தில் ராஜா

mysixer rating 3/5

141

a K.Vijay Anandh review

ஒரு சாதாரண மிடில் கிளாஸ் இளைஞன், தானுண்டு தன் மனைவி குழந்தை உண்டு என்று நிம்மதியாக வாழ்பவனின் வாழ்க்கையில் மந்திரி மகன் என்கிற ரூபத்தில் விதி விளையாடுகிறது. அதனைத் தொடர்ந்து அவனது ஓட்டமும் அதிலிருந்து அவன் வெற்றிகரமாக வெளியேறினானா என்பதுமே விறுவிறுப்பான தில்ராஜா படத்தின் திரைக்கதை.

நான் லீனியர் முறையில் சொல்லப்பட்டிருக்கும் கதை, எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரசியத்தை கொடுக்கிறது.

கதாநாயகன், விஜய் சத்யா கட்டு மஸ்தான உடலுடன் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். விருப்பமான மெக்கானிக் மற்றும் படித்த சிவில் இன்ஜினியரிங் என்று ஒரு வித்தியாசமான இளைஞனாக வலம் வந்திருக்கிறார். கதாநாயகி, ஷெரின், ஒரு குழந்தைக்கு தாயாக நடுத்தரவர்க்க குடும்பத் தலைவியாக நிறைவாக நடித்திருக்கிறார்.

இவர்கள் தவிர வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர்,  வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் இயக்குனர் ஏ வெங்கடேஷும்  வில்லனாக அமைச்சர் கதாபாத்திரத்தில் வந்து பயமுறுத்தி இருக்கிறார்.

இதற்கு நடுவே அமைச்சர் மகனின் தோழர்களை கொன்றவர்கள் யார் என்பதை சஸ்பென்ஸ் ஆக வைத்து சம்யுக்தா மூலமாக அதற்கு விடை சொல்லும் யுக்தி பாராட்டத்தக்கது.

ஒரு வணிக மசாலா படத்திற்கு தேவையான இசையை அளித்திருக்கிறார் இசையமைப்பாளர் அம்ரீஷ். ஹிந்து துறவி போடும் குத்தாட்டம் மற்றும் ரஞ்சிதமே என்று பாடலை முடித்திருக்கும் விதத்தை கொஞ்சம் மாற்றி யோசித்து இருக்கலாம்.

தில் ராஜா, பெயருக்கு ஏற்றார் போல பெரிய நடிகர்களுடன் போட்டி போட்டு படத்தை வெளியிட்ட விதத்தில் தில்லானா ராஜாவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்.