a K Vijay Anandh review
அஜித் குமாரை வைத்து 2D டிராயிங் எனப்படும், கார்ட்டூன் படங்கள் கொடுத்தால் கூட ரசிகர்கள் கொண்டாடுவார்கள் அந்த அளவிற்கு இன்று அவர் ஒரு உயரம் தொட்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் அப்படி ஒரு மாயையை ஆதிக்ரவிச்சந்திரன் ஏற்படுத்தி விட்டார் என்றால் மிகையல்ல.
ஆனாலும் படத்திற்குள் அற்புதமான ஒரு வரி கதை இருக்கிறது. குற்றங்கள் இல்லாதவனாக நம் குழந்தை முன் வந்து நில் என்கிற மனைவி சொல்லை வேதவாக்காக எடுத்துக்கொண்டு அதற்கு முன் தான் செய்த அத்தனை தவறுகளுக்கும் சட்டப்படியான தண்டனை அனுபவித்து விட்டு தனக்குப் பிறந்த மகனை 18 ஆண்டுகள் கழித்து பார்க்க வரும் கதாநாயகன், அஜித் குமார். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற மிக மிக அற்புதமான ஒரு கதைக்களம். பொதுவாக அஜித்குமார் படங்களில் நேரடியாக அரசியல் பேசாவிட்டாலும், இன்றைய ஜாமீன் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமே நடத்த இருக்கிறார், மறைமுகமாக.
வாக்காளர்கள் காலில் விழுந்து ஓட்டு வாங்குவது பதவியில் அமர்வது குற்றங்கள் செய்வது தண்டனைகளில் இருந்து தப்பிக்க பண பலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்துவது ஜாமீன் வாங்குவது வழக்கை இழுத்து அடிப்பது அடுத்த தேர்தலிலும் நின்று ஜெயிப்பது, முன்பை விட பெரிய தவறு செய்வது மறுபடியும் ஜாமீன் வாங்குவது இப்படி வாழ்க்கை முழுவதும் தான் செய்கிற தவறுகளுக்கு தண்டனைகளை அனுபவிக்காமல் மக்களுக்கு தண்டனைகள் கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியல் வியாதிகளுக்கு அற்புதமான பாடம் நடத்தியிருக்கிறார்.
சினிமா உருவாகி 100 ஆண்டுகள் ஆன நிலையில், ஆரம்ப காலகட்டத்தில் ஆடல் பாடல் என்று பொழுதுபோக்காகவே இருக்கும். அதன் பிறகு அந்த ஆடல் பாடல்கள் கொஞ்சம் குறைந்து இலக்கை நோக்கி படம் பயணிக்கும். இன்றைய சினிமாவில் கதாநாயகனுக்கும் கதாநாயகிமான ஆடல் பாடல் என்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டு இலக்கை நோக்கிய என்னத்தையே பிரதானப்படுத்தி படங்கள் வர தொடங்கி விட்டன. இதிலும் பாடல்கள் இருக்கிறது என்றாலும் அஜித் குமாரும் திரிஷாவும் ஆடிப் பாடுவது போல் அல்லாமல், சண்டைக் காட்சியில் ஒரு ரீமிக்ஸ் வில்லன் அறிமுகத்தில் ஒரு ரீமிக்ஸ் , வில்லனுக்காக பிரத்தியோக ரீமிக்ஸ் என்று பழைய பாடல்களை அற்புதமாக பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர். குறிப்பாக ஒத்த ரூபாயும் வேணாம் …. என்கிற பாடலுக்கு ஸ்பெயின் அழகிகள் ஆடிப் பாடுவது அழகோ அழகு.
அஜித் குமார் படங்களில் இவரைத் தாண்டி வேறு யாரும் ஸ்கோர் செய்வது முடியாது என்கிற நிலையில், வில்லனாக வரும் அர்ஜுன் தாஸ் க்கு, இரட்டை வேடம் கொடுத்து ஸ்கோர் செய்ய உதவி இருக்கிறார்கள், அவரும் தன் பங்கிற்கு சிறப்பாக செய்திருக்கிறார்.
திரிஷா, சிவகுமாருக்கு அப்புறம் திரையுலகில் இவர் ஒரு மார்க்கண்டேயி.
பிரசன்னா, இவர் கதாநாயகனாக நடித்த படங்களில் கூட இவ்வளவு ஸ்டைலிஷ் ஆக வருவதில்லை. இந்த படத்தில் இவரது தோற்றம் மற்றும் உடைகள் அழகு.
பிரபு வழக்கம் போல தன் பங்கினை நிறைவாக செய்திருக்கிறார்.
GOOD BAD UGLY, நேர்த்தியான கமர்சியல் மசாலா !