a K Vijay Anandh review
வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்படாமல் அவுட் ஆப் தி பாக்ஸ் திங்கிங் என்று சொல்லப்படும் வழக்கத்திற்கு மாறாக ஒன்றை கருவாகி உருவாக்கி படைப்பாக்கி வழங்க வேண்டியதுதான் ஒரு சிறந்த படைப்பாளியின் கடமை, அதனை அஸ்திரம் படம் மூலம் செல்வனே செய்து இருக்கிறார் அரவிந்த் ராஜகோபால்.
தரைப்படை குதிரை படை யானை படை மந்திரிகள் ராணி என்று இருந்தாலும் இரண்டு ராஜாக்களுக்கு இடையிலான உளவியல் போரே சதுரங்க விளையாட்டு. அந்த சதுரங்க விளையாட்டிற்குள் இன்னொரு உளவியல் தாக்குதலை தொடுத்து விளையாட்டிற்கு வெளியேயும், போர் படுகொலைகள் நடப்பது போல திரைக்கதை அமைத்து அஸ்திரம் படத்தை விறுவிறுப்பு ஆக்கியிருக்கிறார்கள்.
போர்க்களத்திற்கு வெளியே தோற்றவர்களும் தோற்கடிக்கப்பட்டவர்களும் ஜெயித்தவர்களுமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் , சம்பந்தமே இல்லாதவர்கள் செய்து கொள்ளும் அத்தனை தற்கொலைகளும் செய்து கொள்ளும் முறையால் சம்பந்தப்படுத்தி கொள்கின்றன.
அதனை துப்பு துலக்க அகிலன் என்கிற காவல்துறை அதிகாரியாக வரும் ஷாம் அவருடன் இணைந்து செயல்படும் ரஞ்சித் ஆகியவரது விறுவிறுப்பான துப்பறிவே அஸ்திரம்.
கிடைக்கும் ஒவ்வொரு தடயங்களையும் வைத்து மிகச் சரியாக மையப்புள்ளியை கண்டுபிடித்த ஷாமிற்கு அவரது வீட்டிற்குள் காத்திருக்கும் அதிர்ச்சி, ரசிகர்களையும் தொற்றிக் கொள்கிறது.
அதன் பிறகு அஸ்திரத்தின் மூலம் யார் அஸ்திரத்தின் இலக்குகள் யார் யார் என்று கண்டறியப்படும் புலனாய்வு ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
ஷாம் உடனாகவே பயணிக்கும் ரஞ்சித், தன்னுடைய அளவு இவ்வளவு என்று தெரிந்து பயணித்திருக்கிறார்.
கதாநாயகி நிரா, பெரிய ஆச்சரியங்களை ஒளித்து வைத்துக் கொண்டு அப்பாவியாக வலம் வருகிறார்.
நிழல்கள் ரவி, ஜீவா ரவி, விதேஷ் ஆனந்த் என்று கதைக்களத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார்கள்.
இந்த விறுவிறுப்பான புலனாய்வு திரைக்கதைக்கு, கல்யாண் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவு, பூபதியின் எடிட்டிங் மற்றும் சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை ஆகியவை நன்றாகவே கை கொடுத்திருக்கின்றன.
அஸ்திரம், ரசிகர்களை வசீகரிக்கும்!