a K Vijay Anandh review
நம்முடைய ஆதி மருத்துவமான ஆயுர்வேதா, சித்தா, மூலிகை என்று பலபெயர்களால் அழைக்கப்படும் மருத்துவம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது முன்னோர்களால் தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்படுவது. இலை, தழைகள், செடி,கொடிகள், பூக்கள்,காய், கனிகள், கொட்டைகள், வேர்கள், பட்டைகள் என்று முழுக்க முழுக்க இயற்கை சார்ந்தது. இவையனைத்தும் இயற்கையாக கொட்டிக்கிடக்கும் இடம், காடுகளும் மலைகளும். அப்படி ஒரு அடர்வனம் நடுவே உயரமான மலையில் அமைந்த கிராமத்தில் நடக்கும் கதை தான் கன்னி.
கைக்குழந்தையான ஒருகையால் மருமகளை இடுப்பில் ஏந்திக்கொண்டு இன்னொரு கையில் அருவாளுடன், பருவவயதை எட்டிப்பிடிக்கும் மூத்த மருமகளை உடன் பத்திரமாக அழைத்துக்கொண்டு ஒரு கன்னி தெய்வமாக நள்ளிரவில் அடர்ந்த காட்டிற்குள் பயணப்படுகிரார் செங்கொடி அஷ்வினி சந்திரசேகர்.
பழங்குடி மலைவாழ் மக்களின் உடைகள், அணிகலன்கள், காலணி இல்லாத தண்டைகளுடன் கூடிய வெறுங்கால்கள், குறிஞ்சி நிலப்பெண்களுக்கே உரித்தான உடலுறுதி, அத்தை அத்தை என்று அழைக்கும் மருமகள்களிடம் காட்டும் பாசம், அம்மாவின் மூத்த சகோதரனிடம் காட்டும் பணிவு, தன் குடும்பத்தையும் தாங்கள் பின்பற்ரிவரும் பாரம்பரிய மருத்துவ முறைகளையும் சிதைக்க வரும் வில்லன்களை ஆக்ரோஷமாக வதம் செய்வது என்று அஷ்வின் சந்திரசேகர் இந்தப்படத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். பெயருக்கு கூட இப்படத்தில் அவருக்கு ஜோடி இல்லாதது மிகவும் சுவராஸ்யம். தலைப்புக்கேற்றார்ப்போல் அவரை ஒரு கன்னியாகுமரியாகவே படம் முழுவதும் காட்டியிருக்கிறார்கள்.
பிளாஷ்பேக்காக இரண்டாவது பாதியில் முழுக்கதையும் விரிகிறது. நவீன மருத்துவர்களால் கைவிடப்பட்டு, இன்னும் சில நாட்கள் தான் என்று நாள் குறிக்கப்பட்ட மருத்துவராக வரும் தயாரிப்பாளர் செல்வராஜ், உண்மையில் அந்த மலைக்காட்டை வளைத்துப்போடத்தான் வருகிறார். வந்த இடத்தில் கிட்டத்தட்ட போன உயிரை திரும்பக்கொண்டு வரும் விதமான தெய்வீக சிகிச்சை அஷ்வினியின் அம்மா அவருக்கு கொடுக்கிறார். அதில் அவர் முழு ஆரோக்கியத்திற்கு திரும்பி நிலையில், நவீன மருத்துவ மாஃபியா அந்த மருத்துவ முறையை திருடி பெரும்பணம் பார்க்கப்பார்க்கிறது. அந்த போராட்டத்தில் அஷ்வினியின் அண்ணன் மணிமாறன், அண்ணி தாரா கிரிஷ் கொல்லப்பட , அவர்கள் பல தலைமுறைகளாக பாதுகாத்து வந்த இறைக்கூடையை கிணற்றில் போட்டுவிட்டு அஷ்வினியின் அம்மாவும் தற்கொலை செய்துகொள்கிறார்.
அந்த காட்சிகள் அனைத்தும் மிகவும் உயிரோட்டமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அஷ்வினியிடம் தான் அனைத்தும் இருப்பதாக வரும் ராம் பரதன் தலைமையிலான வில்லன்களை இறுதியாக வதம் செய்து, சொந்த கிராமத்திற்கு திரும்பி வரும் அஷ்வினியிடம் அரூபமாக வந்து அனைத்தையும் ஒப்படைக்கிறது அவரது குடும்பம்.
அண்ணனாக வரும் மணிமாறன், அண்ணியாக வரும் தாரா கிரிஷ் மூத்த மருமகளாக வரும் ஜானவி என்று அனைவரும் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
வில்லனாக வரும் ராம் பரதன் மிரட்டியிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.
மலையும் காடுகளும் சார்ந்த இயற்கை எழில் கொஞ்சம் இடங்களை ராஜ்குமாரின் கேமரா நேர்த்தியாக படம்பிடித்திருக்கிறது. கதைமாந்தர்களின் எளிய வாழ்வியல், பெரும்பாலானோர் கிராமங்களில் இருந்து புலம்பெயர்ந்துவிட்டதால் சிதிலமடைந்து கிடக்கும் வீடுகள், ஆள் அரவமற்ற ஆலயங்கள் என்று ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்திய விதம் அருமை.
இன்னொரு ஆகச்சிறந்த இசையமைப்பாளர் கிடைத்திருக்கிறார் எனும் அளவிற்கு செபச்டியனின் இசை மாசு இல்லாத மலைககாட்டு தென்றலாக நம்மை வருடுகிறது.
10 இயக்குநர் பாலாக்கள் சேர்ந்தாலும் இப்படி ஒரு சினிமாவை கொடுக்கமுடியாது என்கிற அளவிற்கு மிகச்சிறப்பாக கன்னி திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி. கன்னிக்கான கதையை உருவாக்கிய விதம் கதைமாந்தர்களையும் கதைகளத்தையும் தேந்தெடுத விதம், கதையை சொன்ன விதம், கதையின் மூலமாக சொல்லப்பட்ட விஷயம் என்று மாயோன் சிவா தொரப்பாடி ஒரு முழுமையான படைப்பாளியாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறார்.
இந்தக்கதையை கேட்டு அதனை படமாக்க முன்வந்த தயாரிப்பாளர்எம் செல்வராஜை பாராட்டியே ஆகவேண்டும்.
ஒரு பக்கம் வணிக சினிமாக்கள் என்கிற பெயரில் சினிமா உலகம் முற்றிலும் மனதில் ஒட்டாத சினிமாக்களை கொடுக்கும் விதமாக இயங்கிக்கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம், போட்ட காசுகூட வருமா வராதா.. என்கிற கவலைகள் இல்லாமல், படம் பார்ப்பவர்களின் மனதை தைய்க்கும் விதமாக கன்னி போன்ற திரைப்படங்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட படங்கள் ஓடும் திரையரங்குகளை தேடிச்சென்று ரசிகர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.
முத்தாய்ப்பாக,
நமது மருத்துவத்தின் உயிர் நாடியே இறை நம்பிக்கையும் முறையான இறைவழிபாடுகளும் தான். மருத்துவம் 1% இறைசக்தி 99%.. அந்த 1% மருத்துவத்தை வேண்டுமானால் திருடலாம், எங்கள் இறைவனை எப்படி திருடமுடியும்..? அவனது அருளை எப்படி திருடமுடியும்..?
அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களையும் சித்தமருத்துவத்தையும் போற்றி பாதுகாப்போம் ! அவர்களை அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்கொடுப்போம் !