a K Vijay Anandh review
ஐம்பூதங்களில் ஒன்றான நீரை வைத்து சூது விளையாடுவதால் கோபப்படும் மற்ற பூதங்கள் எப்படி மனிதர்கள் மத்தியில் பிரளயத்தை ஏற்படுத்துகின்றன, என்பதை மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் அருமையான திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஜெயவேல் முருகன்.
தனக்கென சொந்தமாக வாட்டர் பிளாண்ட் வைத்து வடசென்னையை ஆட்டி படைக்கும் ஆண்டவர் வாட்டர் சர்வீஸ் அய்யாயுவாக, ராதாரவி. என்ன ஒரு கம்பீரமான நடிப்பாளுமை ! மெதுவாக நடந்து கொண்டும் அதைவிட மெதுவாக வசனங்கள் பேசியும் அதிரடியாக நடித்திருக்கிறார் ராதாரவி.
இன்னொரு பக்கம் ஜான் வாட்டர் சர்வீஸ் நடத்தும் சரண்ராஜ். அவரது கேரியரில் நிச்சயம் இந்த கதாபாத்திரம் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்திருக்கிறது என்றால் மிகை அல்ல. தனது மனைவி மற்றும் மைத்துனன் ஆகியோரது தவறான வழி நடத்துதல்களில் சிக்கிக் கொள்ளாமல் கடைசிவரை நேர்மையான மனிதராகவே இருந்து விடுவது அழகு.
சின்னத்திரை மகேஸ்வரியா இவர் ? ராணியாக அப்படி ஒரு வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கிறார்.
வடசென்னை என்றாலே இரண்டு கதாநாயகர்கள் இரண்டு கதாநாயகிகள் போலும். துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் – கேப்ரிலா , பிரியதர்ஷன் – ஹரிப்பிரியா இரண்டு ஜோடிகளும் சிறப்பாக நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காட்சிகளும் அருமை.
இரண்டு வாட்டர் சர்வீஸ்களுக்கு ஏற்படும் பிரச்சனைக்குள் புகுந்து ஆதாயம் தேடப் பார்க்கும் காவல்துறை அதிகாரி மதுரை வீரனாக ஜீவா ரவி பயமுறுத்தி இருக்கிறார்.
டப்பாவாக வரும் சங்கர்நாத் விஜயன், ஹைட்டாக வரும் ஹைட் கார்தி ஆகியோரும் சிறப்பான வில்லத்தனம் காட்டி அசத்தி இருக்கிறார்கள்.
வருணன் காட் ஆப் வாட்டர், சமூகப் பிரச்சனைக்குள் ஒரு பொழுதுபோக்கு!