a K Vijay Anandh review
பெயர் கேஸ்ட்ரோ, நெற்றி நிறைய திருநீறு, கழுத்தில் ஐயப்ப மாலை, பையில் தயாராக கட்டி வைத்திருக்கும் இருமுடி, உடலில் கம்பீரமான காக்கிச்சட்டை சிபி சத்யராஜின் கதாபாத்திரமே அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்த விதமே மிகவும் வித்தியாசமாக இருந்தது, ரசிகர்களுக்கும் இது நிச்சயம் புது அனுபவத்தை கொடுக்கும். அந்த வகையில் படம் ஆரம்பிக்கும் பொழுதே, இயக்குனர் இளையராஜா கலிய பெருமாள் ஏதோ ஒன்றை வித்தியாசமாக சொல்லப் போகிறார் என்று படம் பார்க்கும் ஒவ்வொருவரும் நிமிர்ந்து உட்கார போவது உறுதி.
விடிந்தால் சபரிமலைக்கு போக வேண்டும், அந்த இரவு முழுவதும் காணாமல் போன ஒரு பெண்ணை தேடி கண்டுபிடிக்க வேண்டிய, மிகப்பெரிய பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஆக இருக்கும் சிபி சத்யராஜ் மீது வந்துவிட, அதைத்தொடர்ந்து நடக்கும் பரபரப்பான பத்து மணி நேர திரைக்கதை தான் டென் ஹவர்ஸ்.
எப்படி படம் ஆரம்பிக்கும் பொழுது சிபி சத்யராஜின் வித்தியாசமான கதாபாத்திர வடிவமைப்பில் இயக்குனர் இளையராஜா கலியபெருமாள் சபாஷ் போட வைத்தாரோ அதேபோலவே படத்தின் இறுதி காட்சியில், ஓட்டிங் மிஷின் என்கிற கதாபாத்திரத்தை கையில் எடுத்து யாருமே யூகிக்க முடியாத இறுதிக் காட்சியை கொடுத்திருக்கிறார்.
சிபி சத்யராஜிற்கு நிச்சயம் இந்த படம் மிகச் சிறப்பாகவே கை கொடுக்கும் பெயர் வாங்கிக் கொடுக்கும் என்றால் மிகை அல்ல. அவரும் ஒரு துடிப்பான காவல்துறை அதிகாரியாக அதிலும், புலனாய்வில் கிடைக்கும் சிறு துரும்பை வைத்துக்கொண்டு குற்றப் பின்னணியை கண்டுபிடிக்கும் புத்திசாலி காவல்துறை அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஆப்பிள் கடி சம்பவத்தை வைத்து யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு குற்றத்தை குற்றவாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை நினைவுபடுத்தும் சக காவல்துறை அதிகாரியாக கஜராஜ், ராமாயண ஜாம்பவான் கதாபாத்திரத்தை நினைவுபடுத்துகிறார்.
கதாநாயகி இல்லை , டூயட் இல்லை, காமெடி காட்சிகள் இல்லை, இன்றைய தலைமுறை இயக்குனர்கள் இலக்கை நோக்கியே பயணிக்கும் திரைக்கதைகளை மிகவும் அற்புதமாக அமைத்து ரசிகர்களுக்கும் வித்தியாசமான விருந்து படைக்கிறார்கள் என்பதற்கு இந்த வார உதாரணமாக டென் ஹவர்ஸ், திகழும் என்றால் அது மிகையல்ல.
99.99% மக்கள் சாதாரணமாக சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கும் அந்த 10 மணி நேரத்தில், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக காவல்துறை என்கிற ஒன்று எவ்வளவு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது போன்ற காட்சி அமைப்புகள் அற்புதம். நடுவே, அவர்களுக்கு உதவியாக போஸ்ட் மார்டம் செய்யும் மருத்துவர்களும் அவர்களோடு கை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஜீவா ரவி அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருக்கிறார்.
ராஜ் ஐயப்பா மற்றும் சாரு மிஷா ஜோடி படத்தின் மைய கதாபாத்திரங்களாக வந்து, அதாவது கதையின் மையப் புள்ளியாக வந்து நிறைவாக செய்திருக்கிறார்கள்.
நாளை தேர்தல் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அதை மாற்றி அமைக்க ஆசைப்பட்டு மாட்டிக்கொள்ளும் வில்லன் வேடத்தில் திலீபன் சிறப்பான வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.இப்படி எத்தனை பயலுக நம்ம ஊர்ல ஜெயிச்சிருப்பாங்க என்று நினைத்தாலே பகீரென்று இருக்கிறது.
பொதுவாக இப்படிப்பட்ட திரைக்கதைகளை வேகமாக நகர்த்த பின்னணி இசை தான் பெரிதும் உதவும். அந்த வகையில் கே எஸ் இன் இசை உதவி இருந்தாலும், ஜெய் கார்த்திக்கின் அற்புதமான ஒளிப்பதிவு, காவல்துறை அதிகாரி கேஸ்ட்ரோவுடன், அவரது பயணத்தில் நம்மையும் அழைத்துச் சென்றிருக்கிறது.
டென் ஹவர்ஸ் கதையை டூ ஹவர்ஸில் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார் இளையராஜா கலியபெருமாள்.