a K. Vijay Anandh review
படத்தில் காயலான் கடைக்கு பழைய இரும்பு சாமான்கள் போடும் யோகிபாபு அவரை Bolt கண்ணனாக புரிந்து கொள்கிறார், ருக்மணி வசந்தும் – திவ்யா பிள்ளையும் அவரை Bold கண்ணனாக புரிந்துகொள்கிறார்கள், படம் பார்க்கும் ரசிகர்களுக்கோ அவர் கெத்து கண்ணனாக படம் முழுவதும் , விஜய்சேதுபதி.
படத்தின் ஆரம்பக்காட்சிகளைப் பார்க்கும் பொழுது, சீனாவில் மஹாராஜாவின் மாபெரும் வெற்றியைத்தொடர்ந்து இந்தப்படத்தை முழுக்க முழுக்க சீனாவில் எடுக்கச்சென்றுவிட்டார்களோ என்று தோன்றியது. போகப்போகத்தான் மலேசியா என்று தெரிகிறது.
மிகப்பெரிய குற்றப்பின்னணியோடு, வளைகுடா நாட்டிலிருந்து மலேசியாவுக்கு வரும் விஜய்சேதுபதி, போல்ட் கண்ணனைத்தேடும் யோகிபாபுவுடன் போல்ட் கண்ணனாகவே மாட்டிக்கொள்ள, அதிலிருந்து படம் அதிரிபுதிரியாக டேக் ஆஃப் ஆகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நாயகன் – காமெடியன் கெமிஸ்ட்ரி இந்தப்படத்தில் மிகச்சிறப்பாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. விஜய்சேதுபதியும் யோகிபாபுவும் அதகளம் செய்திருக்கிறார்கள். குறிப்பாக, யோகிபாபுவை மிகச்சரியான மீட்டருக்கு கொண்டு வந்து நடிக்க வைத்திருக்கிறார், அவரது காமெடிகளை ரசிக்கும் படி செய்ய வைத்திருக்கிறார் இயக்குநர் ஆறுமுக குமார். எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி டேட் பண்ணவா இல்ல சாட் பண்ணவா… என்கிற வரிகளை யோகிபாபுவின் பெண் கெட் அப்புக்கு ஒரு தடவை பாடலாம் என்கிற அளவிற்கு ஒரு காட்சியில், கருப்பழகியாக. ஒவ்வொரு முறையும் தன் ஓட்டை வாயால் , அனைவரயும் சிக்கவைக்கும் யோகிபாபு, அதையும் முறியடிக்க திட்டங்கள் போடும் விஜய்சேதுபதி என்று ஒரு பரமபதமே விளையாடியிருக்கிறார்கள்.
பெரிய உடல்மொழிகள் இல்லாவிட்டாலும், அன்பு, பாசம், பரிதாபம், பயம், கோபம் என்று அனைத்தையும் கண்களாலேயே வெளிப்படுத்தி அசத்துகிறார் விஜய் சேதுபதி. கல்பனா கதாபாத்திரத்தில் வரும் பிரியா பிள்ளையுடனான நட்பு ஆகட்டும், ருக்மணியுடனான காதல் ஆகட்டும், ஒட்டுமொத்தமாக வில்லன்களுக்கு தண்ணி காட்டி ஆடியிருக்கும் கதகளியாகட்டும், வேறலெவல். அவரது முழு நீள கமர்ஷியல் பிளாக்பஸ்டர் மசாலாவாக இந்தப்படம் இருக்கும்.
ருக்மணி வசந்த் மற்றும் பிரியா பிள்ளை கதாபாத்திரங்கள் மிகவும் கண்ணியமாக முதிர்ச்சியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ருக்மணி ஒரு படிமேலே, பொறியில் அகப்பட்டுக்கொண்ட கிளியாக, விஜய்சேதுபதியுடனான காதல் – கண்டிப்பு என்று தனது உணர்வுகளை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
வில்லன் தர்மாவாக பி எஸ் அவினாஷ், ஒரு பொறுக்கித்தனமான மலேசிய காவல்துறை அதிகாரியாக பப்லு பிரிதிவிராஜ் என்று அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
முன்னாடியெல்லாம் வெளி நாடு என்றாலே அதன் கட்டுமானங்கள் நமக்கு பிரமிப்பை கொடுக்கும், இப்பொழுது நம்மூரிலேயே அதைவிட சிறப்பான கட்டுமானங்கள் வந்துவிட்டதாலும், நம்மூரில் நடப்பது போலவே முருகன் வழிபாடு தசரா திருவிழா என்று அங்கேயும் நடப்பதாலும், ஏதோ நம்மூரில் எடுக்கப்பட்ட படம் மாதிரியே தான் இருக்கிறது. ஆனாலும், நீர் நிலைகளை எவ்வளவு அற்புதமாக பரமாரிக்கின்றார்கள் என்பதில் தான் வெளிநாடு கொஞ்சம் நம்மைவிட ஒருபடி மேலாக நிற்கின்றது.
ACE, ஜாக்பாட் !