a K Vijay Anandh review
நமது குடும்பங்கள் குறிப்பாக இந்திய குடும்பங்கள் ஏன் எதற்கு இப்படி என்று தெரியாமலே இப்படி தங்களை தாங்களே வருத்திக் கொண்டுதான் இருக்கின்றது.
நவீன வசதிகள் எட்டிப் பார்க்காத ஒரு காலம். அம்மா இருந்தும் இல்லாத மூன்று குழந்தைகள், அப்பா இருந்தும் அவரது பாசமும் அரவணைப்பும் அதிகார தோரணை என்கிற நிலையே கிடைத்துக் கொண்டிருக்கும் துரதிஷ்டசாலிகளான அந்த சகோதரர்களின் வாழ்க்கை தான் நாங்கள் .
மிதுன், ரித்திக் மோகன், நிதின் – தனுஷ் சிம்பு விஜயசேதுபதி மூவரும் சேர்ந்து நடித்தால் எப்படி இருந்திருக்குமோ… அதாவது அவர்களது குழந்தை பருவத்தில், அப்படி ஒரு நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். எப்பொழுது கிளம்புவார் எப்பொழுது வீடு திரும்புவார் என்று தெரியாத அப்பா, அப்படி ஒரு சூழ்நிலையில், அதிகாலை எழுந்து தண்ணீர் பிடிப்பதில் இருந்து வீடை சுத்தம் செய்வது துணிகளை துவைத்து போடுவது பாத்திரங்கள் கழுவுவது சமையல் என்று ஒவ்வொரு வேலையையும் பகிர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்கிறார்கள்.
உண்மையில் அவர்கள் சமையலில் ஊறுகாய் சாதம், வட இந்திய வீடியோக்களில் சில குழந்தைகள் உப்பை தொட்டு சாப்பிடுவதை பார்த்திருக்கின்றோம், இவர்கள் ஊறுகாய் சாதம் சாப்பிடுகிறார்கள். வெங்காயம் ஒரு கிலோ தக்காளி ஒரு கிலோ என்று வாங்கி வருகிறார்களே அவற்றையெல்லாம் என்ன செய்கிறார்கள் என்கிற கேள்வி எழாமல் இல்லை ..?
இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் வீடியோ கேம்களில் மூழ்கிக் கிடக்கும் தனது தட்டில் உள்ள விதவிதமான உணவுகளை கூட தனது கைகளால் எடுத்து சாப்பிட முடியாத அல்லது விரும்பாத அல்லது சோம்பேறித்தனமான குழந்தைகளுக்கு இவர்கள் ஒரு சிறந்த உதாரணமாக இருப்பார்கள் என்றால் மிகை ஆகாது.
நல்ல மனிதர் தான், அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்காக ஒரு பள்ளிக்கூடம் கட்டுபவர் தான் தனது தோட்டங்களில் வேலை பார்க்கும் வேலையாட்களுக்கு அன்பான முதலாளி தான் ஆனால் தனது மகன்களுக்கு மட்டும் ஏன் ஒரு சர்வாதிகார அப்பாவாக இருக்கிறார் என்று புரியாத புதிராக நடித்திருக்கிறார் அப்துல் ரஃபே. கடைசியில் எல்லாமே தனது மூன்று மகன்களுக்கும் தான் என்பதாக அவர் உடைந்து அழும் இடங்கள் அருமை.
முதலிலேயே சொன்னது போல அவர் மனைவியை எதற்காக பிரிகிறார் என்பது ரசிகர்களுக்கும் தெரிய வரப்போவதில்லை.
1999 இல் இருந்து 2000 வரையிலான இன்னும் குறிப்பாக சொல்ல போனால் ஒரு கல்வியாண்டில் நடக்கும் கதை, நாங்கள் .
வேத் சங்கர் சுகவனத்தின் இசை நன்றாகவே கை கொடுத்திருக்கிறது. இந்தப் படத்தை எழுதி இயக்கி, ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று முக்கியமான பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார் அவினேஷ் பிரகாஷ்.
நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்று சுய பரிசோதனை செய்து கொள்ள தூண்டுகிறது, நாங்கள்!