a K Vijay Anandh review
இந்தியன், ரமணா போன்ற படங்கள் வெளிவந்த பிறகு ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட்டு, ஊழல்கள் ஒழிந்ததா.. என்று தெரியவில்லை… அ ந் நியன் வெளிவந்த பிறகு வணிகர்கள் வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்களை மட்டுமே தயாரித்து வழங்குகிறார்களா.. தெரியவில்லை.
ஆனால், சாமானியன் வெளியான அடுத்த நாளே ரிசர்வ் வங்கி – கடன் வசூலிப்பது பற்றிய முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.இந்த அறிவிப்பு கொஞ்ச நாட்களுக்கு முன்பே வந்திருக்ககூடாதா..? வந்திருந்தால், சங்கர நாராயணின் வளர்ப்பு மகள் நக்ஷா சரணும், அவரது கணவர் லியோசிவக்குமாரும், அவர்களது 3 வயது குழந்தையும் இப்படி அ நியாயமாக தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டேர்களே என்று தோன்றியது.
அந்தளவிற்கு ஒரு ஜனரஞ்சக கதைக்களத்தை தேர்ந்தெடுத்து ஒரு மாஸ் நாயகனின் படம் போல சாமானியனை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராகேஷ்.
மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களில் இளையராஜா பாடல்களை டியூன்களை பயன்படுத்த வேண்டுமென்றால் அது கொஞ்சம் அ ந் நியமாகத்தானிருக்கும். ஆனால், ராமராஜன் படத்தை பொருத்தவரை இளையராஜாவின் அத்தனை டியூன்களையும் காப்பிரைட் வாங்காமலே பயன்படுத்திக் கொள்லலாம் என்கிற அளவிற்கு இளையராஜா வேறு ராமராஜன் வேறு என்கிற வித்தியாசம் இல்லாத அளவிற்கு இருவரும் இணைந்தே தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்துவிட்டவர்கள்.
பயணவழி உணவகத்தில் சங்கர நாராயணனாக ராமராஜன் அறிமுகம் ஆகும் காட்சி முதல், பிளாஷ்பேக்கில் செண்பகமே செண்பகமே பாடல் ஒலிப்பது வரை அட்டகாசம்.
தனது பால்ய சினேகிதன் கிராம முனியசாமி கோயில் குருக்கள் எம் எஸ் பாஸ்கருடன் சென்னையில் இருக்கும் பாய் ராதாரவி வீட்டிற்கு வருகிறார்கள். ராமராஜன் வங்கிக்குச் செல்வது வரை – எம் எஸ் பாஸ்கர் போஸ்வெங்கட் வீட்டிற்கு செல்வது வரை , ராதாரவி பக்கத்துவீட்டு வங்கி உதவி மேலாளர் வீட்டுக்குச் செல்வது வரை என்னடா இது இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்..? என்கிற குழப்பம் எழுவதை தவிர்க்க இயலாது.
வங்கியில், ராமராஜன் ஆர் டி எக்ஸ் சூட்கேஸை ஓபன் செய்வதிலிருந்து விறுவிறுப்பாக நகரும் படம் அதன் பிறகு ஒரு நான் ஸ்டாப் சரவெடி போல வெடித்து சிதற ஆரம்பிக்கிறது.
கடனே கொடுக்காதீங்கடா என்று நீட்டிமுழக்கவில்லை.. கடனே வாங்காதீங்கடா என்று மக்களை பார்த்து இலவச அறிவுரைகள் வழங்கவில்லை. கொடுத்த கடனை வசூலிக்கும் போது கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடந்துக்கோங்கடா… விரலுக்குத்தகுந்த வீக்கம் போல கடன் வாங்குங்கடா.. என்று ஒரு மென்மையான கருத்தை விதைத்திருப்பதோடு, தன் மகளின் சாவுக்குக்காரணமான வில்லன் மைம்கோபியை சங்கறுக்கவும் செய்கிறார் ராமராஜன்.
எனக்கு இது வரும், வராது, நான் இந்த கதாபாத்திரம் செய்தால் என் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்கிற புரிதலுடன், அட்டகாசமான ஒரு மேஜர் சங்கர நாராயணன் கதாபாத்திரத்தில் ஒரு மாஸ் ரீ எண்டிரி கொடுத்திருக்கிறார் ராமராஜன்.
ராமராஜன் என்றால், ஜிகினா சட்டையையும் டவுசரும் போட்டுக்கிட்டு கரகாட்டம் ஆடிக்கிட்டு இருக்கிறவர் என்று நினைத்துக்கொண்டிருக்கும் 2கே கிட்ஸ்களுக்கு, அவர் சாமானியர்களுள் ஒரு அசாதாரமான பிறவி என்பதை இந்தப்படத்தையொட்டி அவர் வழங்கியிருக்கும் பேட்டிகள் வாயிலாக தெரியவந்திருக்கும்.
நிஜமாகவே சாமானியன் என்கிற தலைப்பில் ராமராஜனின் வாழ்க்கை வரலாற்றுப்படம் பயோபிக் எடுக்கும் அளவிற்கு அவரது வாழ்க்கை பல அதிசயங்கள் நிறைந்ததாய் அமைந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.
எம் எஸ் பாஸ்கர், ராதாரவி இருவருமே துணைக்கதாபாத்திரங்கள் என்று சொல்லிவிடமுடியாத படி படத்தின் தூண்களாக நடித்திருக்கிறார்கள்.
நக்ஷா சரண், லியோ சிவாகுமார் ஜோடி பாரதிராஜா படங்களில் அறிமுகமாகும் இளம் ஜோடிகள் போன்று சிறப்பாக மக்கள் மனதில் பதிவார்கள். ஸ்ம்ருதி வெங்கட், வினோதினி வைத்தியநாதன், அருள்மணி, சூப்பர்குட் சுப்ரமணி, அறந்தாங்கி நிஷா, தீபா மற்றும் குணா ஜி போன்றவர்கள் அவரவர்க்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நிறைவாக வாழ்ந்திருக்கிறார்கள்.
வில்லத்தனம் காட்டியிருக்கும் மைம்கோபி, போஸ்வெங்கட் ஜொலித்திருக்கிறார்கள். சங்கர நாராயணனை துணிச்சலுடன் பேட்டியெடுக்கச் செல்லும் பத்திரிகையாளராக அபரனா நதி படத்திற்கு வலுச்சேர்த்திருக்கிறார்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்கள் முன்னாலேயே அசால்டாக நடித்துச்செல்லும் கே எஸ் ரவிக்குமார், இதில் குருவிற்கு சிஷ்யன் காட்டும் பவ்யத்தோடு சிறப்பாக நடித்திருக்கிறார்.
வங்கியில் லோன் போட்டு வாங்கினால் அது சொந்தமாக வாங்கிய வீடு அல்ல, வங்கியின் வீடு போன்ற யதார்த்தமான அதே நேரம் வலிமையான வசனங்கள் படத்திற்கு பெரிய பலம். கார்த்திக்குமாரின் கதை, இன்றைய காலகட்ட அத்யாவசியத்தேவை.
முன்பே குறிப்பிட்டதுபோல ராமராஜன் படங்களையும் இளையராஜாவையும் பிரிக்கமுடியுமா..? இந்தக்கால ராமராஜனாக அவர் திரையில் தோன்றினால், அந்தக்கால ராமராஜனாக திரைக்குப்பின்னால் அமைந்த இளையராஜாவின் இசை வசீகரித்திருக்கின்றது.
எக்சட்ரா என்ப்டெர்டெயின்மெண்ட் வி மதியழகன் இப்படி ஒரு படத்தை தயாரித்ததை எண்ணி பெருமைப்படலாம்.
சாமானிய ரசிகர்கள் மட்டுமல்ல, அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் படமாக வெளியாகியிருக்கிறது ராமராஜனின் சாமானியன்.