் எழுதும் பொழுது ரோமியோ என்கிற படத்திற்கு விமர்சனம் எழுதுவதாக இருந்தால் அது இரண்டாவது பாதியில் நெல்லைச் சீமையை சேர்ந்த அறிவழகன் தனது அன்பு  மனைவி லீலாவிற்காக எடுக்கப்படும் படத்தின் பெயர் தான் ரோமியோ . ஆக, இந்த படத்தின் பெயர் என்ன என்பதை ரசிகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும், இதுவே ஒரு சுவாரஸ்யம் தான்.

தாடியும் முதிர்ச்சியான முகமாக முதல் பாதியில் வரும் விஜய் ஆண்டனி தனது மனைவிக்காக தான் தயாரிக்கும் படத்தில் தானே ஹீரோவாக நடிக்கும் பொருட்டு, தன்னை மேக்கோவர் செய்து கொள்ளும் இடங்கள், அதனைத் தொடர்ந்து அவரது உடல் மொழியே மாறிப் போவது அத்தனையும் பெண்களுக்கு மிகவும் பிடித்த காட்சி அமைப்புகள்.

பக்கத்தில் இருக்கும் கணவனை புரிந்து கொள்ளாத மனைவியர் அசரீரியாக தொலைபேசியில் ஒலிக்கும் ஆண் குரலுக்கு அடிமை ஆவதும் தடம் மாறுவதும் தினம் தினம் செய்தித்தாள்களில் படிக்கும் சம்பவங்கள். ஒரு நடிகையாகவும் ஆக வேண்டும் – அதே நேரம் தாலியை கழட்டி வைத்து விட்டு விஜய் ஆண்டனியுடன் குடும்பம் நடத்தவும் இல்லை -ஆனாலும் ஒரு கண்ணியமான தமிழ் பெண்ணாக இரண்டாவது பாதியில் லீலா ஜொலிக்கிறார். விக்ரமை  வெறும் நண்பனாகவே பார்க்கிறேன் என்று நல் அறிவுடன் அறிவிடம் சொல்லி அழும் காட்சி அருமை.

முதல் பாதியில், மது அருந்தும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். குறிப்பாக சந்தோஷமாக இருக்கும் பொழுதும் சோகமாக இருக்கும் பொழுதும் குடிக்கலாம் என்று மிருணாளினி சொல்லும் பொழுது குடிக்கலாம் என்று சாரா அதனை வழிமொழிவது மதுவுக்கு அடிமை ஆகாதவர்களையும் அதனை சுவைத்துப் பார்க்க தூண்டும் காட்சி அமைப்புகள்.

படம் முழுவதும் ஆங்காங்கே பல குறைகள் இருந்தாலும், திரைப்படத் துறையே இரண்டு இடங்களில் மட்டும் தட்டுவது போல காட்சிகள் அமைந்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக there is no any unconditional love instead love itself  unconditional அதாவது நிபந்தனையற்ற காதல் என்று எதுவுமே அல்ல ஏனென்றால் காதலே நிபந்தனைகள் அற்றது தான் என்பதை தனது மனைவி மீது வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்த அறிவழகன் செய்யும் ஒவ்வொரு மெனக்கடல்களை ரசிக்க முடிகிறது.

பிச்சைக்காரன் 2 போலவே இந்த படத்திலும் ஒரு தங்கை சென்டிமென்ட், அது தங்கையா ? இள வயது தோழியா ? என்பதை இறுதிக்காட்சி வரை சஸ்பென்சாக வைத்திருப்பது பாராட்டத்தக்கது.

திருநெல்வேலிக்கே அல்வாவா என்று சொல்வது போல விஜய் ஆண்டனிக்கே  இன்னொருவர் இசையமைத்திருக்கிறார். பரத் தனசேகர் மற்றும் ராய் ராக்ஸ்டார் இணைந்து அமைந்திருக்கும் அந்த இசையும் அல்வாவை போலவே இனிமையாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், பாடல்களே இல்லாமல் படங்கள் வெளிவரும் இன்றைய காலகட்டத்தில், விஜய் ஆண்டனியின் படத்தில் இன்னும் சில பாடல்கள் வைத்தாலும் ரசிகர்கள் பெற்றுக் கொள்வார்கள் என்கிற அளவிற்கு நிறைய பாடல்கள் இந்த படத்தில்.

இயக்குநர் விநாயக் வைத்தியநாதன், திரைக்கதையில் – குறிப்பாக தனது தங்கை  – கண் முன்னால் அமர்ந்திருந்தும்  –  என்ன செய்வது  – என்று தெரியாமல் விஜய் ஆண்டனி தவிக்கும் இடங்களில் இருந்து இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், இந்தப் படத்தை 100% கொண்டாட்டமான படமாக கொடுத்திருக்க முடியும் !