a K Vijay Anandh review
30 வயது ஆகியும் 40 வயதாகியும் ஏன் 50 வயதாகியும் திருமணம் ஆகாத ஆண்கள் ரியோ ராஜின் ரசிகர்களாக ஆகிவிட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் வாய்ப்பு இருக்கிறதா என்று அவரவர் குடும்ப ஜோதிடரை கேட்டு தெரிந்து கொள்ளவும். ஏனென்றால் அப்படி ஒரு பரிகாரம் நாளை சொல்லப்படலாம் என்கிற அளவிற்கு, ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கும் அத்தனை படங்களிலும் ஆரம்பக் காட்சியில் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா என்று அவரைப் பார்த்து நாயகி கேட்பதாகவும், அல்லது அவர் ஒரு நாயகியை பார்த்து கேட்டு பிரேக் அப் ஆகி விட்டால் கூட அவரை திருமணம் செய்ய இன்னொருவர் ரெடியாக இருப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டு வெளியாகிக் கொண்டிருக்கிறது கவனிக்கத்தக்கது.
இந்தப் படத்திலும், கோபிகா ரமேஷ் படத்தின் முதல் காட்சியிலேயே அதுவும் பரபரப்பான பெயிண்ட் பால் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா என்று ரியோ ராஜிடம் கேட்கிறார்.
அதன் பிறகு அவர்கள் யார் எப்படி காதலர்கள் ஆனார்கள் எப்படி காதலித்துக் கொண்டிருக்கிறார்கள் காதலித்துக் கொண்டிருக்கும் பொழுது நடைபெறும் சம்பவம் ஒன்று எப்படி அவர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் புரட்டிப் போடுகிறது என்பதாக இன்றைய காலகட்ட தலைமுறைக்கு ஏற்றவாறு ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுவினீத் 5 சுகுமார்.
ரியோ ராஜ் பேசும் வசனங்கள் மிகவும் குறைவு என்றாலும் அவருக்கும் சேர்த்து அவரது நண்பனாக வரும் அருணாச்சலேஸ்வரர் பேசி விடுகிறார்.
திருமணத்திற்கு முன்பே உறவு அதன் மூலம் கர்ப்பம் ஆகுதல், நைட் டூட்டி முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்காமல் உடலுறவுக்காக காதலன் வருகைக்கு காத்திருக்கும் பெண் போன்ற காட்சிகள் கொஞ்சம் நெருடலாக தான் இருக்கின்றது.
காதல், எந்த காலத்திலும் புனிதமானது என்றால், திருமணத்திற்கு முன்பான உடலுறவுகள் இன்று சகஜமாகிவிட்டது, அது ஒரு ஸ்டேட்டஸ் ஆகவும் மாறி இருக்கிறது, அது நல்லதா ? கெட்டதா ? என்று தெரியவில்லை. அதனை மையப்படுத்தி திரைப்படங்களாக எடுக்கப்படும் பொழுது, அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் விஷயங்கள் வீடு தோறும் நடக்கும் விஷயங்களாகி போகக்கூடும்.
ஸ்வீட் ஹார்ட் , யோசிக்க வைக்கும் சினிமா!