a K.Vijay Anandh review
ரயில் பயணங்களில் கதை சொல்வதில் இருந்து விமான பயணங்களில் கதை சொல்வது என்கிற பரிணாம வளர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது.
அதிலும் முதன் முதலில் பாட்டியுடன் ரஜினி படம் பார்த்ததிலிருந்து, அட இன்னும் சொல்லப்போனால் திரையில் இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் அறிமுகமானபோது தான் பிறந்ததிலிருந்து, வாழ்க்கையில் ஜெயித்தது வரை – மிகவும் போராடி ஜெயித்தது வரை ஒரு சுயசரிதை படப்பாணியில் கதை சொல்லிய விதம் குறிப்பாக விமானத்தில் உடன் பயணிக்கும் கோட் டைரக்டர் வெங்கட் பிரபுவிற்கும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் சுவராஸ்யம் குன்றாமல் கதை சொல்லிய விதம் அருமை.
ஆனந்த், ஆதி, இர்பான் , ராஜேஷ், பாலா , மோனிகா ஆர் ஜே ஆனந்தி மற்றும் வில்லன் குழுவில் குஹன் என்று அத்தனை பேரையும் பள்ளிப் பருவம் முதல் கல்லூரி பருவம் மற்றும் அதற்கு அடுத்த கட்டம் என்று மூன்று பருவங்களிலும் உடல் பருமன் உடல் இளைத்தல் முகம் மழித்தல் என்று பல்வேறு வகையான மெனக்கடல்களை செய்து அந்த பருவங்களுக்கு பொருத்தமாக காட்டிய விதம் அருமை.
அத்தனை பசங்க இருக்கின்றார்களே ஒவ்வொருவருக்கும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று யோசிக்கும் பொழுதே அவர்கள் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கொடுத்து துணை கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் பெற்றோர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் முக்கியமாக நாயகனின் பாட்டி உட்பட அனைவருக்கும் ஸ்கோர் செய்ய வாய்ப்பு அளித்த விதம் பாராட்டத்தக்கது. லீலா பாட்டி, அம்மாவாக வரும் விஷாலினி, அப்பாவாக வரும் குமரவேல் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களும் நினைவில் நிற்கும் அளவிற்கு நடித்திருக்கிறார்கள். சிங்கப்பூரில் வசிக்கும் மதுரை அழகர் ஆக வரும் வினோத் கிட்டத்தட்ட இரண்டாவது பாதியை, தன்னுடைய மதுரை வெள்ளந்தித்தனமான நடிப்பின் மூலம் முழுமையாக ஆக்கிரமித்து தூக்கி நிறுத்தி இருக்கிறார்.
youtube பிரபலங்களான இர்ஃபான் மற்றும் மதன் கௌரி, தொலைக்காட்சி பிரபலங்களான கே பி ஒய் பாலா மற்றும் ஆர் ஜே விஜய், ஆனந்தி உள்ளிட்டவர்களை கச்சிதமாக பயன்படுத்தி கதைக்களத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.
குறிப்பாக, ஆதியாக வரும் ஆர் ஜே விஜய் அநியாயத்திற்கு நடித்து அசத்தியிருக்கிறார். youtube களில் உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு வரும் இர்ஃபான் இதிலும் ஒரு சமையல் கலைஞராகவே நடித்திருக்கிறார். இதில் நடித்திருக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் ஒரு நீண்ட இன்னிங்ஸ் காத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல, சரியாக பயன்படுத்தி உச்சத்தை தொடுவது அவரவர் கைகளில் இருக்கிறது.
ஒரு கல்லூரி வாழ்க்கையை நான்கைந்து காட்சிகளில் காட்டிவிடும் காட்சி அமைப்பும் சுவராஸ்யமாக இருக்கிறது. வறட்சியான கல்லூரி வாழ்க்கையில் குளிர்ச்சியாக வரும் மாயா டீச்சர் ஐஸ்வர்யாவை ஹீரோ காதலித்து தொலைத்து விடுவாரோ என்கிற ஒரு பதைப்பதைப்பிற்கு கண்ணம்மாவாக வரும் பவானி ஸ்ரீ முற்றுப்புள்ளி வைத்து விடுவது ஒரு ஆறுதல்.
எவர்கிரீன் கல்லூரி மாணவராகவே நடித்துக் கொண்டிருந்தார் மறைந்த நடிகர் முரளி. இன்றைய காலகட்டத்தில் ஒரு கரடு முரடான கல்லூரி மாணவராக அவர் நடித்திருந்தால் இப்படித் தான் இருந்திருக்க கூடும் என்கிற அளவிற்கு ஆனந்த் சிறப்பாக நடித்து, Atlast you became a star தம்பி என்று மற்றவர்கள் பாராட்டும் அளவிற்கு Star ஆகியிருக்கிறார். அது மட்டுமல்ல சிறப்பான கதை அமைந்து விட்டால் anyone can become a star என்கிற உந்துதலையும் விதைத்திருக்கிறார், ஒரு இயக்குனராகவும்.
ஒளிப்பதிவாளர் தமிழ்ச்செல்வன், இசையமைப்பாளர் ஏஎச் காஷிப், எடிட்டர் ஃபென்னி ஆலிவர் ஆகியோரின் தொழில்நுட்ப பங்களிப்பு படத்திற்கு போதுமான அளவில் வலு சேர்த்திருக்கிறது.
நட்பிலும், காதலிலும், வாழ்க்கையிலும் உறுதியான நம்பிக்கை வைக்க வேண்டும் என்கிற கருத்தை இலை மறை காயாக விதைத்திருக்கும் நண்பன் ஒருவன் வந்த பிறகு, நல்ல ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்கு !