நந்தன்

mysixer rating 5/5

187

a K. Vijay Anandh review

SC என்பது இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட அதிகாரப்பூர்வமான ஒரு சமூக பிரிவு .கல்வி, வேலைவாய்ப்பு , பொருளாதாரம் மற்றும் பொது நிர்வாக அதிகாரப்பங்கீடு ஆகியவற்றில் அந்த சமூகத்தினருக்கான வாய்ப்புகளை உறுதிசெய்யும் பொருட்டு, இட ஒதுக்கீட்டு பலன்களை பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு இந்திய அரசியல் சாசனம் வழி வகுத்து வைத்திருக்கிறது.

என்னதான் கல்வி , வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அந்த இட ஒதுக்கீட்டு வாய்ப்புகளை பயன்படுத்தி ஓரளவு சமூக அந்தஸ்துகளை பெற்றாலும் , பொது நிர்வாக அமைப்புகள் என்று வரும் பொழுது அவர்களுக்கான வாய்ப்புகளை அவர்களால் முழுமையாக பயன்படுத்தி கொள்ள முடிகிறதா ? என்றால் இல்லை என்பதே வெட்கக்கேடான பதிலாக இருக்கிறது .

குறிப்பாக தமிழகத்தில், ஜனநாயக முறைப்படி ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்படட குறிப்பாக SC பிரதிநிதிகளுக்கென்று Reserve செய்யப்படட ஊராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களால் பதவி பிரமாணம் கூட எடுத்துக்கொள்ள முடியாத நிலை அப்படியே பதவியேற்று கொண்டாலும் அந்த பகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஆதிக்கசாதி என்று சொல்லப்படக்கூடிய சமூகத்தினரால், பெரும் மன உளைசலுக்கு ஆளாக்கப்பட்டு பணி செய்ய முடியாமல் ராஜினாமா செய்துவிட்டு ஓடிவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் .

அப்படிப்பட்ட துரதிஷ்டமான நிலையை கையில் எடுத்து மிகவும் அற்புதமாக திரைக்கதை அமைத்து, முக்கியமாக சொல்வதாக இருந்தால் மிகவும் உண்மையாக திரைக்கதை அமைத்து நந்தன் படத்தை இயக்கியிருக்கிறார் இரா சரவணன்.

அந்த குறிப்பிடட பகுதியின் ஆதிக்கசாதி ரெகுலர் தலைவராக வரும் பாலாஜி சக்திவேல் சாதீய வன்மத்தை காட்சிக்கு காட்சி கக்குகிறார். பதவி வெறி, reserve தொகுதி ஆக்கப்பட்ட நிலையில் அதிகாரம் கைவிட்டுப்போய்விடுமோ என்கிற விரக்தி எல்லாம் சேர்ந்து அவரை கொடூர மிருகமாக்குகிறது.

அந்த மிருகத்தின் உண்மையான முகம் தெரியாமல் அவர்களின் விசுவாச வேலையாளாய் அம்பேத் குமார் என்கிற உண்மை பெயர் மறந்து கூழ் பானையாய் , பாலாஜி சக்திவேலின் காலடியில் உருண்டு கொண்டிருக்கும் சசிகுமார். என்னதான் அடிமை சமூகம் என்று சொல்லப்படும் சமூகத்தில் வாக்கப்பட்டாலும் சுயமாய் சுயமரியாதையுடன் சுயதொழில் செய்து பிழைக்கும் மானமுள்ள மங்கையாக சுருதி பெரியசாமி. பள்ளிக்கூடமும் , சமூகமும் சொல்லித்தராத பாடத்தை, வெட்டி வீசினாலும் உடைத்து புதைத்தாலும் மீண்டும் மீண்டும் முளைத்து காட்டும் காட்டாமணக்கு மூலம் கற்றுக்கொள்ளும் அவர்களது மகன். இந்த மூன்று பேரும் படம் முடிந்தும் ரசிகர்கள் நினைவை விட்டு அகல மாட்டார்கள் .

இந்தப்படத்தில் தான் ஒரு முழுமையான நடிகராக ஆகியிருக்கிறார் என்று சொல்லத்தக்க கனமான கதாபாத்திரம் சசிகுமாருக்கு, மிகசிறப்பாக நடித்திருக்கிறார். பிக்பாஸ் இல் இருந்து வந்த நடிகையர்களில் ஆகச்சிறந்த கதாபாத்திரம் அமைந்திருப்பது சுருதி பெரியசாமிக்கு தான் எனும் அளவிற்கு அவரும் மிகசிறப்பாக நடித்திருக்கிறார் .

வழக்கம் போல சமுத்திரக்கனிக்கு ஒரு போராளித்தனமான அரசு அலுவலர் கதாபாத்திரம் , நிறைவாக நடித்திருக்கிறார்.

ஒரு தேசம் முன்னேற அந்த தேசத்தில் வசிக்கும் அனைத்து சமூகத்த்தினரின் பங்களிப்பும் அவசியம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் . விளிம்பு நிலை சமூகத்தினரின் பங்களிப்பை பெற அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் குறைந்த பட்சம் அரசியலமைப்பு அவர்களுக்கு கொடுத்திருக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி கொள்வதில் இடைஞ்சல் கொடுக்காமலாவது இருக்க வேண்டும் .

நந்தன் படம் பல சாதி வெறி பிடித்த குறிப்பாக பதவி வெறிபிடித்த சமூக பலத்துடன் இயங்கும் தனி நபர்களை திருத்தினால் அதுவே அப்படத்தின் மிகசிறந்த வெற்றி.

இப்படி ஒரு உணர்வுப்பூர்வமான கதைக்களத்தை கையாள இரா சரவணனுக்கு தோள் கொடுத்த ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள், நந்தன் படத்தை பார்ப்பதன் மூலம் ரசிகர்களும் அந்த பெருமையை பங்குபோட்டுக்கொள்ளுங்கள்.

இன்னுமா இப்படி நடக்கிறது என்று கேட்பவர்களை கையைப்பிடித்து அழைத்து சென்று காண்பிக்க நான் தயார் என்று இரா சரவணன் முன்னுரை கொடுத்து இந்த படத்தை தொடங்குகிறார். அவருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் …

அப்படி கேட்கும் சாதாரண மனிதர்களை கையைப்பிடித்து அழைத்து சென்று நிரூபிக்க வேண்டியதில்லை , ஏனென்றால் அந்த அவல நிலையில் அவர்களின் பங்கு வெறும் 1% கூட இல்லை அல்லது அதை அதிகாரப்பூர்வமாக களையும் இடத்தில் அவர்கள் இல்லை.

மாறாக , சமூக நீதியை நிலை நாட்டுவதில் நாங்கள் தான் முன்னோடி என்று மக்களை ஏமாற்றிக்கொண்டு கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக ஆட்சி அதிகார சுகம் அனுபவிக்கும், ஆதிக்க சாதி என்று சொல்லப்படுகிற சமூகங்களின் ஓட்டு வங்கிக்கு பயந்து கொண்டு தேர்தலில் ஜெயித்தும் பதவி பிராமணம் எடுத்து கொள்ள இயலாத தங்களது காட்ச்சிக்காரர்களின் உரிமையைக்கூட மீட்டு எடுக்க முடியாதவர்களை காதை பிடித்து இழுத்து கொண்டு போய் காட்டுங்கள் அந்த அவலங்களை.

நந்தன் , சமூக மாற்றத்திற்கானவன் !