a K Vijay Anandh review
சாதியை ஒழிப்பதற்காக சாமியை ஒழிப்பது, மதத்தை ஒழிப்பது என்பது தலையைச் சுற்றி மூக்கை தொடுவது அல்ல, கவட்டைக்குள் கையை விட்டு மூக்கை தொட முயற்சிப்பதற்கு சமம். ஏனென்றால், அது நடக்காது, தேவையுமல்ல!
நான் இன்ன சாதி என்று சொல்லிக்கொள்வதிலும் கூட பிரச்சினைகள் இல்லை.
பிரச்சினைகள் எங்கே ஆரம்பிக்கின்றது என்றால், சில சாதிகளை தங்களை விட உயர்ந்த சாதி என்று நினைத்துக்கொள்வதிலும் சில சாதிகளை தம்மை விடக்கீழான சாதி என்று நினைத்துக்கொள்வதிலும் தான்.
அதிலும் ஒரு படி மேலே சென்று தம்மை விட கீழான சாதியைச் சேர்ந்த ஆணையோ பெண்ணையோ தங்கள் வீட்டு ஆணோ பெண்ணோ காதலித்து திருமணம் செய்துகொண்டால், தங்களது வாரிசுகள் என்றும் பாராமல், கெளரவக்கொலை என்கிற பெயரில் ஆணவக்கொலைகள் செய்துவிடுவது.
அப்படி தனது சாதீயத்திமிரால், எதுவும் தெரியாமல், தான் முற்றிலும் வெறுக்கும் சாதியைச் சேர்ந்தவனை தனக்குப் பிறந்தது போல தன் வீட்டிலேயே வளர்த்து ஆளாக்கி, தனது சாதி செல்வாக்கால், எம் பி சீட் வாங்கிக்கொடுக்கும் நிலையில், அந்த குழந்தையின் பிறப்பின் ரகசியம் தெரிய வரும் போது என்ன ஆகும் ?
அப்படிப்பட்ட சாதி வெறி பிடித்தவர்களின் சாதியை ஒழிக்க முயலாமல். அவர்களது சாதீயத்திமிரை மட்டும் கொன்று புதைத்து கூனிக்குறுகி நிற்க வைத்துவிடுகிறார், இயக்குநர் எஸ் சிவப்பிரகாஷ்.
சாதி வெறிபிடித்தவர்கள் அதனை வெளியே சொல்லவும் முடியமல், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் நடைப்பிணமாக நிற்பதை பார்க்கும் போது, அடடா சபாஷ்டா … என்று பாராட்டத்தோன்றுகிறது.
அந்த வகையில், சாதீயத்திமிரை அடக்கும் படங்களின் வரிசையில், பேரன்பும் பெருங்கோபமும் முதலாவது இடத்தில் வந்து இயல்பாக அமர்ந்துவிடுகிறது.
எஸ் சிவப்பிரகாஷின், இந்த சிறப்பான தரமான சம்பவத்தை குடும்பத்தோடு திரையரங்கில் சென்று அனுபவித்து மகிழுங்கள்!
விஜித் பச்சன், 100 வது படத்தில் நடிக்கவேண்டிய கதைக்களத்தில் தனது முதலாவது படத்திலேயே அசால்டாக களமாடி ஜெயித்திருக்கிறார். தனது கிராமத்தில் ஒரு காதலுக்கு துணை போவது, ஊர் விட்டு ஊர் சென்று நர்சிங் படிப்பது, அங்கே ஒரு பெண்ணை காதலித்து கரம்பிடித்து ஊருக்கு அழைத்துவருவது, பணியில் இருக்கும் போது மறைந்துவிட்ட அப்பாவின் அரசு வேலையை பெற நடையாய் நடப்பது, எல்லாம் கைகூடி வரும் போது, அனைத்தையும் இழந்தாலும், சாதீயத்திமிர்களை ஒழிக்கவேண்டும் என்கிற தீயை மட்டும் அணையாமல் பார்த்துக்கொண்டு சாதிப்பது என்று மிரட்டியிருக்கிறார்.
ஷாலி நிவேகாஸ், மற்ருமொரு அழகான கேரளத்து வரவு. அழகுடன் திறமையும் சேர்ந்து தனது நடிப்பில் ஜொலித்திருக்கிறார்.
சாதிவெறி பிடித்த அரசியல்வாதியாக மைம் கோபி, அவரது உதவியாளராக வரும் அருள்தாஸ், சாதிச்சங்க தலைவராக வரும் லோகு, சாதிவெறியில் ஆணுக்கு பெண் சளைத்தவள் அல்ல என்பதை காட்டும் விஜித் பச்சனின் அம்மாவாக வரும் சுபத்ரா ராபர்ட் என்று அனைவரும் பயமுறுத்தியிருக்கிறார்கள்.
தீபா சங்கர் போடும் சாமியாட்டம், வலீனாவின் காதல் என்று அந்த கிராமத்தை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஹரிதாவின் ஒரு பொய் ஷாலி நிவேகாஸுக்கு சாதிவெறி பிடித்த மாமியாரிடமிருந்து தற்காலிகமாக ஒரு அரவணைப்பை வழங்குகிறது. வழக்கம் போல, திரைக்கதையின் முக்கியமான ஒரு கதாபாத்திரமாக ஹரிதா, சிறப்பாக நடித்திருக்கிறார்.
நீதிபதியாக வரும் கீதா கைலாசம், அரசுக்கு கெட்டபெயர் ஏற்பட்டுவிடக்கூடாது, சமூகத்தில் குழப்பம் ஏஏபட்டுவிடக்கூடாது என்று பூசிமெழுகி ஒரு தீர்ப்பை வழங்குகிறார். ஆனாலும் என்ன..? ஜீவாவின் பழிவாங்கும் கனவு இனிதே நிறைவேறுகிறது, கத்தியின்றி ரத்தமின்றி !
இளையராஜாவின் இசை, ஜேபி தினேஷ்குமாரின் ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றன.