a K Vijay Anandh review
Bala is Back + Arun Vijay is reborn = Vanangaan
பொதுவாக பாலா படங்களுக்குள் நுழைந்து வெளியே வரும் நாயகர்கள், அதன் பிறகு மிகப்பெரிய வலம் வருவார்கள். அதற்கு ஆகச் சிறந்த உதாரணங்கள் விக்ரம் மற்றும் சூர்யா. இந்த இருவரும் இவர்களின் ஆரம்ப கட்டத்திலேயே பாலாவின் படங்களில் நடித்திருப்பது கவனிக்கத்தக்கது. அந்த வரிசையில் அருண் விஜயும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ என்னவோ அருண் விஜயின் அறிமுக கால கெட்டப் தோற்றத்திலேயே இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் பாலா. அந்த வகையில், அருண் விஜய் மீண்டும் பிரசவிக்கப்பட்டு இருக்கிறார், படைப்பாளி பாலாவின் கதைக்கருவின் மூலம்.
இவருக்கு வாய் பேசவும் வராது காது கேட்கவும் செய்யாது. ஆனால் எப்படி எவனுக்கும் வணங்காமல் வாழ முடியும் ? தன்னைச் சுற்றி இருக்கும் பெண்களிடத்தில் எப்படி கண்ணியமாக வாழ முடியும் ? தன் கண் முன் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்காமல் இருக்க முடியும் ? என்பன போன்ற பல நல்ல கேள்விகளுக்கு ஆகச் சிறந்த பதிலாக வாழ்ந்து காட்டி இருக்கிறார் கோட்டி என்கிற கதாபாத்திரத்தில் அருண் விஜய், தேசிய விருது காத்திருக்கிறது. சுனாமியில் கிடைத்த தங்கையுடன் உருகி உருகி பாசங்களை பொழிவதாகட்டும், சுனாமி போல தன் வாழ்க்கையில் வரும் கதாநாயகியுடன் முஷ்டியை மடக்கிக்கொண்டு மோதிக்கொண்டிருப்பதாகட்டும், ஒரு அழகான வசீகரமான அன்பான அருண் விஜய் பார்த்து ரசிக்க முடிகின்றது.
யானை படம் இவருடன் பிள்ளையார் ஒட்டிக் கொண்டிருப்பது சுவராஸ்யம். கிணற்றிலிருந்து எடுக்கும் ஈவேரா மற்றும் விநாயகர் சிலைகளில் விநாயகரை சுத்தப்படுத்தி கோயில் கருவறைக்குள் வைத்துவிட்டு ஈவேராவை கள்ளு கடைகளை எதிர்த்து அவரால் வெட்டி எறியப்பட்ட தென்னைமரத்தின் அடியிலேயே வீசி எரியவும் முடியும், அதாவது பாலாவின் கதாநாயகர்களாலாயே அது முடியும்.
பாலா படங்களில் வரும் கதாநாயகிகள் அனைவருமே தனித்துவமிக்கவர்களாக இருப்பார்கள். அவர்களை தூக்கி சாப்பிடுவது போல இந்த படத்தில் கன்னியாகுமரியைச் சேர்ந்த டூரிஸ்ட் கெய்டாக வரும் வரும் ரோஷினி பிரகாஷ், நடித்திருக்கிறார். அவர் மூலமாக வெளிநாட்டவர்களுக்கு ஏன் குறிப்பாக நம் நாட்டவர்களுக்கும் விவேகானந்தரின் பெருமையை பாலா சொல்லி இருக்கும் விதம் அருமை. சுற்றுலா பயணிகள் எந்த தேசத்தில் இருந்த வருகிறார்கள் அவர்களது கலாச்சார உடை அணிந்து அவர்களது மொழியிலேயே அவர்களிடம் பேசும் ரோஷினி பிரகாஷ் வேற லெவலில் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடிப்பார் என்றால் மிகையாகாது.
கதாநாயகியின் கதாபாத்திரத்திற்கு நிகரான ஒரு பாத்திரமாக அருண் விஜயின் தங்கை பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. அந்த பாத்திரத்தில் நடித்திருக்கும் ரிதா , மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவசரப்பட்டுட்டியேம்மா என்று ரசிகர்களையும் அழ வைத்து விடுகிறார்.
பாலாவின் படைப்பில் இன்னொரு குறிப்பிடத்தக்கதாபாத்திரமாக படம் முழுவதும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொண்டு வரும் சர்ச் பாதர் கதாபாத்திரம். இந்த மனுஷனால தான் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை படைக்க முடியும். இவர் தவிர கதாநாயகியின் அப்பா, அம்மா, ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம் நடத்தும் அம்மா , நீதியரசர் ஆக வரும் மிஸ்கின், சிறப்பு அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி என்று ஒவ்வொருவரும் மிகச் சிறப்பாக நடித்து முத்திரை பதித்திருக்கின்றார்கள்.
சாம் சிஎஸ் இன் பின்னணி இசையும், பாடல்களுக்கான ஜி.வி பிரகாஷ் குமாரின் இசையும் அற்புதம். அதிலும் குறிப்பாக வாய் பேச முடியாத காது கேட்காத மாற்றுத் திறனாளி ஒருவரின் உணர்ச்சிப் பிழம்புகளை பாடலாக வெளிக்காட்டி இருக்கும் கிளைமாக்ஸ் பாடல் மிகவும் அருமை. இந்தப் பாடலுக்கு நிச்சயம் சிறப்பான விருதுகள் கொடுக்கப்பட வேண்டும். சர்வதேச அளவில் குறிப்பாக இந்திய அளவில் மாற்றுத்திறனாளியின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பாடல் போடப்பட்டிருப்பது, வணங்கான் படத்தில் என்று தான் யூகிக்க முடிகிறது. இந்த காட்சிகளை வடிவமைத்த இயக்குனர் முதல் இசையமைப்பாளர் வரை ஒளிப்பதிவாளர் முதல் நடிகர்கள் வரை அத்தனை பேருக்கும் சிறப்பு பாராட்டுக்கள்.
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளிவந்த படங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு பாடல் காட்சியாவது படமாக்கப்பட்டு இருக்கும். ஆனால் நீண்ட நாட்களுக்கு முழு யூனிட்டையும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அழைத்துச் சென்று முழு படத்தையும் எடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க . அந்த மாவட்டத்தின் பன்முகத்தன்மை மும்மதத்தவர்களும் நட்புடன் உறவாடும் அழகு ஆகியவற்றை சிறப்பாக பதிவு செய்து இருக்கிறார்கள்.
அட என்னப்பா பாலியல் சீண்டல்கள் அதனைத் தொடர்ந்து ஏற்படும் பழிவாங்குதல்கள் இல்லைன்னா இவர்களுக்கு படம் எடுக்கவே தெரியாதா ? என்றும் சிலர் கேட்கலாம்.
அவர்களுக்கு இந்த படம் வெளியாகும் நேரத்தில், நடைபெற்றுக் கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழக விவகாரமே பதில்.
பாலியல் வன்கொடுமைகள் நிற்கும் வரை, வணங்கான் போன்றோரின் தேவை தொடரும் !