நரிவேட்டை

mysixer rating 4/5

236

a K. Vijay Anandh review

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், இந்தியாவின் ஆக்சிஜன் மற்றும் மழை உற்பத்தி மையமான  மேற்குதொடர்ச்சி மலை மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் அமைந்த மலைத்தொடர்களில் வசிக்கும்,  பழங்குடிகள், மலைவாழ்மக்கள் அல்லது ஆதிவாசிகள்  ஆகியோர்களை முறையாக போற்றி பாதுகாக்கும் வழி முறைகள் எட்டப்படாதது துரதிஷ்டம்.  அவர்களுக்கான, இன்றைய சூழலுக்கு ஏற்ற பாதுகாப்பான வசிப்பிடங்கள், வாழ்வாதாரங்கள், கல்வி, மருத்துவக்க்கட்டமைப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்தாமல் இருப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. வனத்தின் வனவிலங்குகளின் வன ஆதாரங்களின் பாதுகாப்பாளர்களாக விளங்கும் அவர்களைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததே அதற்கு காரணம்.

அப்படி, தங்களுக்கு தேவையான பாதுகாப்பான வசிப்பிடங்கள் மற்றும் வாழ்வாதாரங்களுக்காக அரசாங்கத்திற்கு எதிராக அமைதி வழியில்  போராட்டம்  நடத்தும் மலைவாழ்மக்களை, அரசு இயந்திரம் எப்படி வேட்டையாடுகிறது, அக்கூட்டத்திலிருந்து மனசாட்சி உள்ள ஒருவன் எப்படி அரசின் பக்கம் இருந்து, அவர்கள் பக்கமாக செல்கிறான் என்பதே நரிவேட்டை படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.

படம் மிகவும் மெதுவாக நகர்வது போலத்தோன்றினாலும், மிகவும் ஆழமான அழுத்தமான திரைக்கதை நமக்குத்தெரியாமலே வேகமாக பயணிக்கின்றது. நாட்டின் அதிவேக வந்தே பாரத் இரயிலுக்குள் அமர்ந்து பயணிப்போருக்கு  எப்படி அதன் வேகம் தெரிவதில்லையோ அதைப்போல!

அற்புதமான கதைக்களத்தை எழுதிய அபின் ஜோசப்பிற்கு ஒரு பாராட்டுகள்.

தனக்குப்பிடித்த நல்லவேலைக்கு முயற்சி செய்துகொண்டிருக்கும் இளைஞனாக டொவினோ தாமஸ், கடைசில் தனக்குப்பிடிக்காத போலிஸ் கான்ஸ்பிடள் வேலையில் சேர்ந்துகொண்டாலும், அனைவருக்கும் பிடித்தமானவராக மாறிபோகிறார்.  முதலில், தங்களுடைய கோபத்தை சாமான்யன் மீது காட்டும்  சாதாரண போலிஸ் கான்ஸ்பிடளாக  வலம் வருபவரை, தனக்கு பிடித்தமான மூத்த அதிகாரின் மர்மமான மரணம் புரட்டிப்போடுகிறது.  மலைவாழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்காமல், அரசின் கெளரவம் என்கிற குறிக்கோளுடன் அவர்களை நசுக்கப்பார்க்கும் காவல்துறை அதிகாரவர்க்கத்திற்கு எதிராக களமிறங்கிறார். அவரது கதாபாத்திர படைப்பு அற்புதம், மிகவும் யதார்த்தமாகவும் நடித்திருக்கிறார் டொவினோ தாமஸ்.

இன்னொரு பக்கம், கட்டளைக்கு கீழ்ப்படிதல் என்கிற ஒற்றை தாரக மந்திரத்திற்கு கட்டுப்பட்ட காவல்துறை உயரதிகாரி கேசவன் தாஸாக சேரன், இதுவரை ஏற்காத ஒரு எதிர்மறை என்றும் சொல்லமுடியாத நேர்மறை என்றும் சொல்லமுடியாத கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருடைய பேச்சிலும், நடையிலும், கண்ணசைவிலும் வஞ்சகத்தை கொட்டியிருக்கிறார்.   மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்பதற்கிணங்க, தன்னைவிட ஆஜானுபாகுவான்களாக இருக்கும் நூற்றுக்கணக்கான காவலர்களை கம்பீரமாக முன்னின்று வழி நடத்துகிறார், சேரன்

வயநாடு மலைப்பகுதியில், காவலர்களுக்கு அமைக்கப்பட்ட தற்காலிக குடில்கள், மலைவாழ் மக்களின் குடிசைகள் என்று எம் பவாவின் கலை வண்ணத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும். குறிப்பாக, மலைவாழ் பழங்குடி மக்களின் கோயிலில் அவர்கள் பாடி ஆடும் காட்சிகளும் பிரமிப்பூட்டும் ரகம்.  அழகு கொஞ்சும் கேரள பகுதிகளை அற்புதமாக படம்பிடித்திருக்கும் விஜயின் ஒளிப்பதிவும் அருமை.

அவரவர் சீருடையில்  காவல்துறை அதிகாரி , இராணுவ வீரர் சண்டைக்காட்சி பார்க்கும் போது புதிதாக இருந்தது. ஆனாலும், மா நில அரசின் சதித்திட்டங்களுக்கு இராணுவவீரர் உதவுவது போன்ற காட்சியமைப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

கிரைம் திரில்லர் என்றாலும், சமூகப்பிரச்சினைகள் என்றாலும் மிகவும் நம்பகத்தன்மையோடு படம் எடுப்பதில் நாங்க தான் நம்பர் 1 என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டிருக்கிறார்கள் மலையாள படைப்பாளிகள். நரிவேட்டை படம் மூலம் அதன் இயக்குநர், அனுராஜ் மனோகரும் அதற்கு வலுசேர்த்திருக்கிறார்.

நரிவேட்டை, மலைவாழ் பழங்குடிகளை பாதுகாப்போம் என்கிற கோஷத்தை முன்வைக்கின்றது. அதனை நாமும் வழிமொழிவோம் !