a K Vijay Anandh review
மைக்கேல் மதன காமராஜன் என்கிற படத் தலைப்பை போல , விஷால், சந்தானம், நிதின் சத்யா மற்றும் ரமேஷ் ஆகிய நான்கு பேரின் கதாபாத்திர பெயர்களை ஒன்றிணைத்து புதிதாக ஒரு தலைப்பு வைத்து வெளியிட்டு இருந்தால் இது புதிய படமே! அட இது சந்தானம் ஹீரோ ஆவதற்கு முன்னாடியே எடுத்த படம், அப்படியும் சொல்ல முடியாது ஏனென்றால் இந்த படத்தில் சந்தானமும் ஒரு ஹீரோ தான்.
மணிவண்ணனும் மனோபாலாவும் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்றும் கூற முடியாது. ஏனென்றால் அவர்கள் தினம் தினம் தொலைக்காட்சி வாயிலாகவோ ஓடிடி வாயிலாகவோ அல்லது youtube வாயிலாகவோ நாம் பார்த்து ரசிக்கும் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் வீடியோவில் நம்மை மகிழ்வித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கலைஞர்களுக்கு இறப்பு ஏது ? இந்த படத்தில் முதல்வன் படத்தில் அர்ஜுன் உடன் வரும், கதாபாத்திரம் போல விஷால் உடன் வருகிறார் மணிவண்ணன். மனோபாலா இதுவரை நடித்த கதாபாத்திரங்களிலேயே மிகச் சிறந்த கதாபாத்திரம் என்னும் அளவிற்கு ஒரு நகைச்சுவை வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மற்றபடி முதல் பாதியில் சென்டிமென்ட் காதல் இரண்டாம் பாதியில் விறுவிறு ஆக்சன் என்கிற விஷால் ஃபார்முலாவும் படம் முழுவதும் கலர்ஃபுல் ஆகவும் கலகலப்பாகவும் கொண்டு போகும் சுந்தர் சி ஃபார்முலாவும் சரியாக கலந்து மதகஜராஜாவை இந்த பொங்கல் வெளியீட்டில் மக்கள் கவலை மறந்து கொண்டாடும் படமாக மாற்றி இருக்கிறது.
ஆக்சன் திரில்லர் என்று சென்று விட்டதால் சந்தானம் படங்களில் கொஞ்சம் நகைச்சுவை பஞ்சம் ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அந்தக் குறையை முழுமையாக போக்கும் விதமாக மதகஜராஜாவில் இவர் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் நகைச்சுவை ததும்புகிறது. ரமேஷ் மற்றும் நிதின் சத்யா இவர்கள்தான் கதையின் மையப் புள்ளிகள் எனும் அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஊர்ல இருந்து கிளம்பி வரும் பொழுதே குளிக்க தான் வருகிறாரா என்று எண்ணத் தோன்றும் அளவிற்கு காரில் இருந்து சட்டையை கழட்டி விட்டு நேராக தண்ணீருக்குள் இறங்கும் வரலட்சுமி, படம் முழுவதும் கவர்ச்சி விருந்து படைத்திருக்கிறார்.
விஷாலுக்கு ஜோடியாக நாமும் நடித்து விட்டோம் என்று சொல்லும் அளவிற்கு அஞ்சலி. இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி நன்றாகவே வேலை செய்திருக்கிறது.
அஞ்சலியின் அப்பாவாக வரும் சுவாமிநாதன் மற்றும் லொள்ளு சபா மனோகர் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.
ஏழு எட்டு சேனல்கள், பல்வேறு தொழில்கள் மற்றும் அரசியல் என்று நிஜ உலக வில்லன்களை பிரதிபலிக்கிறார் சோனு சூட்.
விஷால் கேட்கவே வேண்டாம், இதுபோன்ற ஆக்ஷன் சென்டிமென்ட் மற்றும் காதல் கலந்த திரைக்கதைகளில் எப்பொழுதுமே அவர் சோடை போனதில்லை. மதம் கொண்ட யானைகளை கூட அடக்கி ஆளும் ராஜாவாக அதகளம் செய்திருக்கிறார்.
நகைச்சுவையும் நடிகர்களின் டைமிங் அபாரமாக ஒன்றிணைந்து இருக்கிறது வெங்கட்ராகவனின் வசனத்தில்.
விஜய் ஆண்டனியின் இசையில் வரும் பாடல்கள் அக்மார்க் கமர்சியல் ரகம்.
விட்டுக்கொடுத்து ஜெயிக்க வைக்கும் நண்பர்களை காரியாபட்டியில் சோனு சூட்டின், யாத்திரை தொடங்கும் இடங்களில் பயன்படுத்தி இருக்கலாம்.
கதை பழைய கதையா என்றெல்லாம் கேட்க முடியாது. ஏனென்றால், நட்புக்காக எதையும் செய்யும் நட்பும், அரசியல் வில்லன்களும், சேனல்களை வைத்து பிளாக்மெயில் செய்யும் சேனல் மாபியாக்களும், சரி விட்டுத்தொலைப்போம் என்று சாதாரண பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தங்கள் தலையிலேயே நெருப்பை வைத்துக் கொள்ளும் முட்டாள்களும் இன்னுமும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள், அவர்கள் என்றுமே இருக்கத்தான் செய்வார்கள்.
மதகஜராஜா, விழாக்கால நொறுக்கு தீனி!