a K. Vijay Anandh review
எப்படி இந்த கேடுகெட்ட முட்டாள் அரசியல்வாதிகள், பல்லாயிரம் ஆண்டுகளாக சிறிது சிறிதாக வளர்ந்து உயர்ந்து நிற்கும் மலைகளை ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் காலி செய்து தரைமட்டமாக்குகிறார்கள் .? உலகில் நடைபெற்ற அனைத்து போர்களிலும் வெடித்துச்சிதற்கும் ஓட்டுமொத்த குண்டுகளுக்கும், கல்குவாரி என்கிற பெயரில் மலைகளை தகர்க்க இவர்கள் வைக்கும் ஒவ்வொரு குண்டும் சமம் என்கிற அடிப்படை அறிவு அவர்களுக்கும் இல்லை, அந்த கல்குவாரியில் இருந்து வெடித்து சிதறிய பாறாங்கல் தங்கள் தலைமீதே விழுந்தாலும் அந்த அறிவு மக்களுக்கும் இல்லை ! மலைகளை வைத்துக்கொண்டு என்ன பிரயோஜனம் என்று பிரயோஜனம் இல்லாத முலைகளை சுமந்து கொண்டு வீரவசனம் பேசும் கோழைகளாகிப்போய்விட்டார்கள், நம்மூர் ஆண்கள்.
நாம் பார்த்துக்கொண்டிருப்பது, மதுக்கலாச்சாரத்தை பரவலாக்கிவிட்டு தமிழனின் இறை நம்பிக்கையை சிதைத்துக்கொண்டிருக்கும் திராவிடர்கள் ஆட்சி செய்யும் நிலப்பகுதியில் வெளியாகியிருக்கும் தமிழ் சினிமா தானா என்கிற சந்தேகங்களை விதைக்கும் காட்சிகளாகவே படம் முழுவதும் விரிகிறது.
ஏனென்றால் சித்த மருத்துவர் சதாசிவ பாண்டியன் – அர்ஜுன் தாஸ், தன்னை தேடி வரும் நோயாளிகளை மது அருந்தாதீர்கள் என்கிறார், தனது காதலிகள் சந்திராவாக வரும் ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் சூர்யாவாக வரும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோருடன் ஆலயத்திற்கு சென்று நெற்றி நிறைய திரு நீறு பூசிக்கொண்டு யதார்த்த தமிழர்களாக வருகிறார்.
அர்ஜூன் தாஸ், மயிலைப்புடிச்சு காலை ஒடைச்சு ஆடச்சொல்லுகிற உலகம் மாதிரி, இந்த புயலைப்பிடித்து பாட்டிலில் அடைச்சு தென்றலாக திறந்துவிட்டிருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். அந்தளவுக்கு மென்மையாக, சிறப்பாக நடித்திருக்கிறார் அர்ஜுன் தாஸ். ஒரு இடத்தில் பாட்டிலை உடைத்துக்கொண்டு வெடித்து சிதறியும் இருக்கிறார். அந்த இடத்தில் கூட அரக்கனை வதம் செய்துவிடாமல் நிரந்தர தூக்கத்திற்கு தள்ளும் பாங்கு அற்புதம்.
தன்யா, அறிமுகக்காட்சியில் வருவது போன்றே, அந்த நீளமான பொட்டுடன் படம் முழுவதும் வந்திருக்கலாமே , அது ஒரு தனி அழகாக அமைந்திருந்தது. வாழ்க்கையில் நடைபெற்ற எதிர்பாராத விபத்தால், தூங்கினால் படுக்கையை நனைத்துவிடும் அந்த கதாபாத்திரத்தில் இமேஜ் பார்க்காமல் நடித்ததிலிருந்து இவர் டைம் பாஸுக்கு நடிக்க வரல என்று நிரூபித்துவிட்டார்.
மயிலைப்புடிச்சு காலை ஒடைச்சு.. இந்த வரி சந்திராவாக வரும் ரேஷ்மா வெங்கடேஷுக்கு சாலப்பொருந்தும். அர்ஜுன் தாஸின் காதலியாக இருக்கும் வரை அவர் கல்லூரி கலை நிகழ்ச்சிக்காக ஆடத்தொடங்கியதிலிருந்து அவர் ஆடிக்கொண்டே இருப்பது போல ஒரு பிரமை, அவர் நடந்தாலும் துறுதுறுவென்று ஓடினாலும் , கதவுக்குப்பின் சாய்ந்தாலும். ஆனால், பிடிக்காத திருமணத்திற்கு கழுத்தைக்கொடுத்துவிட்டு காலை உடைத்துக்கொண்ட கதையாக அவரது அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகிறது. ரேஷ்மாவும் பெரிய ரவுண்டு வருவார், நடிகையாக.
தமிழ்த்திரையுலக படைப்பாளிகள் உருவாக்கும் இப்படிப்பட்ட அசாதாரமான கதாபாத்திரங்களை எங்கிருந்தோ வந்து ராஜாளி கழுகுகளாக பிற மாநில நடிகர்கள் கொத்திக்கொண்டு போய்விடுகிறார்கள். அப்படி ஒரு மிரட்டலான கதாபாத்திரத்தை ஏற்று மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் சுஜித் சங்கர்.
கடைசி வரைக்கும் சுரேஷையும் ரமேஷையும் நம்ம கண்ல காட்டாமலேயே அவர்களிருவருக்கிடையிலும் மூன்றாவதாக இன்ஸ்பெக்டர் சுஜித் சங்கரிடம் டாக்டர் சைலஜா – ரம்யா சுப்ரமணியம் படும் பாடு உச்சக்கட்ட நகைச்சுவையாக அமைந்திருப்பது, சித்தமருந்து கசாயத்தை தேன் கலந்து சாப்பிடுவது போல அமைந்திருக்கிறது. காமெடி வொர்க் அவுட் ஆகிடுச்சு ரம்யா, விட்டுறாதீங்க !
ஜி எம் சுந்தர் உள்ளிட்ட நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
சரவணன் இளவரசுவின் ஒளிப்பதிவில், பழனி, கொடைக்கானல் என்று அத்தனையும் அழகு.
மயிலைப்புடிச்சு காலை ஒடைச்சு.. இந்த வரி இசையமைப்பாளர் தமனுக்கும் பொருந்தும், ஆந்திர மிளகாயாக காரசாரமாக அடித்து துவசம்சம் செய்துகொண்டிருப்பவரை ஏன்..இம்பூட்டு. சத்தம்..? கொஞ்சம் மெதுவா என்று சொல்லாத குறையாக, கொடைக்கானல் தென்றலாய் இசையமைத்திருக்கிறார்.
வீட்டைப்பெருக்கி பக்கத்துவிட்டுக்காம்பவுண்டில் குப்பையை போடும் எவனுக்கும் பக்கத்து மாநிலத்திலிருந்து வந்து குப்பை கொட்டுறான் என்பதை கேட்க உரிமையில்லை என்பதாக அந்தக்காட்சியை அமைத்து, தனது தவறை ஒத்துக்கொண்ட மலையாளி சகோதரர்கள் கொடைக்கானலில் கொட்டிய குப்பைகளையும், சரக்கு பாட்டில்களையும் அள்ளிச்செல்லும் இடம் அருமை. அதே நேரம், நம்மவர்கள் என்ன சொன்னாலும் கேட்காமல் காடுகளுக்குள் யானைவழித்தடங்களில் பாட்டிலை உடைத்துச்செல்வது கொடுமையிலும் கொடுமை. மதுப்பிரியர்களின் உணர்வுகளை கருணையுள்ளத்தோடு பரிசீலித்து மாண்புமிகுக்கள் யானைகளுக்கு ஷூ மாட்ட ஒரு பெருந்தொகையை அடுத்த பட்ஜெட்டில் தாக்கல் செய்தாலும் ஆச்சிரிப்படுவதற்கில்லை, ஏனென்றால் மலையை உடைக்கிற அறிவுகொண்டவர்கள் அப்படித்தான் சிந்திப்பார்கள்.
மெளனகுருவுக்கு அப்புறம் கொடுத்த மகாமுனி கொஞ்சம் பிசிறிவிட்டது என்பதை இந்தப்படத்தில் ரம்யாவை வைத்தே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கும் சாந்தகுமாரின் நேர்மையும் அட்டகாசம்.
அதே நேர்மையுடன், அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் படமாக ரசவாதியை கொடுத்திருக்கிறார், சாந்தகுமார்.