மதுரைக்காரனுக்கு சொக்கனாக நடிக்கும் வாய்ப்பு, இதுக்கு மேல என்ன வேணும்..? இப்பிறவியின் பலனை அடைந்துவிட்டார் எனும் அளவிற்கு ஆகச்சிறந்த கதாபாத்திரம் சூரிக்கு. விசுவாசமா../? நியாயமா..? என்கிற கேள்விகளுக்கு இவர் கொடுக்கும் விடையை கர்ணன் எடுத்திருந்தால் மகாபாரதத்தின் போக்கே மாறியிருக்கும்.
அப்படியான கருத்தை அதாவது விசுவாசமாக இருப்பதை விட நியாயமாக இருங்கடா என்று கருணாவிற்கு கருணாவின் விசுவாசியை கொண்டே பாடம் நடத்தியிருக்கிறார் இயக்குநர் துரை செந்தில் குமார்.
முதல், 5 நிமிடங்களுக்குள் மையக்கருவை சொல்லிவிடவேண்டும், அது நிறைவேறுகிறதா இல்லையா என்பதே திரைக்கதையாக இருக்கவேண்டும் என்கிற சினிமா இலக்கணத்திற்கு முழுமையான உதாரணமாக கருடன் வெளியாகியிருக்கிறது.
எங்கோ தேனி பக்கத்தில் இருக்கும் கோம்பை அம்மன் கோயில், அதற்கு சென்னையில் இருக்கும் 300 கோடி மதிப்பிலான சொத்து, அதையறிந்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் விடுவாரா..? ஆட்டையைப்போட பார்க்கிறார், அதற்குதானய்யா அவர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஆர் வி உதயகுமார், ஆர்ப்பட்டங்கள் இன்றி கத்தலின்றி சத்தமின்றி மென்மையான வார்த்தைகளாலேயே மிரட்டும் வில்லனாக நடித்து அசத்தியிருக்கிறார்.
ஜமீன் குடும்ப வாரிசும் ஆலய நிர்வாகியுமான வடிவுக்கரசி கதாபாத்திரம் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்லாயி அப்பத்தாவாக எப்பொழுதும் ஒரு ஜோல்னா பையுடன் வரும் வடிவுக்கரசி அற்புதம். ஜமீன் வாரிசு கருணாகரனாக உன்னி கிருஷ்ணன், சிறப்பான தேர்வு, வாழ்ந்து கெட்ட குடும்பத்து வாரிசாக, மறுபடியும் தலை நிமிர தப்பான வழியில் செல்லும் காட்சிகள் யதார்த்தம். அவரது மனைவியாக பாரதிகண்ணம்மா ரோஷினி ஹரியப்பன் சிறப்பாக நடித்திருக்கிறார். பாசமான மனைவியாக அவர் காட்டும் வில்லத்தனம், ரசிக்கமுடிகிறது.
இன்னொரு பக்கம், உன்னியின் நண்பன் ஆதியாக வரும் சசிகுமார், வழக்கம் போல இவரைவிட்டால் இன்னொருவரை இக்கதாபாத்திரத்தில் நினைத்து பார்க்க இயலாத அளவிற்கு நடித்திருக்கிறார். அவரது மனைவியாக வரும் ஷிவிதா. அழகும் திறமையும் பளிச்சிடும் நடிகை. கணவனை இழந்துவிட்ட நிலையில் மகனையாவது காப்பாற்றிவிடவேண்டும் என்று தவிக்கும் காட்சிகளில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். நண்பன தான பார்க்கப்போறோம் என்று கைக்குழந்தையுடன் காட்டுக்கு தனியாக வந்து மாண்டுபோகும் சசிக்குமார் கலங்க வைத்திருக்கிறார்.
சூரி, மொத்தப்படத்துலயும் இவர் பேசும் வசனங்கள் பத்து பக்கங்கள் தான் இருக்கும். அதிலும் படபடவென்று மூன்று இடங்களில் நீளமான வசனங்களை மூச்சு விடாமல் பேசும் இடங்கள் அருமை. அதையெல்லாம் தாண்டி, மிகச்சிறப்பான உடல்மொழியோடு சொக்கனாக வாழ்ந்திருக்கிறார். என்னதான் விசுவாசியாக இருந்தாலும், கோயில் சொத்தைக்கூட களவாட துணை நின்றாலும், அநியாயமாக, அப்பாவிகளை பலிவாங்க நினைக்கும் நேரத்தில் அதை தடுத்து வேறு வழியில்லாமல், மற்றவர் கை கூட படவிடாமல் தடுத்த கைகளாலேயே உன்னி கிருஷ்ணனை வதம் செய்யும் இடங்கள் அருமை.
சமுத்திரக்கனி, ” அதிகாரமட்டத்திற்காக வேலை செய்வேன், ஆனால் கொலை செய்யமாட்டேன்..” என்று துணிந்து நின்று காவல்துறைக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
விண்ணரசி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரேவதி சர்மாவும் அருமையாக நடித்திருக்கிறார்.
மைம்கோபி, தியேட்டர் நாகராஜாக பயமுறுத்தியிருக்கிறார்.
ஒரு அக்மார்க் கம்ர்ஷியல் ஆக்ஷன் படத்தில், சின்ன சின்ன நல்ல விஷயங்களை அழகாக சொல்லியிருக்கிறார்கள்.
இன்றைய நிலையில், நம் கண்களுக்கு தெரிந்து நம்மை மேலே இருந்து கண்காணிப்பவை சேட்டிலைட்டுகள். அத்துடன் கூர்மையான பார்வைத்திறன் உடைய பறவையான கருடனையும் இணைத்து, கருடன் பார்வையில் அனைத்தும் நடப்பதாக காட்சிப்படுத்தி அதையே டைட்டிலாக வைத்திருக்கும் விதமும் பாராட்டத்தக்கது.
ஆர்தர் ஏ வில்சனின் ஒளிப்பதிவு, யுவன் சங்கர் ராஜாவின் இசை, பிரதீப் ஈ ராகவின் எடிட்டிங்கும் அருமையாக கைகொடுத்திருக்கின்றன.
கருடன், ஆகச்சிறந்த மண் சார்ந்த படைப்புகளுள் ஒன்று !