PT Sir

Rating 4.5/5

100

a K Vijay Anandh review

இந்தப் படம் பல வகைகளில் இளைஞர்களுக்கு உந்துதல் கொடுக்கும் படமாகவும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்தில் நிற்காவிட்டாலும் பரவாயில்லை அவர்களது நிலைமையை பரிகசிக்காதீர்கள் என்கிற நல்ல செய்தியை சொல்லும் படமாகவும் வெளி வந்திருக்கிறது.

படத்தின் மையக்கருவாக எடுத்துக் கொள்ளப்பட்ட உணர்வு பூர்வமான விஷயம் பாராட்டத்தக்கது. அதுமட்டுமல்லாமல் கல்வி நிறுவனங்கள் வைத்திருக்கும் டாக்டர் ஐசரி K  கணேஷ், நாம் சொல்லாமல் இந்த கதையை யார் சொல்லுவது என்கிற முடிவுடன் இயக்குனர் அதுவும் அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் க்கு முழுமையான படைப்பு சுதந்திரம் வழங்கி தயாரித்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

பிடி சார் கனகவேல் இன் அம்மா தேவதர்ஷினி முதல் பக்கத்து வீட்டு பள்ளிக்குப் போகும் ஐந்து வயது சிறுமி முதல் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டு அதனை சகித்துக் கொண்டுதான் வாழ வேண்டும் என்கிற ரீதியில் அமைக்கப்பட்ட அந்த ஒரு காட்சி படத்தின் உயிர் நாடியாக அமைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக அம்மா தங்கை காதலி மற்றும் பக்கத்து வீட்டு பெண்கள் புடை சூழ, நடுவில் கோபியர் சூழ் கிருஷ்ணனாக  நின்று அனைத்தையும் கேட்ட பிறகு விஸ்வரூபம் எடுக்கும் கனகவேல் ஆதி – சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் ஆகச்சிறந்த காட்சி அமைப்பாக இந்த காட்சி நிலைத்து நிற்கும். இந்த காட்சியை உருவாக்கிய கார்த்திக் வேணுகோபால், ஒளிப்பதிவு செய்த மாதேஷ் மாணிக்கம், பின்னணி இசை வழங்கிய ஆதி, இந்த காட்சியில் நடித்த ஆதி, தேவதர்ஷினி, காஷ்மிரா பர்தேசி அந்த சிறுமி உள்ளிட்ட நடிகர்கள் அத்தனை பேருக்கும் பாராட்டுக்கள்.

தியாகராஜன், கல்விக் குழுமங்களின் தலைவராக ஒரு மெஜஸ்டிக் லுக்குடன் அறிமுகமாகி பயமுறுத்தும் வில்லனாக அடையாளம் காட்டப்பட்டிருக்கிறார்.  எந்தவிதமான ஈகோக்களும் இன்றி அந்த கதாபாத்திரத்தில் இயக்குனர் ஆசைப்பட்டபடி நடித்திருப்பதில், நடிப்பின் மீது அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பை முழுமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

எம்ஜிஆர் – சிவாஜி,  ரஜினி – கமல், பிரபு – கார்த்திக்,  சிம்பு : தனுஷ்,  சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி அந்த வரிசையில் ஜிவி பிரகாஷ் .  ஆதி என்று சொல்லலாம். ஆனாலும் இந்த இணைக்கு இசையமைப்பாளர் என்கிற கூடுதல் தகுதியும் இருப்பது இன்னும் சிறப்பு.

ஒரு பிடி சாரால் மாணவர்களின் ஆரோக்கியம் சார்ந்தும் இயங்க முடியும், பர்சனல் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்தும் அவர்களை மீட்டெடுக்க முடியும் என்பதாக அமைந்த இந்த படத்தில் ஆதி மிகச் சிறப்பாக பொருந்தி போயிருக்கிறார். மிகவும் இயல்பாக தனது அறிவுப்பூர்வமான திட்டமிடல்களால், லாஜிக் குறைபாடுகள் இன்றி ஹீரோவாக ஜொலிக்கிறார்.

காஷ்மிரா பர்தேசி , அழகான ஆங்கில ஆசிரியை ஆக, மிரட்டலான கிரிமினல் லாயர் பிரபுவின் செல்ல மகளாக, ஆதிக்கு உறுதுணையாக நிற்கும் காதலியாக நிறைவாக நடித்திருக்கிறார்.

பிடி சார் சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்புகளில்  குட்டி நயன்தாரா என்கிற பட்டப்பெயருடன் நிகழ்ச்சி தொகுப்பாளரால் அறிமுகம் செய்யப்பட்ட அனிகா சுரேந்திரன் சம்பந்தப்பட்ட நீதிமன்ற காட்சிகளில், நயன்தாராவின் அறம் படத்தை பார்ப்பது போன்று ஒரு பிரம்மாண்டத்தை வழங்கி இருக்கிறார். உபயம் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் தான் என்றாலும், அனிகா சுரேந்திரன் க்கு – மிகச் சிறப்பான ஒரு உடல் மொழி இருக்கின்றது  என்பதை மறுக்க முடியாது. நிச்சயமாக நயன்தாரா போலவே ஒரு நீண்ட கலைப் பயணம் இவருக்கு காத்திருக்கின்றது.

தமிழ் திரைப்படங்களில் நீதிபதிகளாக வரும் பெரும்பாலான நடிகர்களுமே சிறப்பாக நடித்து இருக்கிறார்கள் என்றாலும், ஒரு லெஜன்ட், நீதிபதி இருக்கையில் அமரும் பொழுது. அந்த கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் மெருகேற்றப்பட்டதாய் அமைந்து விடுகிறது. அந்த வகையில் கே பாக்யராஜ், மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இளைய திலகம் பிரபு,  பாதிக்கப்பட்டவரின் சார்பாக வக்கீலாக வாதிடும் காட்சிகள் அருமை. குற்றம் சாட்டப்பட்ட தியாகராஜன் சார்பாக வாதாடும் கெத்தான ஒரு டெல்லி வழக்கறிஞராக மதுவந்தி, இந்த கதாபாத்திரத்திற்கு இவரை விட சிறப்பாக இன்னொருவரை யோசித்து இருக்க முடியாது தான்.

மனோ பாலாவை மிகச் சரியாக ரீப்ளேஸ் செய்திருக்கிறார் பட்டிமன்ற ராஜா, குறிப்பாக மைக் டைசனுடன் உரையாடும் காட்சிகளில் .

பாண்டியராஜன், முனிஷ் காந்த், இளவரசு, வினோதினி வைத்தியநாதன், அபிநட்சத்திரா உள்ளிட்டவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

படத்தில் காட்டப்படும் அங்கு மேஜிக் சுவர் அழகான கற்பனை, இன்றைய தேதியில் இப்படி ஒரு சுவர் வீதி தோறும் அமைக்கப்பட்டால், காவல் நிலையங்களுக்கான தேவையே இருக்காது என்பது நிதர்சனம்.

பிடி சாருக்கு ஒரு ராயல் சல்யூட் !