a K. Vijay Anandh review
சமூக வலைத்தளங்கள் இல்லாத அந்த காலகட்டத்திலேயே பிரபு கார்த்திக் நடித்த அக்கினி நட்சத்திரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு மிகப்பெரியது. லப்பர் பந்து , 2K கிட்ஸ் க்கான அக்னி நட்சத்திரம் என்று சொன்னால் மிகையாகாது. 80 களின் இறுதியில் வெளிவந்த அந்தப்படத்தின் தாக்கத்தை முறியடிக்க, 36 ஆண்டுகளாக எந்தப்படமும் வெளியாகாத நிலையில், இதோ லப்பர் பந்து அதை ஈடு செய்திருக்கிறது.
அதில் , சகோதர யுத்தம் மற்றும் அப்பா செண்டிமெண்ட், இதில் மாமனார் மருமகன் யுத்தம் கிரிக்கெட் செண்டிமெண்ட் என்று பட்டையை கிளப்பியிருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.
தினேஷ், இந்த நடிகனை நாம் கொண்டாட வேண்டும் , கொண்டாடியே ஆகவேண்டும், இனிமேல் இவர் அட்டக்கத்தி தினேஷ் இல்லை, இனி இவர் அட்ராசக்கை தினேஷ். அவரே ஹீரோ , அவர் வயதொத்த இன்னொரு ஹீரோவுக்கும் மாமனார். விக்ரம் போன்ற நடிகர்களுக்கு பிறகு , இப்படி ஒரு தோற்ற மாறுபாடு காட்ட இன்றைய இளம் தலைமுறை நடிகர்களில் இவரைத்தவிர வேறு யாரும் கிடையாது. ஒருத்தன் விளையாடிக்கொண்டே இருக்கிறான் என்றால் அவனுக்கு வயது முப்பே கிடையாது, மனதளவில். மனைவி சேலைகளை விரித்து படுத்து கொள்ளும் காட்சிகளிலும் , ஏன் என்னை விட்டு போன என்று அழுது குழந்தையைப்போல மனைவியின் கரங்களுக்குள் அடங்கிப்போகும் காட்சிகளிலும் தினேஷ் குழந்தையாகவே ஜொலிக்கிறார். அவரின் ஜோடியாக வரும் சுவாசிகா , இன்றைய தலைமுறை நடிகைகள் கவர்ச்சி மற்றும் டூயட்டுகளை விட அழுத்தமான கதாபாத்திரங்களையே விரும்புகிறார்கள் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக ஜொலித்திருக்கிறார்.
ஹரிஷ் கல்யாண் , செக்கசெவேர்னு சாக்லேட் பாயாக , நகர்ப்புற நாயகனாக வளம் வந்து கொண்டிருந்த இவருக்கும் இந்தப்படத்தில் சவாலான கிராமத்து பையன் வேடம் , அதிலும் கிரிக்கெட் விளையாடி வெயிலில் காய்ந்து சக நடிகர்களின் தோற்றத்தில் இருந்து அந்நியப்பட்டு விடக்கூடாது . அப்படி ஒரு சவாலான கதாபாத்திரம் . ஹரிஷ் கல்யாண் அதனை அசால்ட்டாக செய்து சிக்ஸர் அடித்திருக்கிறார். இன்றைய தலைமுறை நடிகர்களில் இவர் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்றால் அது மிகையாகாது . சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி , யதார்த்தமான கிராமத்து நர்சிங் மாணவியாக , இவரை விட்டுறவே கூடாது என்று நாயகன் நினைக்கும் அளவிற்கு சிறப்பான கதாபாத்திரம், மனதில் நின்று விடுகிறார் .
காளிவெங்கட் , பாலசரவணன் கடந்த பத்து ஆண்டுகளில் வராது வந்த மாமணிகள் என்றால் அது மிகையாகாது. ஏற்றுக்கொள்ளும் எந்த கதாபாத்திரங்கள் ஆனாலும் நிறைவாக மிகசிறப்பாக நடித்து கோலோச்சி விடுகிறார்கள். தேவதர்ஷினி, கீதா கைலாசம் மட்டும் என்ன தொக்கா ? இது சினிமா அல்ல நிஜம் என்று நம்ப வைப்பதில் இவர்களின் பங்கு மகத்தானது.
கிரிக்கெட் விளையாடும் 11 பேர் கொண்ட அணியாக, அனைத்து சமூகங்களையும் அரவணைத்து ஜெயிக்கவில்லையெனில் 140 கோடி இந்தியர்களாக இணைந்து எப்படி முன்னேறிவிட முடியும் ? என்கிற கேள்வியை கிரிக்கெட் களம் மூலம் கேட்காமல் கேட்டு யோசிக்க வைத்திருக்கிறார் , தமிழரசன் பச்சமுத்து.
லப்பர் பந்து , அத்தனை பந்துகளிலும் சிக்ஸர் !