Freedom

mysixer rating 3.5/5

156

a K. Vijay Anandh review

இரண்டு மாதங்களுக்கு முன் இதே சசிகுமார் குடும்பத்தோடு இலங்கையிலிருந்து அகதியாக இராமேஸ்வரம் வந்து இறங்கினார்.

இந்த மாதம், அவரது மனைவி லிஜோமோல் ஜோஸ்  நிறைமாத கர்ப்பிணியாக ஏற்கனவே மண்டபம் அகதிகள் முகாமில் இருக்கும் நிலையில், அவருக்காக காத்திருக்கும் நிலையில், மாறனாக வந்து இறங்குகிறார் சசிகுமார்.

வந்த இரண்டொரு நாளில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மனித வெடிகுண்டு மூலம் கொலைசெய்யப்பட, தமிழ் நாடு முழுவதும் அகதிகள் முகாமில் இருக்கும் சந்தேகத்திற்குரிய ஈழந்தமிழர்கள் ஆண்களும் பெண்களுமாக சிறைப்பிடிக்கப்பட்டு வேலூர் கோட்டையில் விசாரணை ஆரம்பமாகிறது. அந்த விசாரணை தரும் ரணவேதனைகளுடன் குடும்பத்தை பிரிந்து அங்கே அடைபட்டுக்கிடக்கும் தமிழர்கள் தப்பித்து போக திட்டமிடுகிறார்கள், பாதி பேர் தப்பிக்கின்றார்கள் மீதிப்பேர் மாட்டிக்கொள்கிறார்கள். 90க்ளின் பிற்பகுதியில் நடைபெற்ற உண்மைச்சம்பவத்தை விறுவிறுப்பாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சத்யசிவா.

படம் பார்க்கும் போது, ஏற்கனவே சிங்களவர்கள் சிங்கள ராணுவம் ஆகியவற்றால் பெரும் கொடுமைகளை அனுபவித்து , இந்தியாவிற்கு அகதிகளாய் வந்த தமிழர்கள், தமிழ் நாடு காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தால் அதைவிட அதிகமாக கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

சுதந்திரத்திற்கு ஆசைப்படும் அகதிகள் ஒரு கட்டத்தில் சுரங்கம் தோண்டி தப்பிச்செல்கிறார்கள். அங்கு சமையல் பணி செய்கிறார்கள் தான், கொஞ்சம் விஷம் வைத்து அங்கிருக்கும் காவலர்களை கொல்ல முயற்சிக்கவில்லை, அறிவையும் உடல்வலிமையையும் அதைவிட அதிகமாக அவர்கள் அனுபவத்துக்கொண்டிருக்கும் வலியையும் ஆயுதமாக்கி, கூட்டாக உழைத்து தப்பிக்கும் காட்சிகள் அருமை.

குழந்தை வளர வளர , குழந்தையையும் தூக்கிக்கொண்டு, சக அகதிகள் குடும்பத்தாருடன் வேலூருக்கு வந்து, கணவரைப் பார்க்க மனு கொடுத்து ஏமாந்து போகும் லிஜோமோல் ஜோஸ்  கண்கலங்க வைக்கிறார். பிறந்த குழந்தையை 5 வருடங்கள் காத்திருந்து பார்க்கும் அப்பா, இந்த கஷ்டம் எதிரிக்கு கூட வரக்கூடாது.

தப்பித்து செல்லும் டப்பிங் கலைஞரும் பேச்சாளருமான குணாஜீ உள்ளிட்ட நான்கு அகதிகளை , சசிகுமார் அடித்து பிடித்து ஒப்படைப்பதும் , பின்பு அவர்கள் சசிகுமார் மீது கொலைவெறியுடன் பயணிப்பதும் , ஒரு கட்டத்தில் சசிகுமார் அனைவருமே தப்பிக்கத்தான் திட்டமிடுகிறார் என்பதையறிந்து ஒன்றாவதும் கதைக்குள் ஒரு கலங்க வைக்கும் கிளைக்கதை.

இது ஒரு சர்வதேசப்படமாக வெளிவந்திருக்கிறது என்பதை மறுக்க இயலாது, அதே நேரம் சர்வதேச தரத்தில் எடுக்கப்பட்டிருந்தால், 1000 கோடிகள் மிகவும் சாதரணமாக எட்டிப்பிடித்திருக்கும். நடிகர்கள் தேர்வு மற்றும் காட்சிகள் இன்னும் அதிக மெனக்கெட்டு சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.

அகதியாக இருபடங்களிலும் குறிப்பாக  அடுத்தடுத்து வெளிவந்திருக்கும் இரு படங்களிலும் இரு வேறுபட்ட உடல்மொழிகளை காட்டி நடித்திருக்கிறார் சசிகுமார். உடன் நடித்திருக்கும் மு.ரா, பாய்ஸ் மணிகண்டன், போஸ்வெங்கட், தீபா பாஸ்கர்  உள்ளிட்ட நடிகர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

சி உதயகுமாரின் கலை இயக்கம் குறிப்பிட்டுச்சொல்லவேண்டிய ஒன்று. வேலூர் கோட்டையில் விசாரணைக்கைதிகளின் அறைகள் மற்றும் சுரங்கம் என்று அதிக மெனக்கெட்டிருக்கிறார்.

என் எஸ் உதயகுமாரின் ஒளிப்பதிவு மற்றும் ஜிப்ரானின் இசை படத்தை உறுத்தல் இல்லாமல் கொண்டு போக உதவியிருக்கிறது.

உள்ளூர் அதாவது அவனுக்கு சொந்தமான மண் முதல் உலகம் முழுவதிலும் இப்படி தமிழன்,  வஞ்சிக்கப்பட்டும் அடிபட்டுக்கொண்டும் கிடப்பதை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. யாரோ செய்கிற தவறுகள் அது அன்றைய பிரதமரை கொன்றவர்களாக இருந்தாலும் சரி,  தமிழ்நிலத்தை ஆள தகுதியில்லாதவர்களுக்கு ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் இன்றைய சமகால தமிழ்ர்களாக  இருந்தாலும் சரி, பாதிக்கப்படுவது என்னவோ ஒட்டுமொத்த தமிழர்களும் தான். மூத்தகுடி விழித்துக்கொள்ளுமா, அது தன் சந்ததியருக்கு பாதுகாப்பான தமிழ் நிலத்தை விட்டுச்செல்லுமா ?

என்னதான் சுவராஸ்யமாக இருந்தாலும் சட்டவிரோதமாக குடியுரிமை சான்றுகள் பெற்று நிரந்தரமாக குடியேறிவிடும் டூரிஸ்ட் பேமிலையை விட , இந்திய  மற்றும் தமிழக மாநில அரசின்  அடக்குமுறைகளை எதிர்த்து வேறு நாடுகளுக்கு தப்பிச்செல்லும் இந்த பிரீடம் விரும்பும் அகதிகளை பற்றிய படம் ஜெயிக்குமா..?   நேர்மையாக  இந்தக்கதையை சொல்லியிருக்கிறார் இயக்குநர் சத்ய சிவா.

நேர்மைக்கு மதிப்பிருந்தால் , பிரீடம்  ஜெயிக்கும் !