அக்கரன்

mysixer rating 3.5

93

a K. Vijay Anandh review

எப்புடிர்றா….. என்று அந்த குட்டி சிறுவனின் வைரல் வீடியோ போன்று தான் இந்த படம் பார்த்த பிறகு ஆச்சரியப்பட வேண்டியது இருக்கிறது.

இரண்டு பெண் குழந்தைகளுடன் சிங்கிள் பாதராக வாழும் எம் எஸ் பாஸ்கர். நீட் பயிற்சி மையத்திற்கு சென்ற இரண்டாவது மகள் காணாமல் போகிறார். அதிலிருந்து படம் விறுவிறுப்பாக செல்கிறது. சென்றாலும் கதையை நான் லீனியர் முறையில் சிறப்பாக சொல்லி அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் அருண் கே .பிரசாத்.

நாயகனாக கபாலி விஸ்வநாத் நடித்திருந்தாலும் அந்த கிரெடிட் எம்.எஸ். பாஸ்கருக்கு கொடுப்பது போன்ற ஒரு திரைக்கதை இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டி இருக்கிறது.

அதே நேரம் பிளாஸ்டர் ஆஃப் பாரிசில் அச்சு எடுத்து சிலிக்கானில் சிலைகள் செய்து கொடுக்கும் நாயகனின் தொழிலையும் தொழில் சார்ந்த விஷயங்களையும் கதை ஓட்டத்திற்கு பயன்படுத்தி இருப்பது கூடுதல் சிறப்பு. அத்துடன், தொழில்நுட்ப ரீதியாக ஏஐ எனப்படும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஐடியாக்களை பயன்படுத்தி ஒரு கதாபாத்திரத்தை இன்னொரு கதாபாத்திரமாக மாற்றி இருப்பது தமிழ் சினிமாவிற்கு புதிது.

எம் எஸ் பாஸ்கர் பல இடங்களில் ஜெயிலர் ரஜினிகாந்தை நினைவுபடுத்துகிறார் அந்த அளவுக்கு, எமோஷனலும் ஆக்ஷனும் கலந்து புதிய பரிணாமம் எடுத்திருக்கிறார்.

அவரது இரு மகள்களாக வரும் வெண்பா மற்றும் பிரியதர்ஷினி சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக தாய் இல்லாத நிலையில் இளைய சகோதரியை ஒரு தாயைப் போல கண்டித்து அரவணைக்கும் அக்காவாக வெண்பா சிறப்பாக நடத்தி இருக்கிறார்.

கபாலி விஸ்வநாத்திற்கு, இந்தப் படம் நிச்சயம் அடுத்த கட்டம் செல்ல உதவும் என்கிற அளவிற்கு ஒரு பொறுப்பான நாயகனாக நடித்து அசத்தியிருக்கிறார்.

நமோ நாராயணன், ஆகாஷ் பிரேம்குமார். கார்த்திக் சந்திரசேகர் ஆகியோர் சம்பந்தப்பட்ட அரசியல் களம் நம்பத்தகுந்ததாவும் சுவாரசியமாகவும் அமைந்திருக்கிறது.

இருவரது   கோணங்களில் கதை பயணித்து மூன்றாவதாக ஒருவரது கோணத்தில் கதை முடித்து வைக்கப்படுவது அக்கரனுக்கு, நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுத் தர உதவும்.

அக்கரன்,  வித்தியாசமான பொழுது போக்கிற்கு உத்திரவாதம்!