குபேரா

mysixer rating 5/5

373

a K. Vijay Anandh review

படம் ரொம்ப லென்த்தா இருக்கு…  தயவுசெய்து இந்த மாதிரி வார்த்தைகளை ட்ரெண்ட் ஆக்காதீர்கள்.

நாமெல்லாம் விடிய விடிய பாவைக்கூத்து பார்த்து வளர்ந்தவர்கள் . 1 3/4 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரம் படம் எடுப்பது,  என்பது கதை சொல்லில் வராது, அது கட்டிங் போடுவதில் வேண்டுமானால்  வரும்.

தாயின்  மடியில் படுத்துக் கொண்டு கதை கேட்டு பாருங்கள் 3 மணி நேரம் அல்ல 30 மணி நேரம் கூட கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.

குபேராவில் அப்படி ஒரு அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சேகர் கம்முல்லா.

தவறான வழியில் சம்பாதித்து எனக்கு வைர கிரீடம் கொடுப்பதை விட என் திருப்பதி மலை  அடிவாரத்தில் பிச்சை எடுக்கும் மனிதர்களும் எனது படைப்பே,  அவர்களுக்கு பசியாற சோறு போடு, வறுமை ஒழிய நல்ல ஒரு வாழ்க்கை கொடு – இப்படி ஒரு ஒரு வரி கதையை  திருப்பதி வெங்கடாஜலபதியே இயக்குனர் கனவில் வந்து சொல்லி இருக்கிறார் போலும்.  அப்படி இறைவன் கொடுத்த கருவை, அற்புதமான திரைக்கதை ஆக்கி இந்த படத்தை மிகவும் நிறைவாக இயக்கி இருக்கிறார் சேகர் கம்முல்லா.

கோடி கோடியாக பேங்கிலும், கட்டு கட்டாக லாக்கரிலும் பணத்தை குவித்து வைப்பதால் என்ன பயன்..? காகித குப்பையாக, அதுவும் குப்பை லாரியிலேயே அள்ளி வந்து,  வீட்டு வாசலில் வந்து 50 ஆயிரம் கோடி ரூபாயை கொட்டும் அந்த காட்சி அற்புதம்.

கடைசியில் உலக பணக்காரர்கள் வரிசையில் இருந்தாலும் உனது உயிரும் எனது உயிரும் ஒன்று தான் என்பது போல, கோடீஸ்வரனாக குப்பைமேட்டில் உயிரை விடும் காட்சி அதைவிட அற்புதம்.

இப்படி படம் முழுவதும் மிகவும் எளிமையான அதேசமயம் மனதை தொடும் காட்சி அமைப்புகளுடன் குபேரா மிகச் சிறப்பான ஒரு திரைப்படமாக வெளியாகி இருக்கிறது.

பல லட்சம் கோடிகள் வருமானம் தரும் இயற்கை வளத்தை அபகரிக்க அரசியல்வாதிகளுடன் டீல் பேசும் வில்லன். அவனுக்கு பினாமிகள் வேண்டும், அவர்கள் எதுவும் தெரியாத பிச்சைக்காரர்களாக இருப்பது சிறப்பு என்று நாடு முழுவதும் தேடி 5 பிச்சைக்காரர்களை தனது முறைகேடான பண பரிமாற்றத்திற்காக தேர்ந்தெடுக்க,  அவருக்கு மூளையாக செயல்படும் முன்னாள் சிபிஐ அதிகாரி, மாட்டிக்கொண்ட ஐந்து பிச்சைக்காரர்களில், கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு அவர்களிடம் இருந்து தப்பிக்கும் நாயகன், நடுவே மிகவும் ஏதேச்சையாக நாயகனுக்கு உதவி செய்யப் போய், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் அவனது ஓட்டத்தில் தானும் ஒருவராய் சிக்கிக் கொள்ளும் நாயகி.

இது இந்த படத்தின் திரைக்கதை.

படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் சொல்வது இதுதான், தனுஷிற்கு மறுபடியும் ஒரு தேசிய விருது இந்த படத்தின் மூலம் .

அழுக்கு உடையும்… வறண்ட கேசமும்… பேசுவதற்கு நாலு வார்த்தை எழுதுவதற்கு இரண்டு வார்த்தை மட்டுமே தெரிந்த பிச்சைக்காரனாக தனுஷ். அனாதையாக செத்துப் போகும் பிச்சைக்காரர்களை முறைப்படி தகனம் செய்து விட்டால் அடுத்த பிறவியிலாவது பிச்சைக்காரர்களாக பிறக்க மாட்டார்கள் என்கிற தனது குரு போன்ற ஒரு மூத்த பிச்சைக்காரர் கே பாக்யராஜ் சொல்லும் ஒரு அறிவுரையை தாரக மந்திரமாக நெஞ்சில் நிறுத்திக் கொள்கிறார். அது படத்தின் ஆரம்பக் காட்சி முதல் இறுதி காட்சி வரை எவ்வளவு கோர்வையாக பயணிக்கிறது என்பது படம் பார்க்கும் பொழுது நமக்கு கிடைக்கும் சிறப்பான அனுபவம்.

பிச்சைக்காரராக இருந்து பினாமியாகி நடை உடைகள் மாறினாலும், அதே பணிவான ஏதும் அறியாத குணாதிசயங்களை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார் தனுஷ். சிறுவயதில் அவரது வலது கை விரல்களை வில்லன் உடைத்து விட, அதை கடைசி வரை அச்சரம் பிசகாமல் காண்பித்து இருக்கும் உடல் மொழி அழகு. சாப்பிடுவதும்,  எந்த பொருள்களையும் எடுப்பதும்,  வில்லன்களை அடிப்பதும் கூட இடது கையால் தான்.

தனக்கு மட்டும் என்றால் கிடைக்கும் அஞ்சு பத்து கூட போதும், ஆனால் நாடு முழுவதும் இருக்கக்கூடிய பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை மாற்ற வேண்டுமானால் கோடி கோடியாய் வேண்டும் என்று அவர் முடிவெடுக்கும் தருணங்கள் உணர்ச்சி பூர்வமானவை.

எந்த இடத்திற்கு சென்றாலும் மிகவும் சரியாக நினைவில் வைத்துக் கொண்டு அதே இடத்திற்கு தேவைப்படும் நேரத்தில் செல்லும் புத்திசாதுர்யம், வித்தியாசமாக தனுஷின் கதாபாத்திரத்தை படைத்திருக்கிறார்கள் என்று ஆருடம் கூறியிருக்கிறது.

இன்னொரு தேசிய விருது உறுதி, தனுஷ்!

ராஷ்மிகா மந்தனா, இவரை மேடம் மேடம் என்று கதாநாயகர்கள் அழைக்கும் படம் நிச்சய வெற்றி பெறும் போல. கீதா கோவிந்தத்தில் விஜய் தேவரகொண்டா அவரை படம் முழுவதும் மேடம் மேடம் என்று அழைப்பார். இந்தப் படத்தில் தனுஷும் அவரை மேடம் மேடம் என்று இறுதிக்காட்சி வரை அழைப்பார், தனுஷ் அவரை மேடம் என்று அழைப்பதற்கு மிகவும் சரியான காரணங்கள் இந்த படத்தில் இருக்கின்றன.  நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா, உன் சாவு உனக்கு ஏன் சாவு எனக்கு என்று கூறும் இடங்கள் ஆகட்டும், நீ மட்டுமா பிச்சைக்கார நானும் தான் பிச்சைக்காரி என்று கூறும் இடமாகட்டும், இரண்டு மூன்று உடைகளுடன் படம் முழுவதும் வந்தாலும், மறுபடியும் ரசிகர்களை சொக்க வைத்து விடுகிறார்.

நாகார்ஜுனா, கிங் என்று அழைக்கப்படுவதற்கு முற்றிலும் பொருத்தமான ஒரு நடிகர். என்ன ஒரு மாஸ் நடிகர், ஆனால் தனது குடும்பத்திற்காக பொறியில் சிக்கிக் கொண்ட சிங்கமாக, வில்லன்கள் முன், எதுவும் செய்ய இயலாமல் நிற்கும் இடங்கள் அற்புதம். தனக்குப் பிறந்த குழந்தையை அதனை கொஞ்சம் வயதில் கொஞ்ச முடியாமல் போய்விடுமோ என்பதற்காக தான் சில விஷயங்களுக்கு ஒத்துக்கொள்கிறார் என்றாலும், அவரது குழந்தையை கொஞ்சுவதாக ஒரு காட்சி கூட வைக்க முடியாத அளவிற்கு இந்த மூன்று மணி நேர படம் விறுவிறுப்பாக செல்கிறது என்றால் மிகையல்ல.

வில்லன் ஜிம் சர்ப், மிரட்டி இருக்கிறார்.

பினாமிகளாக ஏன் பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுக்கிறார்கள், இன்று நாடு முழுவதும் அரசியல்வாதிகளுக்கும் முறைகேடாக சம்பாதித்து தொழிலதிபர் ஆனவர்களுக்கும் இன்று பினாமியாய் இருப்பவர்கள் பிச்சைக்காரர்களுக்கு சமம் என்பதை சொல்வதற்காகவா…?

தொழில்நுட்ப ரீதியாக தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை இந்த படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது, அவர் தனது ரிதத்தை மீண்டும் பிடித்து விட்டார் போலும் என்கிற அளவிற்கு இசை இனிமையாக இருக்கிறது.

நிகேஷ்  பொம்மியின் ஒளிப்பதிவு மற்றும் கார்த்திகா ஸ்ரீனிவாசின் எடிட்டிங் ஆகியவை படத்தை சோர்வு இல்லாமல் ரசிக்க வைத்திருக்கின்றன.

குபேரா, பொழுதுபோக்கை மட்டுமல்ல பல விஷயங்களை பொட்டில் அடைந்தது போல சொல்லி இருக்கிறது !