வல்லமை

mysixer rating 3.5

265

a K Vijay Anandh review

முழுக்க முழுக்க ஒரு குழந்தைத்தனமான படம் தான் வல்லமை, ஆனால், இயக்குனர் கருப்பையா முருகன்,  படத்தின் மையப்புள்ளியாக சொல்லயிருக்கும் விஷயமோ இந்த உலகில் உள்ள ஒட்டுமொத்த அணு ஆயுதங்களையும் ஒரே இடத்தில் வீசினால் என்ன ஒரு அபாயத்தை விளைவிக்குமோ அப்படிப்பட்ட ஒரு  தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் அது மிகையல்ல.

தனது மனைவியை பறி கொடுத்துவிட்டு சொந்த கிராமத்தில் இருந்து தன் ஒரே மகளுடன் சென்னைக்கு பிழைக்க வரும் சரவணனாக பிரேம்ஜி. அவரது மகளாக திவ்யதர்ஷினி, கட்டிட வேலை நிறைவு பெறாத ஒரு வாடகை வீட்டில் தங்குகிறார்கள். பிரேம்ஜி தொடர்ந்து இதுபோன்ற நல்ல கதைய அம்சம் உள்ள படங்களில் அடுத்தடுத்து கதாநாயகனாக நடித்து வருவது பாராட்டத்தக்கது. அதுவும் நேர்மறை கதாபாத்திரங்களிலேயே நடிப்பது கூடுதல் சிறப்பு. இந்தப் படத்திலும் பழி பாவங்களுக்கு அஞ்சும் அதே சமயம் அசுரனை வதம் செய்ய கிளம்பும் ஒரு அற்புதமான கதாபாத்திரம். “அவனை விட்டு விட கூடாத அப்பா அப்படியே விட்டுவிட்டால் இன்னும் எத்தனை சிறுமிகளை சீரழிப்பான்.. அவளை கொல்லனும்…” என்று வெள்ளந்தியாக பூமிகாவாக நடித்திருக்கும் பிரியதர்ஷினி கேட்கும் இடம் அருமை.

வில்லன் சக்கரவர்த்தியாக CR ரஜித்,  அவர் செய்த குற்றத்தை காண்பிக்காமலேயே அவரை  பிரேம்ஜி பழி வாங்குகிறார். அந்த காருக்குள், சென்று திரும்பும் காட்சியை ஃப்ளாஷ் கட்டில் கொஞ்சம் இலை மறை காயாக காட்டி இருக்கலாம் என்றாலும் அப்படி ஒரு காட்சியை காட்டித்தான் பாலியல் குற்றங்களை சொல்ல வேண்டும் என்பது இல்லை வசனங்கள் மூலமாகவே சொல்லிவிடலாம் என்று முடிவு செய்த கருப்பையா முருகன் பாராட்டுக்குரியவர்.

பக்கத்து வீட்டில் பெட்ரோல் திருடுபவராக விது, ஆனாலும் எழுந்து மூத்திரம் கூட போக இயலாத தாத்தாவை பராமரித்துக் கொண்டிருக்கும் நல்ல இளைஞன்.

தீபா சங்கர், முத்துராமன், சூப்பர் குட் சுப்ரமணி, போராளி தீபன், சுப்பிரமணியன் மாதவன் என்று அனைவரும் தங்கள் பங்கை யதார்த்தமாக வழங்கி இருக்கிறார்கள்.

வல்லமை கதையை பொருத்தவரை அதில் அந்த சிறுமியின் அம்மா இறந்து விடுகிறார், அதே நேரம் இப்படிப்பட்ட பல குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் விவாகரத்திற்காக பல பெற்றோர்கள், காத்திருக்கிறார்கள். அவர்களது குழந்தைகள் ஆணோ பெண்ணோ தந்தையிடமோ அல்லது தாயிடமோ மாட்டிக் கொண்டு பெற்றோர்களின் முழுமையான அரவணைப்பு இல்லாமல், பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு சிதைந்து போகிறார்கள்.  இந்த படம் பார்த்துவிட்டு பாலியல் குற்றவாளிகள் திருந்துகிறார்களோ இல்லையோ, குழந்தைகளை வைத்துக்கொண்டு விவாகரத்திற்கு கோர்ட் படி ஏறி இருக்கும் பெற்றோர்கள் விவாகரத்தை தூக்கி எறிந்து விட்டு குழந்தைகளுக்காக ஒன்றாக வாழ முடிவு எடுத்தால் அதுவே,  இந்த படத்தின் வெற்றியாக இருக்கும்.