a K Vijay Anandh review
போன படத்தில் பள்ளிச்சீருடை அணிந்திருந்தவரை அக்னி பாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்ந்த மாதிரி, ஆன்ட்டி டெரரிஸ்ட் ஆப்ரேஷன் ஆபீஸராக, கிஷன் தாஸ் மீது ஒரு பெரும் சுமையை தூக்கி வைத்து விட்டாரோ இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் என்று நினைக்கும் அளவிற்கு படம் ஆரம்பித்தாலும் , போகப்போக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மிகவும் லாவகமாக கையாண்டு, தானும் ஒரு சிறந்த இளம் ஐபிஎஸ் ஆபீஸர் என்று நிரூபிக்கிறார் கிஷன் தாஸ். பல கோணங்களில் ஒரு மினியேச்சர் அருண் விஜய் போல காட்சி தருகிறார். இருந்தாலும் இவ்வளவு கனமான பாத்திரங்களில் நடிக்கும் பொழுது முகபாவனைகளையும் தாண்டின ஒரு கம்பீர உடல் மொழி தேவைப்படுகிறது, அதனை போகப்போக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அது மிகை ஆகாது.
ஸ்மிருதி வெங்கட், ஒரு அறிவு முதிர்ச்சி கொண்ட இளைய தலைமுறை பெண்ணாக வலம் வந்திருக்கிறார். நாயகனுடன் ரொமான்ஸ் ஆரம்பிக்கலாம் என்கிற நிலையில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு படம் முழுவதும் அதில் இருந்து வெளியே வரும் போராட்டத்திலேயே இவரது இளமை வீணாகி விடுகிறதோ என்று தோன்றுகிறது.
பாலா சரவணன் சம்பந்தப்பட்ட காட்சிகள், நகைச்சுவைக்கு ஓரளவுக்கு உத்தரவாதம் கொடுக்கின்றன.
ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம், பல்வேறு பிரச்சினைகளால் இயக்குனரின் முழு படைப்பு திறனும் காட்சிப்படுத்த இயலாமல் போகும் பொழுது அது ரசிகர்களுக்கு சிறிது சோர்வை தந்துவிடும். அதன் அடிப்படையில், நாய் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுமையாக இடம் பெற்று இருந்தால் படத்தின் மைய ஓட்டமான சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைத்திருக்கக்கூடும்.
இளம் வில்லன் ராஜ் ஐயப்பனின் கதாபாத்திரத்தை முதல் பாதியில் சொல்லாமல் வைத்திருந்து இரண்டாவது பாதியில், அவரின் கொடூர முகத்தை காட்டி இருக்கலாம். மற்றபடி தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் இன்னொரு நல்ல இளம் நடிகராக ராஜ ஐயப்பன்.
மதன் கார்க்கியின் பாடல்களும் தர்புகா சிவாவின் இசையும் இனிமை.
பொதுவாக இப்படிப்பட்ட திரைக்கதைகளில் ஒரு அனுபவ கதாநாயகனையும் இளம் வில்லன்களையும் காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஆனால், சம வயது ஒத்த நடிகர்களையே நாயகர்களாகவும் வில்லன்களாகவும் சித்தரித்து இருப்பதே, இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசனின் ரசிகத்தக்க துணிச்சலான முயற்சி.
தருணம், 90 மற்றும் 2 K கிட்ஸ்களுக்கு பிடிக்கும் !