மாடன் கொடை விழா

mysixer rating 5/5

45

a K Vijay Anandh review

தென் தமிழகத்தில், மத மாற்றத்திற்கு அதிகமாக இலக்காகும் ஒரு சமூகத்தில் உள்ள ஒரு குடும்பம், அந்த குடும்பத்து பெரியவரும் அவரது மனைவியும் மதம் மாறி விடுவதால், அந்த குடும்பம் மட்டுமல்லாமல் எப்படி அவரது உறவினர்கள் மற்றும் அவர் சார்ந்த சமூகத்தினர் தங்களது குலதெய்வ வழிபாட்டை இழந்து அவதிப்படுகின்றனர் என்பதை மிகவும் அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் தங்கபாண்டி.

நெய்வேலி பாரதி குமார், திருநெல்வேலி தமிழில் சிறப்பான வசனங்களில் எழுதி இருக்கிறார். தாமஸ் மகன் முருகனா, என்று வில்லனாக நடித்திருக்கும் டாக்டர் சூரிய நாராயணன் கேட்கும் வசனங்கள் முதல் ராமன் காட்டுக்கு போகும் பொழுது அவங்க அம்மா வரல மனைவிதான் சீதை தான் வந்தாள் என்பன போன்ற வசனங்கள் ஆகட்டும், பரமேஸ்வரன் பார்வதி திருமணத்தின் பொழுது ஏற்றப்பட்ட விளக்கின் சுடரிலிருந்து உருவானது தான் சுடலை மாடன் என்பது வரை படம் முழுவதும் மிகச் சிறப்பான வசனங்கள்.

குறிப்பாக இவன் யாருன்னு தெரியலையா என்று நாயகனை காண்பித்து நண்பன் கேட்க, சட்டுனு தெரியறதுக்கு இவர் என்ன காமராஜரா ? என்று நாயகி கேட்கும் இடமாகட்டும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் இயல்பாகவும் மண்ணின் மனம் மாறாமலும் இந்த படத்தை கொடுத்திருக்கிறார் தங்கபாண்டி.

தங்கபாண்டியின் அற்புதமான திரைக்கதைக்கு, நாயகன் கோகுல் கௌதம், நாயகி ஷர்மிஷா முதல் வில்லன் டாக்டர் சூர்ய நாராயணன் வரை அத்தனை பேரும் மிகவும் சிறப்பாக நடித்து வலு சேர்த்திருக்கிறார்கள்.

அந்தப் பகுதிகளில் நடக்கும் கூத்துக் கட்டுதல், வாத்தியார் , வாய் வழியாக கற்றுக் கொடுக்கப்படும் கலை எப்படி வழி வழியாக வந்து கொண்டிருக்கிறது போன்ற விஷயங்கள் அழகு.

கோகுல் கௌதம், அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி போகிறார். இறுதி காட்சியில் சுடலைமாடன் வந்து அவர் ஆடும் ஆட்டம் அருமை. நாயகியாக வரும் ஷர்மிசாவும் அந்த கிராமத்திற்கு உரிய துடுக்குடன் சிறப்பாக நடித்திருக்கிறார்.

சின்ராஜ் ராமின் ஒளிப்பதிவு மற்றும் விபின் ஆர் இன்   இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கின்றன.

இந்த வார வெளியீட்டில் மிகச் சிறந்த படமாக மாடன் கொடை விழா திகழ்கிறது. இந்தப் படத்தை திரையரங்கிற்கு சென்று திருவிழா போன்று கொண்டாடினால் நமது மண் சார்ந்த படங்கள் உண்மையான பிரச்சினைகளை தைரியமாக பேசும் படங்கள் அதிகமாக வெளிவரக்கூடும்.