இந்தப் படத்தின் விமர்சனத்தை என்னை அத்தான் என்று அழைக்கும் என் தங்கைகளின் கணவர்கள், தம்பிகளின் மனைவியரின் சகோதரர்கள், எனது அத்தைகள் மாமன்களின் மகன்கள் மற்றும் நான் அத்தான் என்று அழைக்கும் இராமேஸ்வரம் மோகன் அத்தான் ஆகியோருக்கு சமர்ப்பணம் செய்கின்றேன்.
a K Vijay Anandh review
அன்பே இறை
அன்பே நிறை
அன்பே மறை
அன்பே அருட்பெரும் மெய்
என்று ஆரம்பிக்கிறது இந்த படம். ஆம் 20 வருடங்களுக்கு முன் சொந்த வீட்டை உறவினர்களிடம் இழந்து சொந்த ஊரையே விட்டு செல்லும் ஒரு குடும்பத்தின் மீது, அந்த குடும்பத்து மூத்தவன் மீது, தங்கை பெரியப்பா முறைப்பெண் மற்றும் கொழுந்தன் காட்டும் அளவிட முடியாத அன்பே இந்த படம்.
குறிப்பாக, கொழுந்தன் ஒருவர் தனது சிறுவயது இன்ஸ்பிரேஷன், சிறு வயது வழிகாட்டி வாழ்க்கை பயணத்திற்கு சைக்கிள் கொடுத்த தனது அத்தான் மீது உருகி உருகி காட்டும் அன்பு தான் இந்த படம்.
அத்தான் என்கிற உறவு அத்தான் என்கிற வார்த்தை பொதுவாக மனைவி கணவனை அழைப்பது என்கிற அளவில்தான் ஓரளவுக்கு நகர்ப்புறங்களில் வளர்ந்தவர்கள் புரிந்து வைத்திருப்பார்கள். ஏனென்றால் நகர்புறங்களில் இன்றைய தேதியில் பெரும்பாலும் சிங்கிள் சைல்ட் கலாச்சாரம் வேரூன்றி விட்டபடியால் அவர்களுக்கு பிற உறவு முறைகளில் பரிச்சயம் இல்லாமல் போய்விட்டது என்பது வேதனையான உண்மை. ஆனால் கிராமப்புறங்களில் உறவுகளோடு பிறப்பவர்களுக்கு உறவுகளோடு வாழ்பவர்களுக்கு இந்த அத்தான் என்கிற உறவு ஒரு சிறப்பு வாய்ந்ததாக இன்றும் இருக்கின்றது. ஒரு பெண் தன் கணவனை அழைக்கும் பொழுது அத்தான் என்கிறாள். அதுவே ஒரு ஆண் தன்னைவிட மூத்த மாமன் மகனையோ அத்தை மகனையோ அத்தான் என்று அழைக்கும் பொழுது கிட்டத்தட்ட , அரை மனைவி ஆகி விடுகிறான். அவன் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் சரி எவ்வளவு பெரிய சண்டியர் ஆக இருந்தாலும் சரி எவ்வளவு பெரிய நாட்டாமையாக இருந்தாலும் சரி அத்தான் என்று அழைக்கும் பொழுது மனைவியின் பவ்யம் அவனுக்குள் ஒட்டிக் கொள்கிறது. இந்தப் படத்திலேயே சொக்கலிங்கமாக வரும் ராஜ்கிரண் கதாபாத்திரம், டவுசர் தெரிய தூக்கி மடித்து கட்டிய வேட்டி, அசால்டாக கடித்து போடும் , ஓங்கி மிதித்தால் 15 அடி தள்ளி விழச்செய்யும் ஆக்ரோஷம் என்று பார்த்து பழகிய ராஜ்கிரண், எங்கோ சென்னையில் இருக்கும் தனது அத்தான் ஜெயபிரகாஷிடம் தொலைபேசியில் அத்தான் என்று பேசும் பொழுது எழுந்து நின்று சோலையம்மாளாக மாறிப்போய் காட்டும் பவ்யம் ஒரு உதாரணம். கட்டிளம் காளையாக, வலம் வரும் கார்த்தி, அத்தான் அத்தான் என்று, அரவிந்தசாமியிடம் உருகி உருகி பணிவிடை செய்யும் காட்சிகள் மற்றொரு உதாரணம். ஆக, ஒரு பெண் கூட தனது கணவன் அதாவது அத்தானிடம் சிறிது முரண்டு பிடித்து விடலாம். ஆனால், கிராமத்தில் உறவுகளின் உன்னதம் தெரியும் ஆண்கள் அவர்கள் அத்தானிடம் பேசும் பொழுதும் பழகும் பொழுதும் எந்த காலத்திலும் முரண்டு பிடித்து விடுவதில்லை. அது அந்த அத்தான் முறைக்கு அவர்கள் காட்டும் மரியாதை.
அத்தான் என்று அழைக்க ஒரு உறவு இருந்தாலோ அல்லது அத்தான் என்று நீங்கள் அழைக்கப்பட ஒரு உறவு இருந்தாலோ அந்த உன்னதம் புரியும்.
சரி கதை தான் என்ன.? முதலிலேயே சொன்னது போல ஒருவருக்கொருவர் பரஸ்பரம் காட்டும் அன்பு தான் இந்த முழு படமும் என்றாலும் அரவிந்தசாமி மற்றும் கார்த்தி இடையிலான உரையாடல்களே படத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து இருக்கின்றன. அந்த உரையாடல்களுக்குள் இருக்கும் சுவராசியம், பிற உயிர்கள் இடம் கார்த்தி காட்டும் அன்பு, போரிலும் நிர்வாக அராஜகத்திலும் மரித்துப்போன முகம் தெரியாத மனிதர்களிடம் கார்த்தி காட்டும் அன்பு. தன்னையே மறந்து விட்ட அரவிந்தசாமிக்கு நீங்கள் அப்படி நீங்கள் இப்படி என்று உணர்த்தும் விதம் என்று ஒவ்வொன்றும் அருமை.
தொழில்நுட்ப ரீதியாக இந்த படத்தில் அதுவும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் இந்த படத்தில் அதிகபட்சம் மொத்தமாகவே பத்தே காட்சிகள் தான். மற்றவை பிளாஷ்பேக் ஆகவோ இன்டர் கட் காட்சிகளாகவோ நுழைத்து சுவராஸ்யப்படுத்தி இருப்பதில் கதை சொல்லலில் ஒரு புதிய ஜனரை உக்தியை அறிமுகப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சி பிரேம்குமார்.
குறிப்பாக ஜல்லிக்கட்டு காளையை பற்றி பேசும் இடங்களில் அது கலந்து கொள்ளும் ஜல்லிக்கட்டுகளை காட்சிகளாக காட்டியிருப்பதாகட்டும், சிறுவயதில் அத்தான் விட்டுச் சென்ற சைக்கிள் எப்படி அவர்களது குடும்பத்தையே மாற்றியது என்று காட்சிகளாக விவரிப்பதாகட்டும் எல்லாமே சுவராஸ்யங்களை அள்ளித் தெளித்து இருக்கிறது.
கார்த்தி மற்றும் அரவிந்தசாமி ஆகியோருக்கு இடையிலான உரையாடல்களில் காட்ட முடிந்த காட்சிகளை ஒரு இயக்குனராக படம் பிடித்து காட்டியிருக்கும் சி பிரேம்குமார், சில உரையாடல் பகுதிகளை கோவிந்த் வசந்தாவின் அற்புதமான பின்னணி இசை மூலமாகவே உணர்த்தி இருப்பது ஆகச்சிறந்த படைப்பாக இந்த படத்தை பேச வைத்திருக்கிறது. உதாரணமாக, நள்ளிரவில் நீடாமங்கலம் நதிக்கரையில் அமர்ந்து கொண்டு பீர் அடிக்கும் பொழுது, இந்த இடம் தான் சேர சோழ பாண்டியர்களின் போர்க்களமாக இருந்தது என்பதாக கார்த்தி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை மூலம் நாம் அந்த காட்சிகளை கற்பனை செய்து கொள்ள முடிகிறது.
கார்த்திக் நேத்தா மற்றும் உமாதேவி ஆகியோரின் பாடல் வரிகள் கோவிந்த் வசந்தாவின் இசையில் ரசிகர்களை வருடும் என்பது நிஜம். மகேந்திரன் ஜெயராஜன் ஒளிப்பதிவும் ஆர் கோவிந்தராஜன் எடிட்டிங் படத்திற்கு பக்க பலம். இவர்கள் நடித்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாத வகையில் தேவதர்ஷினி முதல் கருணாகரன் வரை அத்தனை பேரும் சென்னையிலும் நீடாமங்கலத்திலும் சி பிரேம்குமாரின் கற்பனையில் வாழ்ந்திருக்கிறார்கள்.
கரிகாலனோடு நமது முப்பாட்டன் கணக்கு முடிந்து விடுவதில்லை, அதற்கு முன்னரும், ஐயாயிரம் வருடங்களாக நமது முப்பாட்டன்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது. 30 வருடம் முன்னால் சென்று பார்க்கும் பொழுது கார்த்தியும் அரவிந்தசாமியும் நெருங்கிய உறவினர்கள் ஆகிய போகிறார்கள். அதற்கு முன்னால் முன்னூறு வருடங்கள் பின்னோக்கி போய் பார்த்தால் பல சமூகங்களே உறவினர்களாக இருந்திருக்க கூடும். அதுக்கு முன்னால் மூவாயிரம் வருடங்களுக்கு முன் சென்று பார்த்தல், ஒரு தேசமே உறவினர்களாக இருந்திருக்க கூடும். ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னரோ இந்த பூமியில் வசித்த அத்தனை பேரும் உறவினர்களாக இருந்திருக்க கூடும். அதைத்தான் இன்னொரு முப்பாட்டன் கனியன் பூங்குன்றனார் பாடி சென்றான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று. அதையே வாசுதேவ குடும்பகம் என்று மகாபாரதம் சொல்கிறது.
அப்படி ஒரு கோணத்தில் யோசித்தால் இயக்குனர் சி பிரேம் குமார் உணர்த்தி இருக்கும் அன்பு என்பதை தவிர வேறு எதற்கும் இங்கே வேலை இருந்திருக்காது.
மறுபடியும் ஒரு விஷயத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும் தொழில்நுட்ப ரீதியாக வேகமாக நகரும் காட்சிகளை குறிப்பாக ரேஸ் சண்டை மற்றும் பாடல் காட்சிகள் இன்று காட்சிப்படுத்துவது எளிது. அதே நேரம் ஒன்று அல்லது இரண்டு கதாபாத்திரங்களின் மென்மையான உணர்வுகளை நீண்ட நேரம் காட்சிப்படுத்துவது என்பது தொழில்நுட்பம் தாண்டிய ஒரு ரசனை சம்பந்தப்பட்ட விஷயம். அந்த, அவரது ரசனையை சி பிரேம்குமார் மிக நேர்த்தியாக வெளிகாட்டி நம்மளையும் ரசனை மிக்கவர்களாக ஆக்கி விடுகிறார் என்றால் அது மிகையாகாது, அதுவே மெய், மெய்யழகன்.