ஹிட் லிஸ்ட்

a K. Vijay Anandh review - Rating 4.5/5

305

இவய்ங்கள்லாம் கொரானால சாகாம இன்னுமா உயிரோடு இருக்காய்ங்க என்று ஆதங்கப்படும் அளவிற்கு,  மனித இனம் மனித நேயத்தை மறந்து பேயாட்டம் போட ஆரம்பித்துவிட்டது, கொரானா எனும் அரக்கனால் அடுக்களையில் முடங்கிக்கொண்டிருந்ததை மறந்துவிட்டு. அப்படிப்பட்டவர்களுக்கு, கொரானா காலகட்டத்தை  நினைவு படுத்தி, ஆடாதீங்கடா என்று சொல்லாமல் சொல்லும் விதமாக ஹிட்லிஸ்ட் வெளியாகியிருக்கிறது. ஹிட் லிஸ்ட் இயக்குநர்கள் மற்றும் கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட தயாரிப்பாளர்களுக்கு முதலில் நன்றி!

அஜித் முதல் சிவகார்த்திகேயன் வரை அவர்களின் அறிமுகப்படங்கள் இவ்வளவு மாஸாக, அழுத்தமாக ஒரு சமூகப்பிரச்சினையுடன் வெளிவந்திருக்கவில்லை என்பது தான் நிதர்சனம். அந்த வகையில், தந்தை  விக்ரமன்,  நட்பும் காதலும் கலந்த ஒரு மென்மையான கதையுடன் இயக்குநராக எட்டடி பாய்ந்தா என்றால், அவரது மகன் விஜய் கனிஷ்க்கா ஒரு அதிரடி ஆக்‌ஷன் நாயகனாக அறிமுகமாகி பதினாறடி பாய்ந்திருக்கிறார்.

காலையில் அதுவும் யாராச்சும் எழுப்பிவிட்டால் தான், கட்டில்களருகே காலி பீர்பாட்டில்களுடன் எழுந்திருக்கும் தமிழ் சினிமா கதா நாயகர்களுக்கு மத்தியில், அலாரம் வைத்து எழுந்து சூரிய நமஸ்காரம் செய்யும் ஹீரோ, ஆபீஸ்ல என்னடான்னா அதுவும் ஐடி ஆபீஸ்ல அனைத்து பெண்களாலும் அண்ணா அண்ணா என்று அழைக்கப்படும் ஹீரோ, அட மாட்டுக்கறி என் உரிமை என்று அடித்துப்பிடித்து சாப்பிடும் ஹீரோக்களுக்கு மத்தியில் வள்ளலாரின் ஜீவகாருண்யத்தை பின்பற்றும் ஹீரோ… அட நாம பார்ப்பது தமிழ் சினிமாதானா என்று யோசிக்கவைத்துவிடுகிறார்கள் ஹீரோ விஜய்கனிஷ்க்காவும் இப்படிப்பட்ட நல்ல கதையை எழுதி இயக்கிய இரட்டை இயக்கு நர்கள் சூரியக்கதிர் காக்கல்லர் மற்றும் கே கார்த்திகேயன் ஆகியோர்!

இது வெறும் பூப்பறிக்கிற கை இல்லடா..  தேவைப்பட்டால் அசுரர்களையும் அழிக்கும் கை என்று  முகமூடி மனிதனின் கட்டளைக்கு ஏற்ப ருத்ரதாண்டவமும் ஆடியிருக்கிறார் விஜய் கனிஷ்க்கா, அது ஏன் எதற்கு என்பதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

அறிமுக நாயகன் என்று தான் பேரு, ஆனால், ஒவ்வொரு ஷாட்டிலும் அவர் இருக்கிறார். தாய்க்கு செல்லமகனாக, தங்கைக்கு பாசமான அண்ணனாக, சமூகத்திற்கு பொறுப்புள்ள இளைஞனாக, அ நீதிகளை அழிக்கும் ஆபத்பாந்தவனாக என்று ஒவ்வொரு ஷாட்டிலும் பல்வேறு பரிணாமங்கள் எடுத்திருக்கிறார்  விஜய் கனிஷ்க்கா. முதல்ப்படத்திலேயே ஜெயிலுக்கு போவது நல்ல சகுனம், ஒரு சமூகப்பொறுப்புள்ள நாயகனாக அவருக்கு நீண்ட பயணம் காத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

சித்தாரா,  34 வருட இடைவெளியில் தந்தை மற்றும் மகன் ஆகியோரை அழகாக கையைப்பிடித்து திரையுலகிற்கு அழைத்து வந்திருக்கும் பெருமைக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார். அபி ந்ட்சத்திரா வழக்கம் போல, சிறப்பாக நடித்திருக்கிறார்.

சரத்குமார், கம்பீரமான காவல்துறை அதிகாரியாக, நாயகனை முழுவதுமாக நம்பி ஏமாந்துவிடாமல், காவல்துறையின் கெத்தை நிலை நாட்டியிருக்கிறார். ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோக்கள் போன்று கொண்டாடப்பட வேண்டிய தகுதிகள் நிறைந்த விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான இந்திய நடிகர்களுள் இவரும் ஒருவர் என்றால் அது மிகையாகாது.

ஒரு நாளில் வெளியாகியிருக்கும் இரண்டு பெரிய படங்களிலுமே வில்லனின் பெயர் துரோகத்தின் பெயர் கருணா என்று வைத்திருக்கிறார்கள். கருணை என்கிற அழகான தமிழ்ச்சொல், இன்று  வில்லன்களின் பெயர் தாங்கி நிற்பது காலம் செய்த கோலம். இதில், டாக்டர் கருணாகரன் என்கிற வில்லன் கதாபாத்திரத்திற்கு இவரை விட்டால் வேறு யாரும் பொருத்தமாக இருக்கமுடியாது என்கிற அளவிற்கு கெளதம் வாசுதேவமேனன் சிறப்பாக நடித்திருக்கிறார்.

சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.ரெடின் கிங்ஸிலிக்காச்சும் அவருடைய மனைவியுடன் சேர்ந்து எலி பிடிக்கிற வேலை, ஆனால் படத்துக்குப்படம் காமெடியில் பட்டையை கிளப்பும் பாலசரவணனுக்கு ஒரு வேலையும் இல்லை, அந்தளவிற்கு படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக செல்கிறது.

கே ஜி எஃப் வில்லன் ராமச்சந்திர ராஜுவை விஜய் கனிஷ்க்கா நய்யப்புடைப்பது 100% நம்பும்படி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

சி சத்யா, கே ராம்சரண், ஜான் ஆபிரகாம் ஆகியோரின் இசை, ஒளிப்பதிவும் மற்றும் எடிட்டிங் ஆகியவை ஹிட் லிஸ்ட்டின் ஹிட்டிற்கு பேருதவியாய் இருக்கப்போகின்றன.

தனது உதவியாளர்களை இரண்டிருண்டு இயக்குநர்களாக அறிமுகப்படுத்த ஒரு பெரிய மனது வேண்டும், அதைவிட பெரிய மனதுகொண்டவராக தனது குரு விக்ரமனின் மகனை தனது தயாரிப்பில் அறிமுகப்படுத்தவும் செய்திருக்கிறார் கே எஸ் ரவிக்குமார், அவரது பிறந்த நாளில் தமிழ்த்திரைவானில் உதித்த நட்சத்திரமாய் விஜய் கனிஷ்க்காவும்  ஜொலிப்பார்.

ஹிட் படங்களின் வரிசையில் இந்த ஹிட் லிஸ்ட்டும் !