a K.Vijay Anandh review
ஆள்பவனை விட படைத்தவனை ஏன் பெரியவன் என்கிறோம் ? ஆள்பவனின் முட்டாள்த்தனமான நிர்வாகத்தால் , அவன் ஆளுகைக்கு உட்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டால், அவனை எதிரத்து பேசியோ , பயமுறுத்தியோ பணிய வைக்க முடியாது, விதியே என்று அனைத்து கொடுமைகளையும் அனுபவிக்க வேண்டியதுதான்.
ஆனால் , படைத்தவன் அப்படியல்ல , அவன் அவன் படைத்த மாந்தர்களுக்கு தனது சடடையை பிடித்து கேட்கும் சுதந்திரத்தை அளிக்கின்றான். கர்மா படி மாந்தர்களின் தவறால் தான் அவர்கள் துன்பப்படுகிறார்களால் என்றாலும் , அவர்கள் கோரிக்கைக்கு மனமிரங்கி , முடிந்தளவு அவர்களை கர்மாவில் இருந்து விடுவித்து, அவர்களுக்கு நல்லது நடக்க ஆவண செய்கிறான்.
அதனால் தான் காலம் காலமாக படைத்தவர்களுக்கு பெரிய செல்வாக்கும் அவர்களின் சொல்லுக்கு மதிப்பும் இருந்து வருகிறது .
கவிதைகளை படைத்தாலும் , காவியங்களை படைத்தாலும் , சிறு, குறு, தொடர் கதைகள் படைத்தாலும் அவன் படைப்பவனே , படைப்பாளியே/
அப்படி ஒரு படைப்பாளி தனது மையினால் படைத்த கதை மாந்தர்கள் , அவர்களின் துயருக்கு அவனே கரணம் என்று அவனை துரத்த , நாலு நல்ல விஷயங்களை சொன்னால் என்ன தப்பு ? என்று இன்னொரு படைப்பாளி அறிவுரை கூற , அனைத்தும் சுபமாக முடிகிறது.
ஒரு வித்தியாசமான கதை மற்றும் திரைக்கதை அமைத்த விதத்தில் ஏ ஆர் ராகவேந்திரா மற்றும் பி எம் ஸ்ரீனிவாசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்/
எழுத்தாளராக நாகராஜ் கண்ணன் சிறப்பாக நடித்திருக்கிறார், பல கோணங்களில் அவர் நடிகர் ஜெயராமின் ஒன்றுவிட்ட அல்ல ஒன்றும் விடாத சித்தப்பாவின் மகன் போல இருக்கிறார்.
அவ்வப்பொழுது கதாபாத்திரங்களுடன் போராடும் தன் கணவனை நன்கு புரிந்து கொண்ட மனைவியாக டாகடர் காயத்ரி மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.
எழுத்தாளரின் கதை மாந்தர்களாக வரும் கதாபாத்திரங்கள் சாய் தீனா , ஐஸ்வர்யா ரகுபதி மற்றும் மிருதுளா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இன்னோரு படைப்பாளியாக , மூத்த சிற்ப கலைஞராக நடித்திருக்கும் மு.ரா சிறப்பாக நடித்திருக்கிறார். வறுமையிலும் நேர்மை , உயர்ந்த நோக்கம் என்கிற விதத்தில் செல்வியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ரகுபதியும் , டாக்டர் கனவுடன் சிறகை விரிக்கும் ராஜியாக நடித்திருக்கும் மிருதுளாவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.
பதிப்பக எடிட்டராக வரும் டெல்லி கணேஷ் பற்றி சொல்லவா வேண்டும் ?
தான் படைத்த கதை மாந்தர்களுடன் போராடிக்கொண்டே யாரைப்பார்த்தாலும் அவர் தான் அவரா என்று எழுத்தாளர் குழம்பிப்போகும் இடம் அருமை , அந்த கேஸ் சிலிண்டர் பையனை பார்த்து பயப்படும் இடம்.
ஒளிப்பதிவாளர் சுந்தர் கிஷன் கிருஷ்ணன் , எடிட்டர் நாகூரான் ராமசந்திரன் சண்டைப்பயிற்சியாளர் எஸ் ஆர் ஹரி முருகன் ஆகியோர் பெரிதும் அங்கீகரிக்கப்பட வேண்டியவர்கள். பாடல்களுக்கு இடமே இல்லாத படத்தில் நான்கு பாடல்களை புகுத்தியும் தனது பின்னணி இசையாலும் மெருகு சேர்த்த அஞ்சனா ராஜகோபாலனும் பாராட்டுக்குரியவர்.
ஏ ஆர் ராகவேந்திரா இயக்கியிருக்கும் இந்த மாயக்கூத்து , குறைந்த பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம். ஆனால் , கதையை யோசித்த விதத்தில் , ஒட்டுமொத்த ஷங்கர் படங்களின் பிரமாண்டத்தை மிஞ்சி நிற்கிறார்.
மாயக்கூத்து, தமிழ் சினிமாவை பெருமை படுத்தும் ! அப்படியானால் மாயக்கூத்தை ?? ரசிகர்கள் பெருமை படுத்துவார்கள்