கோழிப்பண்ணை செல்லத்துரை

mysixer rating 4.5/5

185

a K Vijay Anandh review

கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம், குழந்தைகளை கைவிடட கணவன் என்று செய்திகளில் படித்திருப்போம். ஆனால், கள்ளக்காதலால் பாதிக்கப்படும் குழந்தைகளை பற்றி யாரும் யோசிக்கமாடடோம், அவர்களின் எதிர்காலம் என்ன ? யார் அவர்களை பராமரிப்பது ? என்கிற சிந்தனை எல்லாம் யாருக்கும் எழுவதில்லை. ஒரு பொறுப்புள்ள படைப்பாளியாக சீனு ராமசாமிக்கு அந்த சிந்தனை உதித்திருக்க வேண்டும், அதுவே கோழிப்பண்ணை செல்லத்துரை எனும் படைப்பாக உருவாகியிருக்கிறது .

அப்படி ராணுவ அதிகாரி ரியாஸின் மனைவி ஐஸ்வர்யா தத்தா , தன்னை தமிழ்ப்பாடல்கள் பாடி சொக்கவைத்த கள்ளக்காதலனுடன் ஓடிப்போக , ரியாஸ் அவள் மூலம் பிறந்த அண்ணன் தங்கையை மனைவியின் அம்மாவிடம் விட்டுவிட, ஆச்சியும் போய் சேர்ந்து விட அக்குழந்தைகள் என்ன ஆனார்கள் என்பதே அழகான திரைக்கதை.

அக்குழந்தைகளை ஆதரிக்கும் கோழிப்பண்ணை யோகிபாபு, சிறுவயதிலிருந்து நடப்பாகி அக்கறை எடுத்து கொள்ளும் பிரிகடா சகா, டீக்கடை சேட்டன் நவீன் என்று மனிதமும் அன்பும் தழைத்தோங்க வைத்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. இன்னொரு பக்கம் லியோ சிவக்குமார் குடும்பம் என்று அன்பின் வீச்சு பலமாக அடித்திருக்கிறது. உச்சக்கட்டமாக , ஓடிப்போன அம்மாவுக்கும் , உதறிவிட்ட அப்பாவுக்கும் உரிய கடமைகளை செய்து அன்பின் இலக்கணமாக விஸ்வரூபம் எடுக்கிறார் நாயகன். தங்கச்சி மட்டும் தொக்கா ..? நாளைக்கு அம்மா மாதிரி , இவளும் ஓடிப்போயிட்டா என்கிற பழியை அண்ணன் சுமக்காமல் இருக்க தன் காதலை கூட தியாகம் செய்யும் தங்கையாக அவரும் கலங்க வைத்திருக்கிறார்.

இவர், சென்ற படத்தில் நாயகனின் நண்பனாக வந்தபோதே, அடுத்து இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அனைவரையும் யோசிக்க வைத்த ஏகன் , இந்தப்படத்தின் மூலம் சீனு ராமசாமியின் மோதிரக்கையால் குட்டுப்பட்ட இன்னொரு விஜய்சேதுபதியாக ஒரு யதார்த்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.

தங்கயாக நடித்திருக்கும் சத்யா தேவியும் சிறப்பாக நடித்திருக்கிறார். 2K கிட்ஸுக்கு ஒரு பாசமலர் காட்டிய பெருமைக்கு இருவரும் சொந்தக்காரர்களாக ஆகிவிட்டார்கள் என்றால் அது மிகையாகாது.

யோகிபாபு , வழக்கத்திற்கு மாறாக அமைதியின் சொரூபமாக, தான் ஒண்டிக்கட்டையாக இருந்தாலும் தன்னை நம்பி வந்த செல்லத்துரை க்கு மனைவி குடும்பம் என்று அமைத்து கொடுத்து கடைசியில் அவனுக்கு கோழிப்பண்ணையே வைத்துக்கொடுக்கிறார்.

கலாச்சாரம் குடும்பங்களில் இருந்து ஆரம்பிக்கிறது. திராவிடம் தன் அகராதியில் திருமணம் கடந்த உறவு என்று அங்கீகரித்த கள்ளக்காதலால் எப்படி குழந்தைகளின் எதிர்காலம் சின்னாபின்னாமாகிறது என்பதை ஒரு எதிர்மறையாக ஆரம்பித்து , அவர்களுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையும் என்பதாக முடித்திருக்கும் விதம் அருமை.

கோழிப்பண்ணை செல்லத்துரை, சீனு ராமசாமியின் இன்னொரு குறுங்கவிதை.