ரத்னம்

mysixer rating 4.5/5

316

a K.Vijay Anandh review

ஒரு பெண்ணை பார்த்த உடனேயே பிடித்துப் போய் விடுவதற்கும்,  இவளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவுக்கு வருவதற்கும் இந்தப் படத்தை விட,  இதற்கு முன்னர் வந்த  வேறு எந்த படத்திலும், எந்த மொழி படங்களிலும் சரியான காரணத்தை யாரும் சொல்லி இருக்க முடியாது என்று உறுதியாக கூறலாம்.

விஷால் படங்கள் என்றாலே முதல் பாதியில் அப்பாவியாகவும் இரண்டாவது பாதியில் அதிரடி ஆக்சன் நாயகனாகவும் வருவது இயல்பு. ஆனால் இந்தப் படத்தில் ஆரம்பம் முதலே அதிரடி ஆக்சன் நாயகனாகவே வருகிறார். அவ்வளவு ஏன் அவரது 10 வயதிலேயே, அந்த ஏரியாவின் மிகப்பெரிய பெண் ரவுடியை குத்திக்கொன்று சீர்திருத்த பள்ளிக்கு சென்று விடுகிறார். அப்படி ரத்னமாக, படம் முழுவதும் வில்லன்களுக்கு அவர்களது ரத்தத்தாலேயே  ‘அபிஷேகம்’ செய்து வைக்கிறார்.

மற்றபடி ஆக்சன் காட்சிகளில் அதிரடி காட்டுவது விஷாலுக்கு ரோட்டோர டீக்கடையில் டீ குடிப்பது போல ஆகிவிட்டது. இந்தப் படத்தில் அதையும் தாண்டி செண்டிமெண்ட் காட்சிகளில் உருகியும் இருக்கிறார்.

மல்லிகா என்கிற பெயரில் தனது வாழ்க்கையில் நுழையும் பிரியா பவானி சங்கர் மீது அவர் வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் ஏன் எதற்காக என்று பாதியிலேயே சொல்லிவிட்டாரே இயக்குனர் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுதே. வெயிட் பண்ணுங்கப்பா,  கிளைமாக்ஸ்  இதைவிட ஒரு பெரிய சர்ப்ரைஸ் தருகிறேன் என்று காலரை தூக்கி விட்டிருக்கிறார் இயக்குனர் ஹரி என்று சொன்னால் அது மிகை ஆகாது.

எந்தவிதமான லாஜிக் மீறல்கள் இல்லாமல் இப்படி ஒரு பிரம்மாண்டமான கமர்சியல் ஆக்சன் படத்தை தர முடியுமா என்கிற கேள்விக்கு,  பாடமே நடத்தி இருக்கிறார் இயக்குனர் ஹரி. இவரது வேகத்திற்கு , பீட்டர் ஹெயின், கனல் கண்ணன் மற்றும் திலீப் சுப்பராயன் ஆகிய மூன்று சண்டை பயிற்சியாளர்கள் தேவைப்பட்டு இருப்பதே சாட்சி. வெறுமனே ஒரு ஆக்சன் படமாக இல்லாமல் பழைய பன்னீர்செல்வம் எம் எல் ஏ வாக  வரும் சமுத்திரகனி மற்றும் அவரது பாரில் வேலை செய்யும் மூர்த்தியாக வரும் யோகி பாபு ஆகியோரை வைத்து, சமூகப் பொறுப்புடன் நடப்பு அரசியலை நையாண்டி செய்யவும் தவறவில்லை.

சமுத்திரக்கனி முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் காட்டி அவருக்குள் இருக்கும் மகா நடிகனை உசுப்பி விட்டு இருக்கிறார். அதைப்போலவே யோகி பாபுவையும், கவுண்டமணி ரேஞ்சுக்கு நையாண்டி செய்து இருக்கிறார். ” பிஞ்ச செருப்பை வெங்காயம் பச்சை மிளகாய் தூவி வறுத்து கொடுத்தா   போனதல மட்டன் சுக்கானு திங்கப் போறானுக … ” திராவிடம் ஊற்றிக் கொடுக்கும் மது போதையில் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழர்களின் நிலைமையை இதைவிட சிறப்பாக எடுத்துரைக்க முடியாது.

பிரியா பவானி சங்கர் , இவரை பெரிதாக கொண்டாட தவறிக் கொண்டிருக்கின்றதோ திரையுலகம் என்று எண்ணைத் தோன்றுகிற அளவிற்கு ஒரு சிறந்த நடிகை.  லோகநாயகி மற்றும் மல்லிகா ஆகிய இரண்டு கதாபாத்திரங்களுக்கும் நேர்மையாக நடித்து உயிர் கொடுத்திருக்கிறார்.

தனித்தனியாக வந்தாலே இவர்களை சமாளிப்பது கடினம். ராயுடு சகோதரர்களாக முரளி சர்மா, ஹரிஷ் பேரடி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் கொடூர வில்லன்களாக மிரட்டி இருக்கிறார்கள்.

இவர்களை தவிர ஜெயப்பிரகாஷ், துளசி, விஜயகுமார், விடிவி கணேஷ். நான் கடவுள் ராஜேந்திரன், ஒய் ஜி மகேந்திரா, மோகன்ராம், கும்கி அஸ்வின், கணேஷ் வெங்கட்ராம், டெல்லி கணேஷ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் என்று ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை சரியான அளவில் பயன்படுத்தி ரத்னம் படத்தை சிறப்பாக பொழுதுபோக்கு மசாலாவாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரி. குறிப்பாக மத்திய அரசின் பிரதிநிதியாக இரு மாநிலங்களுக்கு இடையே கோ -ஆர்டினேஷன் மீட்டிங் நடத்த வரும் கௌதம் வாசுதேவ மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் தமிழ் சினிமாவிற்கு புதிது.

திருத்தணியில் அக்ரஹாரத்திற்குள் சென்று வரும் விஷாலுக்குள் ஏற்படும் வியத்தகு மாற்றங்கள், வேற லெவல். அது ஏன் எதனால் என்பது, சுவாரசியமாக சொல்லப்பட்டிருக்கிறது.

நீட் என்றாலே சிலருக்கு வயிறு எரிந்து கொண்டிருக்கும் பொழுது, நான்கு முறை நீட் எழுதி தேர்வாகும் மல்லிகா கதாபாத்திரம் இன்னும் அதிக எரிச்சலையை கொடுக்கும். இந்த போலி போராளிகளுக்கு,  ஒரு தடவை நீட் எழுதி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்றாலே அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும், அவ்வளவுதான் அவர்களது அதிகபட்ச கேவலமான எதிர்பார்ப்பு.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது மக்கள் எப்படி தங்களது உடைமைகளையும் உயிர்களையும் இந்த பக்கமும் அந்தப் பக்கமும் தொலைத்துக்கொண்டார்களோ அதற்கு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை என்கிற அளவில் சுதந்திர இந்தியாவில் மாநிலங்களுக்கான எல்லைகள் வரையறை செய்யப்பட்ட பொழுது மொழியின் அடிப்படையில் எல்லைப்புறங்களில் மக்கள் தங்கள் உடைமைகளையும் உயிர்களையும் இழந்து கொண்டுதான் இருந்திருக்கிறார்கள் என்கிற வேதனையான உண்மையை லேசாக இந்த படத்தில் தொட்டிருப்பது நம்மை சிந்திக்க வைத்திருக்கின்றது. இன்னும் தேசிய ஒருமைப்பாடு என்பதை மறந்து பிற மாநிலத்தவர் என்கிற வெறுப்புகளை ஒருவர் மீது ஒருவர் காட்டிக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதே வெட்கக்கேடு. இதில் இரண்டு புறமும் அரசியல்வாதிகளின் செல்வாக்கோடு வலம் வருபவன் பிழைத்துக் கொள்கிறான், பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான். அப்படிப்பட்ட அப்பாவி மக்களை காப்பாற்ற ரத்னம் போல, ஆங்காங்கே சூப்பர் ஹீரோக்கள் தோன்றி கொண்டு தான் இருக்கிறார்கள்.

எம் சுகுமாரின் ஒளிப்பதிவில் திருப்பதி மலைக் காட்சிகள்,  திருத்தணி காட்சிகள், வேலூர் காட்சிகள் என்று காட்சிக்கு காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது.

ஒற்றை எஞ்சின் இரட்டை எஞ்சின் என்ற கேள்விப்பட்டிருக்கிறோம், ரத்னம் மூன்று எஞ்சின்கள் சேர்ந்து விறுவிறுப்பாக செல்லும் ஒரு திரைக்கதையாக அமைந்திருக்கிறது. ஒருவர் இயக்குனர் ஹரி, சொல்லவே வேண்டாம்., இன்னொருவர் ஆக்சன் தளபதி விஷால்., இன்னொரு மற்றும் மூன்றாவது எஞ்சினாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் .

படத்திற்கு, அதே ரத்தம் தோய்ந்த பின்னணியில் ரத்னம் ஐயர் என்று பெயர் வைத்திருந்தால், சாலப்பொருத்தமாக இருந்திருக்கும்.

ரத்னம், திகட்டாத ஆக்சன் விருந்து!