Game Changer

mysixer rating 4/5

106

a K Vijay Anandh review

முதல்வன் என்ற ஒரு படம் வரவில்லை என்றால் கழகங்களின் அரசியலுக்கு எதிரான குரல் தமிழகத்தில் ஏற்படாமலே இருந்திருக்கும். முதல்வன் மற்றும் இந்தியன் பார்ட் ஒன், அந்நியன் ஆகிய திரை கதாநாயகர்களின் கிட்டத்தட்ட நிஜ வடிவம்தான் விஜயகாந்த்,  சீமான் முதல் இன்றைய விஜய் வரை. நண்பன் , ரோபோ போன்ற முழுக்க முழுக்க பொழுதுபோக்கு ஆக்சன் படங்களையும் இயக்க முடியும், அதே நேரம் தமிழகத்தில் ஒரு நேர்மையான அரசியல் சூழல் நிகழாத  வரை அரசியல் சீர்திருத்த படங்களையும் ஒரு குறிப்பிட்ட இடைவெளிகளில் கொடுத்துக் கொண்டிருக்கவும் முடியும், இயக்குனர் ஷங்கர் விடும் ஸ்டேட்மெண்ட் இதுதான்.

எதிர்மறையான கதாபாத்திரங்களை கதாநாயகர்களாக காட்டிக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த இந்திய திரை உலகினில் ஐஏஎஸ் படித்தவன் ஹீரோ ஐபிஎஸ் படித்தவன் ஹீரோ டிஎன்பிஎஸ்சி குரூப் 1 எழுதுபவன் ஹீரோ, அரசியல்வாதிகளின் மொள்ளமாரித்தனங்களை தட்டி கேட்பவன் ஹீரோ என்று ஒரு படைப்பாளி காட்டிக் கொண்டிருக்கும் பொழுது, நிச்சயம் அதனை கொண்டாடித்தான் ஆக வேண்டும்.

எல்லாராலும் அண்ணா என்று அழைக்கப்படும் சரளமாக பேச வராத ராம்சரண், திடீரென்று எனக்கு நன்றாக பேச வரும் என்று அந்த கூட்டத்தில் இருந்து கிளம்பும் ஒருவன், மாவீரன் என்கிற மூத்த மகன் சும்மா முதல்வர் என்கிற அறிவிலி இளைய மகன் என்று சுத்த தமிழ் மீல்ஸ் ஆக பரிமாறப்பட்டிருக்க வேண்டிய கேம் சேஞ்சர் ஆந்திரா மில்ஸ் ஆகவும் இல்லாமல் தமிழக மீல்ஸ் ஆகவும்  இல்லாமல் சிக்கிக் கொண்டதுதான் கொஞ்சம் ஏமாற்றம்.

மற்றபடி முதல்வன் படத்தில் அர்ஜுனை  பார்த்தது போன்ற  இளமையும் துடிப்பு மிக்க ராம் நந்தன் கதாபாத்திரத்தில் ராம்சரண் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது அறிமுகக் காட்சியை கிட்டத்தட்ட ஆந்திரா திரையுலகமே மறந்துவிட்ட ஒரு மசாலா காட்சி. அதனை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்து இருக்கலாம் என்பதை மறுப்பதற்கு இல்லை.

கியாரா அத்வானி, ஷங்கர் படங்களில் வரும் வழக்கமான அழகும் பொறுப்பும் மிக்க நாயகியாக வலம் வருகிறார்.

இப்படியெல்லாமா பதவி வெறி பிடித்து அலைவார்கள் அதிலும் முதலமைச்சராக இருக்கும் வீட்டுப் பெருசுகளை இப்படி கேவலப்படுத்துவார்கள் போட்டு தள்ளுவார்கள் என்று ஆச்சரியப்பட ஒன்றுமில்லாத அளவிற்கு இன்றைய அரசியல் அம்பலப்பட்டு நிற்கின்றது. அதனை மீண்டும் மீண்டும் ஷங்கர் போன்ற படைப்பாளிகள் மக்களுக்கு நினைவூட்டி கொண்டே இருக்கிறார்கள்.

எஸ் ஜே சூர்யா, இருக்கு ஆனா இல்லை என்பது போல முதலமைச்சர்தான் ஆனா ஒன்னும் செய்ய முடியாது என்கிற நிலையில், ஒரு இழவும் ஆக்கபூர்வமாக சிந்திக்கத் தெரியாத சும்மா முதல்வராக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

இந்தியாவையே ஏன் சர்வதேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்த மதுரை திருமங்கலம் ஃபார்முலாவை நினைவுபடுத்தும் மாவீரன் அண்ணன் ஜெயராம், தம்பி மீது கொண்ட பயத்தில் எனக்கு முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று பம்மி விடும் காட்சிகள் அழகு.

இவருக்கு மாற்று சமுத்திரகனியா என்ற யோசிக்கும் பொழுது நல்ல வேலையாக ராம்சரணையே முதல்வராகி அழகு பார்த்து விடுகிறார் இயக்குனர் ஷங்கர்.

பொலிட்டிக்கல் சேஞ்ச் ஆகாத வரை ஷங்கரின் கேம் சேஞ்சர்களின் தேவை மிக மிக அவசியம்.