a K Vijay Anandh review
வெற்றிக்கு, காதல் காமெடி சென்டிமென்ட் சண்டை காட்சிகள் என்று அனைத்தும் கலந்த முழுமையான முதலாவதான ஜனவரஞ்சக படம் ராஜபுத்திரன் என்று சொல்லலாம். வாத்தியார் அடித்துவிட்டார் என்பதற்காக பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவில்லை, வேலைக்கு போனால் எவ்வளவு ஒருவனுக்கு கீழ் வேலை செய்ய வேண்டுமே என்பதற்காக வேலைக்கும் அனுப்புவதில்லை, வீட்டிற்குள்ளேயே தன்னை அடைகாக்கும் தந்தையிடமிருந்து எப்படி தனக்கான அடையாளத்தை நிலை நிறுத்த முயல்கிறார், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அதிலிருந்து மீள்கிறாரா ? என்பதே ராஜபுத்திரன் படத்தின் விறுவிறுப்பான கதைக்களம். திருப்பாச்சி கில்லி போன்ற படங்களைப் போல இதிலும் அண்ணன் – தங்கை காமெடி காட்சிகளை ரசிக்க முடிகிறது.
இதுவரை பார்க்காத வெற்றியை இந்த படத்தில் பார்த்து ரசிக்கலாம், அவருக்கும் இதுவரை பார்க்காத வெற்றியை இந்த படம் கொடுக்கலாம்.
பொதுவாக இது போன்ற கதைக்களங்களில் மறத்தமிழன் போன்ற தந்தை கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடிப்பார். இதில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் மறத்தமிழனாக ஒரு மறத்தமிழனே – பிரபுவே நடித்திருக்கிறார். ஒரு அனுபவ நடிகர் என்பதை காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார் பிரபு. மகனை இப்படி வளர்த்து விட்டோமோ என்கிற கவலை. ? மகனுக்கு முக்கியத்துவம் கொடுத்து மகளை மறந்து விட்டோமோ என்கிறதை பதைப்பு… என்று எல்லாமும் ஆக சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் இவரை ஒரு இடத்தில் பெரிய தம்பி என்று சொல்வார்கள், ஆம் சின்ன தம்பிக்கு உரித்தான வெள்ளந்தித்தனம், தனது பிள்ளைகளுக்கு ஒன்று என்றால் வில்லன்களிடம் காட்டும் வெறித்தனம் என்று இவரை ஒரு பெரிய தம்பியாக இந்த படம் அடையாளம் காட்டும் என்றால் மிகையல்ல.
பூச்செண்டு, தமிழ் சினிமா கதாநாயகிகளின் பெயரில் இத்தனை அழகான பெயரை இதுவரை கேட்டதில்லை என்கிற அளவிற்கு அருமையான கதாபாத்திர பெயர், அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமான கிருஷ்ண பிரியா. வெறுமனே அழகு பதுமையாக மட்டும் வராமல், ராஜபுத்திரன் கதை நடக்கும் இராமநாதபுரம் மண்ணிற்கே உரித்தான வேலு நாச்சியார் வீரத்தையும் காட்டி விடுகிறார். இந்தப் படத்திற்கு டிக்கெட் எடுத்து திரையரங்கிற்குள் செல்வதாக இருந்தால் தயவு செய்து, பூச்செண்டு புலி அவதாரம் எடுக்கும் அந்த முதல் காட்சியை தவற விட்டு விடாதீர்கள். அந்த காட்சியை, கண்கலங்க வைக்கும் இறுதி காட்சியில் சேர்த்து விடுகிறார் இயக்குனர் மகா கந்தன். பிரமிப்பூட்டும் காட்சிகளில் இந்த காட்சி முதன்மையானது என்று சொன்னால் மிகையல்ல.
இமான் அண்ணாச்சி, பிரபுவின் தோழராக படம் முழுவதும் மிகவும் இயல்பாக வந்து போகும் ஒரு கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தின் பெயருக்கு ஏற்றது போலவே, சுந்தரமாக அமைந்திருக்கிறது.
இரண்டு மூன்று காட்சிகள் தான் என்றாலும், குவைத் குமரேசன் ஆக வரும் தங்கத்துரையின் நகைச்சுவை காட்சிகள் வெடிச்சிரிப்பு ரகம்.
மன்சூர் அலிகான், இவரைப் பற்றி என்ன சொல்வது. மனிதர் திரையில் தோன்றினாலே அதகளம் தான்.
லிங்கா என்கிற வில்லனாக வரும் கோமல் குமார், யார்யா இந்த ஆளு என்று தயாரிப்பாளர்களால் வலை வீசி தேட போகும் நடிகராக இனிமேல் வலம் வருவார்.
லிவிங்ஸ்டன் மற்றும் ஆர்வி உதயகுமார் தங்களது அற்புதமான அனுபவ நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக கதை நடக்கும் இராமநாதபுரம் நிலப்பரப்பை குறிப்பாக கடல் மணலும் கருவல்காடுகளும் நடுவே சுண்டைக்காய் செடிகளும் மயில் சத்தங்களும் நிறைந்து காணப்படும் அந்த நிலப்பரப்பை மிகவும் அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆலிவர் டெனி.
ஏ ஐ எஸ் நோபல் ராஜாவின் இசையில் வைரமுத்து, மோகன் ராஜாவின் வரிகள் அருமையாக இருக்கின்றன.
ஐயப்பனின் கலை இயக்கத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். குறிப்பாக லிங்காவின் இடமாக காட்டப்படும் பாழடைந்த ஒரு குட்டி அரண்மனை அல்லது ஒரு குட்டி கோயில் போன்ற கட்டிடம் வியக்க வைத்திருக்கின்றது. கேட்டால் , அது திருப்புல்லாணி வரும் ராமநாதபுரம் மன்னர்களின் ஓய்வு எடுக்கும் மாளிகை என்று சொல்கிறார்கள்.
சென்னை மெரினா பீச்சில் இந்த தேசத்தை சூறையாட வந்த மொகல் அரசர்களின் வாரிசுகளில் ஒருவனான ஹுமாயூன் வந்து ஓய்வெடுத்ததாக சொல்லப்படும் சிதிலமடைந்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய ஒரு மாளிகை ஒன்று. நமது மாநில அரசுகளால் பல கோடிகள் செலவு செய்து போட்டி போட்டுக் கொண்டு புணரமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால், நமது மண்ணை ஆண்ட நமது மன்னர்களின் மாளிகைகள் இப்படி சிதிலமடைந்து கேட்பாரற்று கிடக்கிறதே என்று இந்தப் படத்தின் வாயிலாக மக்களை யோசிக்க வைத்திருக்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள் . அத்துடன், வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் குடும்பத்தினருக்கு இங்கிருந்து ஒருவன் பணமாக பட்டு வாடா செய்கிறான் என்றால், அங்கே வேலை பார்ப்பவர்கள் வங்கி மூலமாக வாங்கும் சம்பளம் எங்கே போகிறது…? எப்படி அது இங்கே பணமாக வீடு வீடிற்கு விநியோகிக்கப்படுகிறது..? என்பதாக நமது அமலாக்க துறையினருக்கும், சமூக பொறுப்புடன் ஒரு எச்சரிக்கை மணியும் அடித்திருக்கிறார்கள்.
படத்தில் காட்டப்பட்டிருக்கும் , ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான சிவாலயம், கோவில் மாரியூர் என்கிற கடற்கரை கிராமத்தில் வீற்றிருக்கும் பவளநிறவள்ளி உடனுறை பூவேந்தியநாதர் ஆலயம் கோபுரங்கள் மற்றும் சுற்றுச்சுவர்கள் இல்லாமல் காணப்படும் காட்சி, அனைவரையும் கண்கலங்க வைக்கும். இந்த ஆலயத்தை உலகம் முழுவதும் ராஜபுத்திரன்திரைப்படம் வாயிலாக கொண்டு சேர்த்ததற்கு படக்குழுவினருக்கு நன்றி.
அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை சொல்லும், குடும்ப உறவுகளை, நட்பை, பக்தியை, கலாச்சாரத்தை சொல்லும் மெகா படமாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் மகா கந்தன்.
தேவர் மகன், கொம்பன் வரிசையில் ராஜபுத்திரன் ஒரு சிறப்பான இடத்தை பிடிப்பான்!
.