a K Vijay Anandh review
இந்த படத்தை பார்க்க தவறுபவர்கள் நல்ல படங்களை தேடிச் சென்று பார்க்கும் வித்தையை அறியான், என்று சொன்னால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு ஒரே இலக்கை நோக்கி பயணிக்கும் கதை என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும் திரைக்கதை ஒரு கட்டத்தில் அது ஒன்றல்ல இரண்டு என்பதாக விரிவதும், மற்றும் சைலன்ட் என்கிற கதாபாத்திரத்தை – அந்த கதாபாத்திரம் ஏன் சைலன்ட் என்று அழைக்கப்படுகிறது என்பதாக விவரிக்கும் காட்சி அதியற்புதம். ஒரு அறிமுக இயக்குனராக, இந்த முருகன் நிஜமாகவே திரைக்கதை அமைப்பதிலும் அதனை சரியாக சொல்வதிலும் அதிக மெனக்கட்டிருப்பது தெரிகிறது.
வழக்கம் போல, எப்படி இப்படிப்பட்ட நல்ல கதைகள் வெற்றியை மட்டுமே தேடிச் செல்கிறது , அதாவது நடிகர் வெற்றியை மட்டுமே தேடிச் செல்கிறது என்பது ஆச்சரியம் தான்! என்றாலும் இந்த கதை வியாபார ரீதியிலான வெற்றியையும் தேடிச் செல்லும் என்பதை ஆச்சரியம் இல்லை. Wolf என்கிற கதாபாத்திரத்தில் வெற்றி மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார். தனது காதலை தியாகம் செய்யும் இடம் அருமை.
அக்ஷயா கந்தமுதன், அழகான நாயகியாக காதலன் விஷத்தை கொடுத்தாலும் கேள்வி கேட்காமல் அருந்தும் அப்பாவி பெண்ணாக மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
சார்லி பாலு, இந்த நடிகரை ஏன் அடிக்கடி திரையில் காண முடியவில்லை என்கிற கேள்விதான் எழுகிறது. மிகச் சிறப்பான ஒரு நடிகர், தொடர்ந்து தமிழ் திரையுலகம் இவரை நிறைய படங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
காவல்துறை அதிகாரியாக வரும் சாய் தீனா, சம்பந்தப்பட்ட காட்சிகள் பொழுதுபோக்கின் உச்சம். காக்கிச்சட்டைக்குள்ளும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும் என்பதற்கு இவரது கதாபாத்திரமும் இவருடன் நடனத்தில் பார்ட்னராக வரும் சக காவல்துறை அதிகாரியின் கதாபாத்திரமும் உதாரணம். இவர்களது கதாபாத்திரங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.
அட என்னங்கடா இது பொள்ளாச்சி சம்பவத்தை விட மாட்டாங்க போலயே என்று எண்ணும் பொழுது, யாரும் எதிர்பாராத வகையில் துப்பாக்கியை எடுத்து அத்தனை பேரையும் போட்டு தள்ளும் வினுப்ரியாவின் கதாபாத்திரம், பெண்களுக்கு ஒரு தன்னம்பிக்கை டானிக். அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
விவேக் சரோவின் இசை அபிலாஷின் ஒளிப்பதிவு இரண்டுமே மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது என்றால், தொழில்நுட்ப ரீதியாக குரு பிரதீப்பின் எடிட்டிங் எல்லாவற்றையும் முந்தி இருக்கிறது.
தன்னை ஒரு கூட்டத்தில் தள்ளி நிர்வாணப்படுத்த முயன்றவனின் நிர்வாண சடலத்தின் மீது அவனது மானத்தை மறைக்க ஒரு துணியை போட்டுச் செல்லும் காட்சி, தமிழ் சினிமாக்களில் வந்த மிகச் சிறப்பான காட்சிகளில் முதன்மையானது என்றால் அது மிகை அல்ல.
பகலறியான், தோல்வியறியான்!!