பெருசு

Rating 4/5

126

a K Vijay Anandh review

Rigor mortis எனப்படும் மரண விறைப்பு என்பது பொதுவானது. பெருசு,  ஆணுறுப்பு விறைப்பாக இருக்கும் பொழுது ஏற்படும் ஒரு பெரியவரின் மரணத்தை பற்றியது. அறிவியலுக்கும் நிறைவேறாத ஆசைக்குமான ஒரு ஆர்ப்பாட்டத்தில் எது ஜெயிக்கிறது என்பதே பெருசு படத்தின் மிகவும் யதார்த்தமான கொஞ்சம் கலகலப்பான திரைக்கதை.

அப்படி உச்சகட்ட விறைப்புத்தன்மையுடன், படத்தின் மையப்புள்ளியாக பெரியவரின் மைய புள்ளி இருந்தாலும், அந்த குடும்பத்தின் மூத்த மகனாக வரும் சுனில் தான் நிஜமான பெருசு. மனிதர் மிகவும் அற்புதமான நடிப்பை இந்த படத்தில் வழங்கி இருக்கிறார். அப்பாவிற்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர் படும் பாடு மிகவும் எதார்த்தம். நீண்ட நாட்களாக அப்பாவிடம் பேசாமல் இருந்து விட்டதை எண்ணி காருக்குள் அமர்ந்து தம்பியுடன் புலம்பும் காட்சிகளில் நெஞ்சை பிசைந்து விடுகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு இவர் கட்டிங் போட்டுவிட்டு தான் வருவார் என்று வைபவ்  பற்றி, ரெடின் கிங்சிலி , சொன்னதில் எந்த தவறும் இல்லை. வைபவ் அந்த படத்தில் கதாபாத்திரமாக மாறுவதற்காக அப்படி வந்திருக்கிறார். படம் முழுவதும் அரை போதையிலேயே இருக்கும் கதாபாத்திரம் அவருடையது, சூப்பரா நடித்திருக்கிறார்.

பெரிய மருமகள் சாந்தினியும் இளைய மருமகள் நிஹாரிகாவும் பெருசின் பெருசு பற்றி சமையலறைக்குள் அங்கலாய்த்து கொள்வது, முந்தைய தலைமுறையின் பவரை கண்டு வியக்க வைத்திருக்கிறது. இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள்.

பெருசின் மனைவியாக வருபவர் மற்றும் அவரது தங்கையாக வரும் தீபா இவர்கள் அல்லாது பெரிசின் திருமணம் கடந்த காதலியாக வருபவர் என்று  அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பால சரவணன், எந்த ஹீரோவுக்கும் பொருந்தி போகும் நண்பனாக இந்த படத்திலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் படத்தில் கருணாகரன் இல்லாமலா, ஃப்ரீசர் பாக்ஸ் சப்ளை செய்யும் கருணாகரனும் அந்த கிராமத்து நிர்வாக  அலுவலராக வரும் கஜராஜும் நிறைவாக வந்து போகிறார்கள்.

ரெடின் கிங்ஸ்லி கேட்கவே வேண்டாம், இந்தப் படத்தில் அவர்கள் நகைச்சுவை நன்றாகவே வேலை செய்திருக்கிறது.

முனீஸ் காந்த், பிறவி கலைஞன் என்று சொல்லத்தக்க அளவில் பெருசின் தம்பியாக வந்து கலகலப்பூட்டி இருக்கிறார்.

பொதுவாக,படங்களின் இறுதி காட்சிகளில் பார்ட் டூ க்கு லீட் கொடுப்பார்கள். இழவு வீட்டில், மிகவும் கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்து மாத்திரையை எடுத்துச் செல்லும், சுவாமிநாதனும் அவரது சகாவும் அந்த கிராமத்தில் அடுத்து நடக்கவிருக்கும் சாவிற்கு அச்சாரம் இட்டிருக்கிறார்கள் போலும்.

இதனை அடல்ட் ஒன்லி படமாக கருதி விட முடியாது , மிகவும் இயல்பாக அல்லது அரிதாக நடக்கும் ஒரு மரணம் அதனைத் தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைகள் என்பது தானே  இந்த படத்தின் கதை.

பாலாஜி சிறப்பாக எழுதியிருக்கிறார். அதனை இளங்கோ ராம் சிறப்பாக இயக்கி இருக்கிறார்.

பெருசு, கலகலப்பான பொழுதுபோக்கு !